Advertisement

மலேரியாவை தொடர்ந்து துப்புரவுக்கும் மாநகராட்சி 'டெண்டர்!' மத்திய அரசு வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மூடுவிழா

மலேரியா பணியாளர் நியமனத்தை தொடர்ந்து, துப்புரவு பணியாளர் நியமனத்திற்கும்,மாநகராட்சி தனியார் ஒப்பந்த நடைமுறையை அமல்படுத்துவதால், மத்திய அரசின் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்திற்கு, மாநகராட்சி, நிரந்தரமாக மூடுவிழா நடத்தி உள்ளது.
சென்னை மாநகராட்சியில், தனியார் ஒப்பந்த நடைமுறையில் துப்புரவு, மலேரியா உள்ளிட்ட தினக்கூலி பணியாளர்களை நியமனம் செய்ததில், 25 ஆண்டுகளுக்கு முன், 'மாஸ்டர் ரோல்' எனப்படும், மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இது, மாநகராட்சி வரலாற்றில் மிக முக்கிய மோசடியாக, ஊழியர்கள் மத்தியில் இன்றும் பேசப்படுகிறது.மெகா மோசடிகடந்த, 2011ல், தனியார் ஒப்பந்த நடைமுறையில், தினக்கூலி பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், 100 பணியாளர்களை வழங்குவதாக, ஒப்பந்தத்தில் தெரிவித்த நிறுவனங்கள், 50 பணியாளர்களை மட்டும் நியமித்தன.அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்களை கைக்குள் போட்டு, 50 ஊழியர்களின் சம்பளத்தை, முறைகேடாக கையெழுத்து போட்டு, மாநகராட்சியிடம் இருந்து ஒப்பந்த நிறுவனங்கள் பெற்று வந்தன.
இந்த மெகா மோசடியில், கவுன்சிலர்கள், அதிகாரிகள், தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் என, அனைத்து தரப்பினரும் கொழித்தனர்.இது குறித்து தொடர்ந்து புகார் எழுந்ததும், தனியார் ஒப்பந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, மத்திய அரசின் ஸ்வர்ண ஜெயந்தி நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் பதிவு செய்த, வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு, இந்த பணி ஒதுக்கப்பட்டது.இவர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் படி, 295 ரூபாய் என்ற தினக்கூலியை, வங்கி கணக்கில் மாநகராட்சியே செலுத்தி வந்தது.
மகளிர் குழுக்கள் மூலமாகவும், சம்பளம் வழங்கப்பட்டது. ஸ்வர்ண ஜெயந்தி வேலைவாய்ப்பு திட்டத்தை, மத்திய அரசு சிறிது மாற்றம் செய்து, தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டமாக செயல்படுத்தியது.இந்த திட்டத்தின் கீழ், துப்புரவு, மலேரியா பணிகளுக்கு, மாநகராட்சி ஆட்களை நியமித்தது. இந்நிலையில், ஆறு மாதங்களாக, மத்திய அரசின் வேலைவாய்ப்பு திட்டத்தை கைவிட்டு, மீண்டும் பழையபடி, தனியார் ஒப்பந்த நடைமுறையை மாநகராட்சி கையில் எடுத்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதை பற்றி மாநகராட்சி சிறிதும் கவலைப்படவில்லை.
ரூ.4 கோடிமாநகராட்சி மலேரியா பணிக்கு, 1,714 தினக்கூலி பணியாளர்களை நியமித்துள்ளது. இந்த பணிக்கு, தனியார் ஒப்பந்தம் மூலம் ஆட்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதுவும் ஒரே நிறுவனத்திற்கு இந்த பணி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.இந்த பரபரப்புக்கு இடையே, தற்போது துப்புரவு பணிக்கும், சென்னை மாநகராட்சி தனியார் ஒப்பந்த நடைமுறையை அமல்படுத்தி உள்ளது.
ராயபுரம் மண்டலத்தில், 49 முதல், 63 வார்டுகளுக்கு, துப்புரவு பணி செய்ய, 690 ஊழியர்களை, ஆறு மாத காலத்திற்கு, ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க, மாநகராட்சி டெண்டர் அறிவித்துள்ளது. இதற்கு, நான்கு கோடி ரூபாயை, மாநகராட்சி செலவழிக்க உள்ளது.மற்ற மண்டலங்களிலும், துப்புரவு பணிக்கு இதுபோன்று தனியார் ஒப்பந்த நடைமுறையில், மாநகராட்சி ஆட்களை தேர்வு செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாநகராட்சியில், மத்திய அரசின் வேலைவாய்ப்பு திட்டங்கள் அடியோடு முடக்கப்பட்டுள்ளன. துப்புரவு பணியாளர்களும், தற்போது தனியார் ஒப்பந்த அடிப்படையில் தான் பணியமர்த்தப்பட்டுள்ளனர். துப்புரவு பணிகள் முழுமையாக, தனியார்வசம் ஒப்படைக்கப்பட இருப்பதால், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக, அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர். மாநகராட்சியின் இந்த நடவடிக்கைகளை கண்டித்து, பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.துப்புரவு ஊழியர்கள்
சென்னை மாநகராட்சியில், தற்போது சம்பளம் கொடுக்க பணம் கிடையாது. மத்திய அரசின் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஆட்களை நியமித்தால், மாநகராட்சி, மாதாந்திரம் சம்பளம் தர வேண்டும். இதே தனியார் ஒப்பந்த நடைமுறை என்றால், அந்த நிறுவனம் ஊழியர்களுக்கு, தன் முதலீடு மூலம், சம்பளம் வழங்கும். சில மாதங்கள் கழித்து மாநகராட்சி, நிறுவனத்திற்கு பணம் தரும். இதனால், சம்பள பிரச்னை வராது. நிதி பிரச்னையை சமாளிக்கவே, தனியார் ஒப்பந்த நடைமுறையை மாநகராட்சி பின்பற்றுகிறது.மாநகராட்சி உயரதிகாரி- நமது நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement