Advertisement

டில்லியில் பட்டாசு வெடிக்கலாம் : தடையை நீக்கியது சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: டில்லியில், பட்டாசு விற்க விதிக்கப்பட்ட தடையை, உச்ச நீதிமன்றம், தற்காலிகமாக நீக்கியுள்ளது. டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, துர்கா பூஜை, தீபாவளி பண்டிகை நாட்களில், அதிகளவில்
பட்டாசு வெடிக்கப்படுவது வழக்கம். இதனால், காற்றின் மாசு அதிகரித்து, பல்வேறு நோய்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதையடுத்து, டில்லி மற்றும் என்.சி.ஆர்., என்கிற தேசிய தலைநகர் மண்டல பகுதியில், பட்டாசு விற்க, உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு தடை விதித்தது.
இந்நிலையில், இம்மாத இறுதியில் துர்கா பூஜையும், அடுத்த மாதம், ௧௮ல், தீபாவளி பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது.இதையொட்டி, 'டில்லியில் பட்டாசு விற்க அனுமதிக்க வேண்டும்' எனக்கோரி, உச்ச நீதிமன்றத்தில், பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், எம்.பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, பிறப்பித்த உத்தரவு: டில்லி மற்றும் என்.சி.ஆர்., பகுதியில், பட்டாசு விற்க விதிக்கப்பட்ட தடை, தற்காலிகமாக நீக்கப்படுகிறது. தீபாவளிக்கு பின், இந்த தடையை, மீண்டும் பிறப்பிப்பது பற்றி, பரிசீலிக்கப்படும். பண்டிகை காலத்தில், வெடிக்கப்படும் பட்டாசுகளால், மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் தலைமையில் கமிட்டி அமைக்கப்படுகிறது. இந்த கமிட்டி, டிச., 31க்குள், அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். சுத்தமான காற்றை சுவாசிப்பதும், உடல் நலத்தை பாதுகாப்பதும், மக்களின் அடிப்படை உரிமை; இதை, மத்திய - மாநில அரசுகள் கருத்தில் கொள்ள வேண்டும்.
பட்டாசு விற்பனைக்காக வழங்கப்படும் உரிமங்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட, ௫௦ சதவீதம் குறைவாக இருக்க வேண்டும். பட்டாசை, மக்கள் தனித்தனியாக வெடிப்பதை விட, குழுவாக வெடிக்க, அரசுகளை ஊக்குவிக்க வேண்டும். மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள், வழிபாட்டு தலங்கள் உட்பட, அமைதி மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட இடங்களிலிருந்து, குறைந்தது, 100 மீட்டர் தள்ளி தான், பட்டாசு வெடிக்கப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement