Advertisement

ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி திறப்பு எப்போது? 10 மாதமாக தயார் நிலையில் இருக்கிறது

கும்மிடிப்பூண்டி:தமிழக - -- ஆந்திர எல்லையில், சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், 109.46 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியின் கட்டுமான பணிகள் முடிந்து, 10 மாதங்களாகியும், பயன்பாட்டிற்கு வராமல் இருப்பது ஏன் என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தமிழகத்துடன் வட மாநிலங்களை இணைக்கும், சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் அதி நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூர் ஏழு கண் பாலம் அருகே, 109.46 கோடி ரூபாயில், கட்டப்பட்டு உள்ளது.எடை மேடைஅங்கு, வாகன நெரிசலை தவிர்க்கும் நோக்கில், தமிழகத்திற்குள் வரும் வாகனங்களுக்காக, 10 வழித்தடங்களும், ஆந்திரா மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களுக்காக ஆறு வழித்தடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. சரக்கு வாகனங்களுக்காக, எடை மேடைகளும் உள்ளன.முற்றிலும் இணைய வசதியுடன், கண்காணிப்பு கேமரா வளையத்திற்குள் சோதனை சாவடி இயங்கஉள்ளது. சோதனைச்சாவடியில், போக்குவரத்து துறையினருக்கு என, தனி கட்டடமும், வருவாய் துறை, போலீஸ், உணவு பொருள் வழங்கல் துறை, கலால், வனத்துறை ஆகிய துறைகளுக்கான அலுவலகங்களை உடைய தனி கட்டடமும் நிறுவப்பட்டுள்ளது.வளாகத்தில் தீயணைப்பு நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.
பிடிபடும் வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி, பறிமுதல் செய்யப்படும் சரக்குகளை பாதுகாக்கும் கிடங்குகள், உணவு விடுதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு தனித்தனி ஓய்வு அறைகள், குளியல் மற்றும் கழிப்பறை வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தாமதம்ஒரே இடத்தில் அனைத்து துறைகளும் இயங்குவதால், வழி நெடுக பல இடங்களில் வாகனங்களை நிறுத்தி, அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள் ஆய்வுகள் மேற்கொள்வது முற்றிலும் தவிர்க்கப்படும்.
மேலும், சோதனைச்சாவடியில் கால தாமதம் ஏற்படாமல் இருக்க, அனைத்து துறைகளையும் உள்ளடங்கிய பிரத்யேக மென்பொருள் மூலம் முற்றிலும் கணினி வசதியுடன் செயல்படும்.மேற்கண்ட ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி பணிகள் முடிந்து, 10 மாதங்களாகியும், பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. சரக்கு போக்குவரத்தை எளிதாக்கி, அரசுக்கு வருவாய் ஈட்டும் நோக்கில் அமைக்கப்பட்ட, அதிநவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி அமைத்தும், அதை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் தாமதப்படுத்தப்பட்டு வருகிறது.
மென்பொருளை காரணம் காட்டி, 10 மாதங்களாக தாமதித்து வந்த நிலையில், பஞ்செட்டியில் நடந்த, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவின் போது, முதல்வர் திறக்காதது ஏன் என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

கட்டுமான பணிகள் முடிந்ததை தொடர்ந்து, அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய பிரத்யேக மென்பொருள் நிறுவும் பணிகளை, பொறியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இருப்பினும், பஞ்செட்டியில் நடந்த முதல்வர் விழாவின் போது திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், பணி முடியவில்லை. விரைவில் திறப்பு விழா நடத்தப்படும்.பொதுப்பணித் துறை அலுவலர்
கட்டுமான பணிகளை மேற்கொண்டு வரும் பொதுப்பணித் துறையினர், ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியை, இதுவரை எங்களிடம் ஒப்படைக்கவில்லை.போக்குவரத்து துறை அலுவலர்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement