Advertisement

திருவாடானை தாலுகாவில் தடுப்பணைகள் சேதம்: மழை துவங்கும் முன் சீரமைக்க கோரிக்கை

திருவாடானை:திருவாடானை தாலுகாவில் உள்ள ஆறுகளில் கட்டப்பட்ட சிறிய அணைக்கட்டுகள் சேதமடைந்துவிட்டதால் விவசாயம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக திகழ்வது திருவாடானை தாலுகா. 43 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் பருவமழை தக்க நேரத்தில் பெய்ய தவறுவதால் போதிய விளைச்சல் இல்லாமல் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இத் தாலுகாவில் குஞ்சங்குளம், சிறுகம்பையூர், ஆண்டாவூரணி போன்ற கிராமங்கள் வழியாக ஆறுகள் செல்கிறது. பெரும் மழை பெய்யும் போது இந்த ஆறுகள் வழியாக செல்லும் நீர், தடுப்பணை இல்லாததால் வீணாக கடலில் கலந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்பு இக் கிராமங்கள் வழியாக செல்லும் ஆற்றின் நடுவில் பல இடங்களில் சிறிய அணைக்கட்டுகள் கட்டப்பட்டன. தற்போது இந்த அணைக்கட்டுகள் சேதமடைந்துவிட்டது. இதனால் தண்ணீர் தேங்கி நிற்க வாய்ப்பில்லாமல் மீண்டும் வீணாக கடலில் கலக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து குஞ்சங்குளம் விவசாயிகள் கூறியதாவது: இத் தாலுகாவில் முக்கிய தொழிலாக இருப்பது விவசாயம். பல ஆயிரம் விவசாயிகள் இதை நம்பி வாழ்க்கை நடத்தி வருகின்றனர். ஒரு ஆண்டு விளைச்சல் பாதிக்கப்பட்டாலும் அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியதாகி விடும். கடும் வறட்சி ஏற்படும் காலங்களில் பிழைப்புக்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு செல்வது வழக்கம். கடந்தாண்டு அங்கும் வறட்சி ஏற்பட்டதால் விவசாய கூலிகள் வாழ்க்கை நடத்த முடியாமல் கட்டட வேலைக்கும், 100 நாள் வேலைக்கும் சென்றனர்.
விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக இருப்பது மழை நீர். கிராமங்கள் வழியாக செல்லும் ஆறுகளில் கட்டப்பட்ட அணைகட்டுகள் சேதமடைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அணைக்கட்டுகளை சரி செய்ய வேண்டும் என்று பல முறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த அணைக்கட்டுகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் பட்சத்தில் நிலத்தடி நீர் உயரும். விவசாயம் பாதிக்கப்படும் போது வயல்களுக்கு நீர் பாய்ச்சி கொள்ளலாம். நிலத்தடி நீர் மட்டம் உயருவதால் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும். ஆகவே மழை காலம் துவங்கும் முன்பு அணைக்கட்டுகளை சரி செய்ய சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement