Advertisement

ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்! இன்று ஆசிரியர் தினம்

உயிரினை உலகிற்கு படைக்கும் அன்னை முதல் அதிசயம். சான்றோனாக்கி உலகிற்கு அர்ப்பணிக்கும் தந்தை இரண்டாம் அதிசயம். உலகை ஆளஉருவாக்கும் பள்ளிச்சாலையில், சொல்லாலும், எழுத்தாலும் என்றும் நம்முன் நிற்கும்ஆச்சர்யமும், அதிசயமும்தான் ஆசிரியர்கள். தோள்மீதும், மடிமீதும் தவழ்ந்த குழந்தைக்கு, புதிய அவதாரம் எடுக்கும் பெற்றோர்கள்-ஆசிரியர்கள். வசப்படாத வார்த்தை களை ஒழுங்குபடுத்தி, அகப்படாத எழுதுகோலினை கைகளில் அழகு படுத்தி, மிரண்டு பார்க்கும் உலகினை எளிதாய்ப் புரியவைத்த அற்புதங்கள் ஆசிரியர்கள்.
உடைகளை நேர்த்தியாக்கி, கலையும் தலைமுடியை அன்புக் கரங்களால் கோதி, மழலைசொற்களின் மழையில் மகிழ்ந்து வாழ்பவர்கள். ஆதலால்தான் சின்னக் குழந்தைகளின் ஒவ்வொரு குறும்பும் அவர்களின் பார்வைக்கு விளையாட்டாகவே தெரிகிறது.


மலரும் அற்புதம்


வீட்டினுள் செய்கின்ற குறும்புகளெல்லாம் வகுப்பறை நுழையும் ஆசிரியரின் வலதுகை ஆட்காட்டி விரல் அவரின் உதட்டின் முன்னால் நிற்க மொத்த வகுப்பு அறையும் நிசப்தமாய்ப் பார்க்கின்ற போது, இந்த உலகின் அளப்பரியஆச்சரியம் ஆசிரியர்தானே. விடுமுறை நாட்களில் நாலு குழந்தை களை உட்கார வைத்து, நான் தான் பத்மா டீச்சர், நான் சொல்ற மாதிரி நீங்க நடக்கணும், புரிஞ்சதா?என ஒரு வீட்டிற்குள்ளோ, தெருவிலோ, கிராமங்களில் ஏதோ ஒரு மரத்தடியிலோ அரங்கேறுமே ஒரு பள்ளிக்கூடம், அப்பொழுதுதான் ஆசிரியத்தின் அற்புதம் மலர ஆரம்பிக்கும். இவையெல்லாம் ஆரம்ப பள்ளிக்கூடத்தின் அறிகுறிகள். அங்கே மனப்பாடம் செய்த உயிர், மெய், உயிர்மெய் எழுத்துக்களோடு, ஆங்கிலமும், மனனம் செய்த தமிழ் மூதாட்டியின் ஆத்திச்சூடி
யும், கொன்றை வேந்தனும், தெய்வப் புலவரின் திருவள்ளுவமும், ஓரெண்டா ரெண்டு என்று தொடங்கி தலைகீழாய்ச் சொல்லிப் பார்த்த 16ம் வாய்ப்பாடும்
கல்விக்கு தந்த அஸ்திவாரங்கள்.


மனதில் உழுபவர்கள்படங்களைப் பார்த்து மட்டுமே மகிழ்ந்துபோகும் குழந்தைப் பருவத்தில் கல்வியின் அடிப்படையினை ஆழமாய் மனதில் உழுபவர்கள் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள். ஒவ்வொரு குழந்தை யும், நாம் சொல்வதைப் புரிந்து கற்றுக்கொள்வதை விட, செயல்பாடுகளை கவனித்து அதையே திரும்பச் செய்து கற்றுக்கொள்கிறார்கள். மாணவர்களுக்கு கல்வி கற்றுத்தருவதோடு தங்களது வாழ்க்கை மூலம் அவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்பவர்கள் ஆசிரியர்கள். யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். போதிப்பவர் எல்லாம்
ஆசிரியர் அல்லர் என்பது ஜெர்மன் நாட்டு அறிஞர் கதேயின் கருத்து.வகுப்பறைக்குள் நுழைகின்றபோது, ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் ஒரு சினிமாவில் ஹீரோவைப் பார்க்கின்ற உற்சாகத்தை உருவாக்குகின்றவர்கள்தான் ஆசிரியர்கள்.சொல்லிக் கொடுப்பதைக்காட்டிலும் நடத்தியதை மனதில் புரியும்படி செய்வதைக்காட்டிலும், வாழ்வின் வெற்றித்தருணங்களுக்கு அடிகோலிடும் ஆசிரியர்கள்தான் நம்மை புருவம் உயர்த்திப் பார்க்க வைப்பவர்கள். அதனால்தான், நான் உயிரோடு இருப்பதற்கு என் தந்தைக்கு கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்கு கடமைப் பட்டிருக்கிறேன் என்றார் மாவீரன் அலெக்சாண்டர்.
ஒவ்வொரு மாணவனுக்கும் கனவுகள் உண்டு. அந்த கனவுகளைலட்சியமாக்கும் வல்லமை கொண்டவர்கள் ஆசிரியர்கள். சாதாரண மாணவனை சாதனையாளனாக்குபவர்கள். சிவசுப்பிரமணிய ஐயர் என்னும் ஆசிரியரின் உற்சாகமான வகுப்பறை தாண்டியநிகழ்வுதான் அப்துல் கலாம் என்னும் மாணவனுக்குள் விமானியாகவேண்டும் என்ற சிறகுகள் முளைக்க வைத்தது. மகாத்மா காந்தி
சத்தியசோதனை யில் தனது ஆசிரியர் கிருஷ்ண சங்கர பாண்டியாவை நன்றியுடன் நினைக்கின்றேன் என்ற வரிகளால் அலங்கரிக்கிறார். எனவே, "பாடப்புத்தகம் தாண்டி சொல்லிக் கொடுக்கின்ற ஆசிரியர்கள் பிற்காலத்தில் மாணவர்கள் எழுதும் புத்தகத்திற்குள் இருப்பார்கள்".


பெருமையும், தனித்துவமும்ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு நுாலகம். ஆசிரியரிடம் பழகும் மாணவனுக்கு அறிவின் அற்புத வளர்ச்சியோடு பெருமையும் தனித்துவமும் கிடைக்கும்.'அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்பேணித் தமராக் கொளல்'என்ற அய்யன் திருவள்ளுவரின் வரிகள், ஒருவர் அடையும் பேறு தம்மைவிட மூத்த அறிவுடைய ஞான குருக்களை போற்றி சுற்றமாகக் கொளல் வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். கல்வி கற்கின்ற காலம் முதல் வாழ்வில் எல்லாக் காலங்களிலும் அறிவால் உயர்ந்து வழிநடத்தும் ஆசிரியர்கள்தான் வாழ்க்கையில் கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷங்கள்.குருகுல பயிற்சி


பண்டைய குரு குலப் பயிற்சியில் மாணவர்களின் மதிப்பீடு அவர்களின் குருவின் பெயரால்தான் அமையும். ஆதலால், ஒவ்வொரு குருவும் தங்களை தங்களது பண்புகளால் உயர்த்தினர். அத்தகைய குருக்களை அவையில் வைத்துஅலங்கரித்த மன்னர்கள்தான் உயர்ந்தனர். சிறந்தனர்.இன்றைய சூழலில், ஆசிரியர்கள்மாணவர்களுக்கு உலகைப் புரிந்து கொள்ளும் அறிவியல் கல்வி, உறவினர்களோடும், நண்பர்களுடனும் நடந்து கொள்ள வேண்டிய பண்புகள், உள்ளத்தை தெளிவாக்கும் ஆன்மிகம், போட்டி தேர்வுகளில் வெல்ல பொது அறிவு என பன்முகத்தன்மை கொண்ட வகுப்பறையை ஒரு ஆசிரியர் அமைத்துத் தந்து ஒவ்வொரு மாணவனும் பள்ளியை விட்டு வெளியை வரும் போது கூட்டுப் புழுவிலிருந்து வெளியேறும் ஒரு வண்ணத்துப் பூச்சிபோல் பன்முகத்தலைவனாக இந்த உலகிற்கு அறிமுகப்படுத்துகிறார்கள்.


அடையாளம் காட்டுபவர்


உண்மையில் ஒரு மாணவனை, தன்னை யார் என்று அடையாளம் காட்டுபவராக, வாழ்வின் அர்த்தங்களை உணர்விக்கின்றவராக இருப்பவர் தான் ஆசிரியர். யுத்தகளத்தில் நின்றிருந்த அர்ச்சுனனுக்கு, கிருஷ்ணர் போல், சச்சின் டெண்டுல்கரை அடையாளப்படுத்திய ராமகாந்த் ஆச்ரேகர் போல், தமிழகத்தின் தங்கமகன் மாரியப்பனுக்கு சத்தியநாராயணன் போல், அடையாளம் காட்டுவது அவர்களின் தனிச் சிறப்பு.
உயிருற்ற கருவறைக்கும், உயிரின் முடிவில் கல்லறைக்கும் இடையில் வாழ்வை உன்னதமாய் கற்றுக்கொள்ளுமிடம் வகுப்பறை. அவ்வகுப்பறை மலர்களின்தோட்டக்காரர்கள் தான் ஆசிரியர்கள். அவர்கள் நம்பிக்கை வேர்களை ஒவ்வொருவர் மனதிலும் விதைத்து, விடாமுயற்சியென்னும் நீர் பாய்ச்சி, ஊக்கமென்னும் உரம் தந்து, பண்புமிக்க மாணவப் பூக்களை உலகிற்களிப்பவர்கள்.எந்த ஒரு குழந்தையையும் என்னிடம் 7 ஆண்டுகள் விட்டு வையுங்கள். அதன் பிறகு எந்த சாத்தானும், ஏன் கடவுளும் கூட அவனை, அவனது குண நலன்களை மாற்ற முடியாது என்ற புகழபெற்ற கிரேக்க அனுபவ மொழியைத் தாரக மந்திரமாய் கொண்டவர்கள்தான் ஆசிரியர்கள்.


முன்மாதிரி ஆசிரியர்


இந்த நாள், நம் தமிழ் மண்ணிலே திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி கிராமத்தில் 1888ல் பிறந்து இந்து, புத்த, ஜெயின் மதங்களில் இலக்கியத் தத்துவங்களையும் மேற்கத்திய சிந்தனையாளர்களின் தத்துவங்களையும் கற்று, தனது சொற்பொழிவுகளால் இந்தியா சுதந்திர மடைய உறுதுணையாயிருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள். தான் மேற்கொண்ட ஆசிரியர் பணியை புனிதமாகக் கருதி, ஆசிரியர்களுக்கெல்லாம் முன் மாதிரியாக திகழ்ந்து, தனது வாழ்நாள் முழுவதும் மக்கள் நலனுக்காகவே வாழ்ந்து, ஒரு மாபெரும் தத்துவமேதையாக இவ்வுலகிற்கு தன்னை வெளிப்
படுத்திய டாக்டர் ராதாகிருஷ்ணனின்வழியில், அர்ப்பணிப்பு உணர்வோடு, இந்த தேசத்தின் நலன் கருதி உழைக்கின்ற ஒவ்வொரு ஆசிரியருக்கும் நமது நன்றிகளை காணிக்கையாக்கிடுவோம்.எத்தனையோ பயணங்களை கடந்து செல்லும் நமக்கு, நாம் படித்த பள்ளிகளைக் கடக்கின்ற போது பசுமை நினைவுகள் மனதில் ஆக்சிஜனேற்றும். எத்தனை புதிய மனிதர்களைச் சந்தித்தாலும் இன்னும் ஆச்சர்யம், நம்மை உயர்த்த துாணாய், துணையாய், ஏணியாய், அறிவின் கலங்கரை விளக்காய் நின்ற நம் ஆசான்களே. இந்நாளில் அவர்கள் ஆரோக்கியத்துடன், ஆனந்தமாய் வாழ நன்றியோடு பிரார்த்திப்போம். என்றும் நமது ஆசிரியம் என்னும்
ஆச்சர்யத்திற்கு விழுதுகளாவோம்.ஆசிரியர் போற்றுதும்!ஆசிரியம் போற்றுதும்!-ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்.,துணை ஆணையர்(நுண்ணறிவு பிரிவு)காவல் துறை, சென்னை
94981 77007
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா

    இப்போது இருக்கும் ஆசிரியர்கள் குருவுக்குரிய நன்னடத்தைகள் உள்ளவர்களா என்பது பெரிய கேள்விக்குறி. ஆகவே, அந்த பெருமைகளுக்கு இவர்கள் உரியவர்கள் ஆக மாட்டார்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement