Advertisement

டீ கடை பெஞ்ச்

'குடி'மகன்களிடம் அடி வாங்கி ஓடிய போலீசார்!


''மத்திய அமைச்சர் மேல, கேரளா அரசியல்வாதிகளும், ரயில் பயணியரும் கோவத்துல இருக்காவ வே...'' என, முதல் தகவலை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''எதுக்குங்க...'' என கேட்டார்
அந்தோணிசாமி.''நெல்லை, மேலப்பாளையம் துவங்கி, கன்னியாகுமரி வரை இருக்கிற ரயில் நிலையங்கள், திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்துல இருக்கு... இதை, மதுரை கோட்டத்துல இணைக்க, முயற்சிகள் நடக்கு வே...
''அதே மாதிரி, திருவனந்தபுரம்- - டில்லி ராஜதானி விரைவு ரயிலை, கன்னியாகுமரி வரை நீட்டிக்கவும் போறாவ...
''இதுக்கெல்லாம், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தான் காரணம்னு, கேரளா அரசியல்வாதிகளும், பயணியரும் நினைச்சு, அவருக்கு எதிரான செய்திகளை அங்க பரப்பிட்டு இருக்காவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.
''வீடு தேடி வந்தவங்களை, பார்க்க முடியாதுன்னு திருப்பி அனுப்பிட்டாரு பா...'' என, அடுத்த மேட்டருக்கு வந்தார் அன்வர்பாய்.
''யாரை சொல்றீர் ஓய்...'' என கேட்டார் குப்பண்ணா.
''காங்கிரசைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் பிரபு, உடம்பு சரியில்லாம, சென்னை போட் கிளப் வீட்டுல தங்கி, சிகிச்சை எடுத்துட்டு இருக்கார்... சமீபத்துல, திருநாவுக்கரசர் மகள் திருமணத்துக்கு, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் முகுல்வாஸ்னிக்கும், செயலர்
சின்னாரெட்டியும் வந்தாங்க பா...''இவங்க, பிரபுவின் உடல்நிலையை விசாரிக்க, அவர் வீட்டுக்கு போயிருக்காங்க... ஆனா, ரெண்டு பேரையும் வெளியிலயே நிறுத்தி, 'பிரபுவை பார்க்க முடியாது'ன்னு சொல்லி அனுப்பிட்டாரு பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.
''பெண், எஸ்.ஐ., பாணியில வசூலுக்கு போய், அடி வாங்குனது தான் மிச்சமுங்க...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் அந்தோணிசாமி.
''இன்ட்ரஸ்டிங்கா இருக்கே... சீக்கிரம் சொல்லும் ஓய்...'' என, பரபரத்தார் குப்பண்ணா.''திருச்சியில இருக்கிற பெண், எஸ்.ஐ., ராத்திரி ரோந்து போவாங்க... ஒதுக்குப்புறமா, கார்களை நிறுத்தி, 'சரக்கு' அடிக்குறவங்களை பிடிப்பாங்க...
''பெரும்பாலும், வசதியானவங்க தான், இந்த மாதிரி, கார்கள்ல உட்கார்ந்து குடிப்பாங்க... அவங்களிடம், எஸ்.ஐ., பேரம் பேசி, ஆயிரக்கணக்குல கறந்துட்டு விட்டுடுவாங்க...
''இதை கேள்விப்பட்ட, சக ஆண் போலீசார், 'இது நல்ல திட்டமா இருக்கே'ன்னு நினைச்சு, 'கார் குடிமகன்'களிடம் ஒரு இடத்துல, வசூலுக்கு
போயிருக்காங்க...
''ஆனா, போதையில இருந்த அந்த கும்பல், போலீசாரை புரட்டி எடுத்துடுச்சு... வெளியில சொன்னா அவமானம்னு, உள்ளுக்குள்ளே அழுது முடிச்சுக்கிட்டாங்க...'' என்றார்
அந்தோணிசாமி.''உம்ம தம்பி பொண்ணு நளினி, இப்ப என்னவே படிக்கா...'' என, குப்பண்ணாவிடம் அண்ணாச்சி கேட்க, அரட்டை திசை திரும்பியது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement