Advertisement

ஒருங்கிணைப்பாளர்களுக்கே அனைத்து அதிகாரங்கள்

அ.தி.மு.க.,வில், பொதுச்செயலருக்கு வழங்கப் பட்ட அதிகாரம் அனைத்தையும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்க, அ.தி.மு.க., சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.,வில் பொதுச்செயலருக்கு பதில், கட்சியை வழிநடத்த, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், இரண்டு துணை ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க., விதிகளின் படி, பொதுச்செயலருக்கு அளிக்கப்பட்டிருந்த, அனைத்து பொறுப்புகளும், அதிகாரங்களும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கப் பட்டுள்ளன.

இதற்காக, கட்சி சட்ட திட்ட விதிகளில், திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரால், 100 பேரை, பொதுக்குழு உறுப்பினர்களாக நியமிக்க முடியும்.

பொதுக்குழு கூட்டத்தை, ஆண்டுக்கு ஒரு முறை அல்லது ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் அவசியம் என, கருதும்போது கூட்டலாம். பொதுச்செயலர் பதவிக்கு, இனி யாரும் தேர்வு செய்யப்பட மாட்டார்கள். கட்சியின் நிர்வாக பொறுப்புகள் அனைத்தையும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் நிர்வகிப்பர்.

ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரால் நியமிக்கப்படும் செயற்குழு உறுப்பினர்கள், தலைமை கழக செயலர்கள் எல்லாரும், ஒருங்கிணைப்பாளர்களின் பதவிக்காலம் வரை நீடிப்பர்.கட்சியின் சார்பில் பெறப்படும், எல்லா நிதியையும், வங்கியில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் அல்லது பொருளாளர் பெயரில் கட்டுதல் வேண்டும்.

செலவினங்களுக்காக, வங்கியிலிருந்து பணம் எடுக்கும் போது, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அங்கீகாரம் பெற்று, பொருளாளர் காசோலையில் கையெழுத்திட்டு எடுக்க அதிகாரம் உண்டு.ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், அவைத் தலைவர், பொருளாளர், பொதுக்குழுவால் தேர்வு செய்யப்படும், இரண்டு உறுப்பினர் கள் அடங்கிய சொத்து பாதுகாப்பு குழு அமைக்கப் படும்.

கட்சிக்கு வாங்கப்படும் சொத்துகளை, அ.தி.மு.க., பெயரில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் வாங்குவதாக, பத்திரங்களில் குறிப்பிட வேண்டும்.கட்சி விதிகளை தளர்த்தவும், விலக்கு அளிக்கவும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு, முழு அதிகாரம் உண்டு.இந்த திருத்தங்களுக்கு, பொதுகுழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சசி பதவி ரத்து தீர்மானம் பொதுக்குழுவில் ஆரவாரம்



சசிகலா பதவி நீக்கம் தொடர்பான தீர்மானத்தை வாசித்தபோது, பொதுக்குழுவில் பலத்த கைத்தட்டல் எழுந்துள்ளது. சிலர் விசிலடித்து, ஆரவாரம் செய்துள்ளனர்.ஜெயலலிதா மறைவிற்கு பின், அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவியை கைப்பற்றியதுடன், முதல்வர் நாற்காலியை பிடிக்கவும், சசிகலா முயற்சி செய்தார்.

அவர் சிறை சென்ற பின்னும், அவரது குடும்பம், ஆதிக்கம் செலுத்த விரும்பியது. அதற்கு
எதிர்ப்பு கிளம்பியதால், கட்சி பிளவுபட்டது. இந்நிலையில், முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் முயற்சியால், பொதுச்செயலர் பதவியில் இருந்து, சசிகலா நீக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் மட்டுமின்றி, அவரால் நியமிக்கப்பட்டவர்களின் பதவிகளும் செல்லாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான தீர்மானத்தை, அ.தி.மு.க., அமைப்புச் செயலர், வைத்திலிங்கம் எம்.பி., நேற்றைய பொதுக்குழுவில் வாசித்தார். அதை வரவேற்கும் வகையில், பலத்த கைத்தட்டல் எழுந்தது. சிலர் விசில் அடித்து, தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். கைத்தட்டல் அடங்க, சில வினாடிகள் ஆனது. அந்தளவுக்கு, கட்சியினரின் ஏகோபித்த ஆதரவுடன், சசிகலா நீக்கப்பட்டு உள்ளார்.

'இதுபோன்ற தீர்மானம் வந்தால், பொதுக்குழுவில் உள்ள, 'ஸ்லீப்பர் செல்' எனப்படும், எங்களது மறைமுகஆதரவாளர்கள், பகிரங்க எதிர்ப்பு தெரிவிப்பர்' என, தினகரன் கூறி வந்தார்; அது, பொய் என்பது, நேற்றைய பொதுக்குழுவில் நிரூபணமாகி உள்ளது.

98 சதவீதம் வருகை



அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்திற்கு, 98 சதவீதம் உறுப்பினர்கள் வந்துள்ளனர்.சசிகலா குடும்பத்தை, கட்சியிலிருந்து நீக்குவதற்காக, நேற்று, அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர். அனைத்து மாவட்டங்களில் இருந்தும், 'ஏசி' சொகுசு பஸ்களில், பொதுக்குழு உறுப்பினர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

கூட்டத்தில், முதல்வர் பழனிசாமி பேசுகையில், ''பொதுக்குழு உறுப்பினர்களில், 98 சதவீதம் பேர் வந்துள்ளனர். அதாவது, 2,130 பேர், இங்கே உள்ளனர்,'' என்றார். பொதுக்குழு உறுப்பினர்கள், 98 சதவீதம் பேர், கூட்டத்தில் பங்கேற்றது, தினகரன் தரப்பில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முதல் முறையாக இரட்டை தலைமை



எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பின், அ.தி.மு.க., வில், ஒற்றை தலைமை முடிவுக்கு வந்துள்ளது.
அ.தி.மு.க.,வை துவக்கிய, எம்.ஜி.ஆர்., கட்சியின் தலைவராக இருந்தார். அப்போது, அனைத்து அதிகாரங்களும், தலைவர் பதவிக்கு தரப்பட்டு இருந்தது. அவரது மறைவுக்கு பின், பொது செயலராக, ஜெயலலிதா பதவியேற்றார். எம்.ஜி.ஆர்., வகித்த பதவி என்பதால், தலைவர் பதவி, காலியாக வைக்கப்பட்டது.

அதே நேரத்தில், தலைவர் பதவிக்கான அதிகாரங்கள் அனைத்தும், பொதுச்செயலருக்கு மாற்றப்பட்டது. அதற்கான திருத்தங்கள், கட்சி விதிகளில் செய்யப்பட்டன. ஜெயலலிதா மறைவுக்கு பின், அவர் வகித்த பதவியில், தற்காலிகமாக, சசிகலா நியமிக்கப்பட்டார்.

அவரது நியமனத்தை ரத்து செய்ததுடன், 'பொது செயலர் பதவி யில், இனி யாரும் நியமிக்கப்பட மாட்டார்கள்' என, நேற்றைய பொதுக்குழுவில் முடிவுஎடுக்கப்பட்டுள்ளது.பொதுச்செயலருக்கு பதிலாக, கட்சியை வழிநடத்த, ஒருங்கிணைப்பாளர் பதவி, அ.தி.மு.க., வரலாற்றில் முதன்முறையாக உருவாக்கப்பட்டு உள்ளது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என, இரட்டை தலைமை, முழு அதிகாரங்களுடன், அ.தி.மு.க., வில், முதன்முறையாக பொறுப்பேற்றுள்ளது.

பல்லாயிரக்கணக்கில் போலீஸ் பாதுகாப்பு



* காலை, 10:35 மணிக்கு, அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் துவங்கியது. ஆனால், எமகண்டம் துவங்குவதற்கு முன், காலை, 9:00 மணிக்குள், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் வந்து விட்டனர்
* செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பஸ்களில் அழைத்து வரபட்டனர்.அந்த பஸ்களால், திருமண மண்டபம், மினி பேருந்து நிலையமாக காட்சி அளித்தது
* மன்னார்குடி கும்பலால் பிரச்னை ஏற்படாமல் தடுக்க, ஆயிரக்கணக்கான போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
* மண்டபத்தை ஒட்டி, தற்காலிக குடில் அமைத்து, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களின் அழைப்பு கடிதம் சரிபார்க்க பட்டது. அதன்பின், அவர்களுக்கு, 'பேட்ஜ்' அணிவித்து, மண்டபத்திற்குள் செல்ல அனுமதித்தனர்

* மண்டபத்திற்கு வெளியே, செய்தி சேகரிப்பதற்காக, ஏராளமான பத்திரிகை மற்றும் 'டிவி' குழுவினர் காத்திருந்தனர்.

ஜெயா, 'டிவி' நேரடி ஒளிபரப்பு வாகனத்திற்கு, அனுமதி மறுக்கப்பட்டு, திருப்பி அனுப்பபட்டது

* பொதுக்குழு கூட்ட அரங்கிற்குள், பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

* முக்கிய நிர்வாகிகள் அனைவரும் முன் கூட்டியே வந்த நிலையில், நட்சத்திர பேச்சாளர் நிர்மலா பெரிய சாமி, கூட்டம் துவங்கும் நேரத்தில், அங்கு வந்தார். காரில் இருந்து இறங்கி, ஓட்டமும் நடையுமாக, மண்டபத்திற்குள் நுழைந்தார்.

* காலை, 7:00 மணியில் இருந்தே, உறுப்பினர்கள் வரத் துவங்கினர். காலை, 8:30 மணிக்கு, அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். அனைவரிடமும், வருகைப் பதிவேட்டில் கையெழுத்து பெறப்பட்டது
* சாலையின் இரு புறங்களிலும், 'டிஜிட்டல் பேனர்'கள் வைக்கப்பட்டிருந்தன. அனைத்து பேனர்களிலும், முதல்வர் மற்றும் துணை முதல்வர் படம் இடம் பெற்றிருந்தது

* தீர்மான புத்தகம், முன்வரிசையில் அமர்ந்திருந்தவர்களுக்கு மட்டும் வழங்க பட்டது. மற்றவர்கள், கட்சி தலைமை அலுவலகத்தில் பெறலாம் என, அறிவிக்கப்பட்டது

* தீர்மானங்களை நிறைவேற்றிய போது, மழை பெய்தது. அங்கிருந்த தொண்டர்கள், 'சசிகலாவை நீக்கியதும், மழை பெய்கிறது' என்றனர்

* சென்னை, வானகரம் பகுதியில், நேற்று காலை மற்றும் மதியம், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அசைவம் இல்லாததால், 'அப்செட்'



அ.தி.மு.க., பொதுக்குழு என்றாலே, அங்கு பரிமாறப்படும் அசைவ உணவு வகைகள் பிரசித்தம். ஆனால், இம்முறை சைவ உணவு மட்டுமே வழங்கப்பட்டதால், பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அ.தி.மு.க., பொதுக்குழு கூடினால், எம்.ஜி.ஆர்., காலத்திலிருந்து, அசைவ உணவு வகைகள் அதிகம் பரிமாறப்படும். முதல் பந்தியில் உள்ளவர்களுக்கு, எந்த வகையான உணவு வகைகள் வழங்கப்பட்டதோ, அவை, கடைசி பந்தியில் அமர்பவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதில், எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ., உறுதியாக இருந்தனர்.

ஆனால், நேற்று நடந்த பொதுக்குழுவில், சைவ உணவு மட்டும் பரிமாறப்பட்டது. காலை உணவாக, இட்லி, பொங்கல், வடை, மூன்று வகை சட்னி, இனிப்பு வழங்கப்பட்டது. மதியம், வெஜ் பிரியாணி, சாதம், சாம்பார், ரசம், மோர், தயிர், வடை, பால் பாயாசம், அவியல், கேரட், பீன்ஸ் பொரியல், கிழங்கு வறுவல், அப்பளம், ஜிலேபி, ஐஸ் கிரீம், பாதாம் பால், வாழைப்பழம் போன்றவை வழங்கப்பட்டன.

எனினும், அசைவ உணவு வழங்கப்படாததால், அசைவ பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 'இம்முறை, செவ்வாய் கிழமை எனக்கூறி, அசைவ உணவை தவிர்த்து விட்டனர்' என, நிர்வாகிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

-நமது நிருபர் குழு-

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (5)

  • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

    இல்லாமல் போகப்போகிற கட்சிக்கு இத்தனை மாற்றங்களா? கூமுட்டைகளா?

  • Selvam Palanisamy - Thiruthangal,இந்தியா

    Selvam Palanisamy என்னென்ன திருத்தம் செய்யப்படப் போகிறது என்பதை ஒரு சங்கம் அல்லது குழுமம் அதனை அச்சிட்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் பிரிவு 26(3)ன்படி 21 நாட்களுக்கு முன் உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும். இல்லையெனில் அவை செல்லாது. இதன்படி சமீபத்தில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    ஒருங்கிணைப்பாளர் என்று கெஜ்ரி போல குளறுபடிகள் செய்யாமல் இருக்கவேண்டும்...

  • rama - johor,மலேஷியா

    அம்மா ஆட்சி ஆளால அம்மாக்கு எதிராகதான் எல்லாம் செய்வோம் OPS&EPS ஆட்சி

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement