Advertisement

செம்பரம்பாக்கம் ஏரி நீரை கல் குவாரியில் தேக்க திட்டம்

குன்றத்துார்: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை, சிக்கராயபுரம் கல் குவாரியில் தேங்கி வைக்க, அதிகாரிகள் முடிவு செய்து, அதற்கான ஆய்வுகளை மேற்கொள்கின்றனர்.
சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளுள் செம்பரம்பாக்கம் ஏரியும் ஒன்று. இந்த ஏரி, 3,645 மில்லியன் கன அடி நீர் கொள்ளவும், 24 அடி உயர, நீர் மட்டமும் கொண்டது.ஆனால், பாதுகாப்பு கருதி, நீர் மட்ட உயரம், 21 அடியை தொட்டதும், ஏரி நீர் திறந்து விடப்படும். இவ்வாறு திறந்து விடப்படும் நீர், அடையாற்று கால்வாய் மூலம் கடலில் வீணாக கலக்கிறது.
இந்நிலையில், சென்னை நகரின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, குன்றத்துார் அருகே சிக்க ராயபுரத்தில் உள்ள, 23 கல்குவாரிகளில் இருந்து நீர் எடுக்கப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரி அருகே உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில், இந்த நீரை சுத்திகரித்து, சென்னை மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, 3 கி.மீ.,யில் தான், சிக்கராயபுரம் கல் குவாரிகள் உள்ளன. எனவே, இந்த கல் குவாரிகளை, நீர் தேக்க பகுதியாக மாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
வரவிருக்கும் மாதங்களில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை, சிக்கராயபுரம் கல் குவாரிகளில் தேங்கி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கான ஆய்வை அதிகாரிகள் அண்மையில் மேற்கொண்டனர், இதில், தமிழக வருவாய் நிர்வாக ஆணையர், சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர், அரசு நிலங்கள் வழியாக சிக்கராயபுரம் கல் குவாரியை சென்றடையும் வழித்தடங்களை ஆய்வு செய்துள்ளனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • srisubram - Chrompet,இந்தியா

    சீக்கிரமா செய்து முடியுங்கள் , வடகிழக்கு பருவ மழை வந்துவிட்டது .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement