Advertisement

தி.மு.க.,வுடன் தினகரன் கூட்டணி?

'பழனிசாமி தலைமையிலான, தமிழக அரசு, எத்தனை நாள் தாங்கும்' என, பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். தினகரனுக்கு ஆதரவாக உள்ள, எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என, சொல்லப்படுகிறது. பழனிசாமி அரசு, தன் பங்கிற்கு, தினகரன் ஆதரவாளர்களை தங்கள் பக்கம் இழுக்க, தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே, டில்லி அரசியல் வட்டாரங்களில், வேறொரு செய்தியும் உலா வருகிறது.
'தி.மு.க.,வுடன், தினகரன் அணி ரகசிய பேச்சு நடத்தி வருகிறது' என்பது தான், அந்த செய்தி. தி.மு.க., மேலிட தலைவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் தான், இதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். முதல்வர் பழனிசாமிக்கும், அ.தி.மு.க., அரசுக்கும், மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படுத்துவது தான், இந்த அரசியல் வாரிசின் திட்டம்.இதன் பின்னணியில் தான், இந்த குடும்ப வாரிசும், தினகரன் ஆதரவாளர்களும், திரைமறைவில் சந்தித்து வருகின்றனர்.
'அ.தி.மு.க.,வின் முதல் எதிரி, தி.மு.க., என்பது அனைவருக்கும் தெரியும்; அப்படியிருக்க, தி.மு.க.,வுடன், தினகரன் எப்படி கைகோர்க்க முடியும்' என, சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.இந்த கேள்விக்கு, டில்லி வட்டாரங்களின் பதில் என்ன தெரியுமா? 'சாமியார்களின் கட்சியான, பா.ஜ.,வுடன், தி.மு.க., கூட்டணி அமைக்கவே முடியாது என, கூறினர். கடைசியில்,
வாஜ்பாய் அமைச்சரவையில், தி.மு.க., அங்கம் வகிக்கவில்லையா; இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா' என்கின்றனர்.

அ.தி.மு.க.,வுக்கு அறிவுரை!
தமிழக அமைச்சர்கள், சமீபத்தில் டில்லி வந்திருந்தனர். நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தனர். 'தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி சந்தித்தோம்' என, அவர்கள், 'மீடியா'க்களிடம் கூறினர்; ஆனால், நடந்தது வேறு.தமிழக அரசியல் நிலை குறித்து பேசியதுடன், இரு கோஷ்டிகளும் இணைந்த பின், எப்படி செயல்படுகின்றனர் என்பதை, மத்திய அமைச்சர்களுக்கு தெரிவித்தனர்.
'தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், பழனிசாமி அரசை கவிழ்த்து விடுவர் என்ற சந்தேகம் வேண்டாம்; நாங்கள் சமாளித்து விடுவோம்' என, தமிழக அமைச்சர்கள் கூற, 'அந்த, எம்.எல்.ஏ.,க்களை உங்கள் பக்கம் இழுக்க முடியாதா' என, மத்திய அமைச்சர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.'நெருக்கடியான சூழ்நிலை வந்தால், தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களை பதவி நீக்கம் செய்து விடுவோம்' என, தமிழக அமைச்சர்கள் கூறியதாக தெரிகிறது. மத்திய அமைச்சர்களோ, 'அப்படி பதவி நீக்கம் செய்யப்பட்டால், அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும்; அப்போது, தி.மு.க., எளிதாக வெற்றி வெற்று ஆட்சி அமைத்து விடுமே' என, சந்தேகங்களை எழுப்ப, தமிழக அமைச்சர்களிடம் இருந்து, அதற்கு பதில் இல்லையாம்.

அவரா இப்படி?
தமிழக அரசின் உயர் சட்ட பதவிக்கு, சீனியர் ஒருவரை, சமீபத்தில், தமிழக அரசு நியமனம் செய்தது. 'அந்த நபர், அந்த பதவிக்கு மிகவும் பொருத்தமானவர்; சிறப்பாக பணியாற்றக் கூடியவர் தான்; அதில் எந்த சந்தேகமும் கிடையாது; ஆனால், அவர் நியமிக்கப்பட்ட விதம் தான் சரியல்ல' என, அரசல் புரசலாக பேசப்படுகிறது.டில்லி வழக்கறிஞர்கள் வட்டாரங்களில், இது குறித்து பேசப்படுவது இது தான்; -பக்கத்து மாநிலத்தில், மிகப்பெரிய பதவியில் உள்ளவர், அடிக்கடி தமிழக விவகாரங்களில் தலையிடுகிறார். முக்கிய பதவிகளில், குறிப்பாக, அமைச்சர்களுக்கு யார் உதவியாளராக இருக்க வேண்டும் என்ற விஷயத்தில், இவரது ஆலோசனை தான் எடுபடுகிறதாம்.அதுவும், அந்த நபரின் ஊர்க்காரர், அவரது சமுதாயத்தைச் சார்ந்தவர்களையே நியமனம் செய்யச் சொல்கிறாராம். இவர் கூறுவதை, முக்கிய பதவிகளில் உள்ளவர்கள், அப்படியே ஏற்றுக் கொள்கின்றனர்.அ.தி.மு.க.,வின் முன்னாள், எம்.பி.,யும், வானளாவிய பொறுப்பில் இருந்தவருமான நபரின் மகன், இந்த சட்ட உயர் பதவிக்கு நியமிக்கப்பட இருந்தாராம். கடைசியில், பக்கத்து மாநிலத்தில் உள்ளவரின் பேச்சுத் தான் எடுபட்டதாம். அவர் கை காட்டிய நபருக்கு தான், பதவி கிடைத்தது.

கிருஷ்ண லீலை!
இன்று காலை, மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. சரியாக வேலை செய்யாதவர்கள்; வேலையை விடுத்து வேறு விவகாரங்களில் ஈடுபட்டவர்கள்; ஊழல் புகாரில்
சம்பந்தப்பட்டவர்கள் என, ஒரு பட்டியல் போட்டு, அவர்களைபதவி விலகச் சொல்லி விட்டார், பிரதமர் மோடி. இப்படி பதவி விலகிய, பிரபலமான ஒரு அமைச்சரை பற்றி குறிப்பிடும் போது, அவரது கிருஷ்ண லீலை தான், பதவிக்கு ஆப்பு வைத்து விட்டது என்கின்றனர், ஆளுங்கட்சியினர். பெண்கள் விவகாரத்தில் மிகவும் பலவீனமான இந்த நபர், பிரதமரின் கனவு திட்ட அமைச்சகத்திற்கு பொறுப்பு ஏற்றார்; அத்துடன், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும், அரசு பணத்தை அள்ளி விட்டார்; அதில், இவருக்கு, 'கமிஷன்' கிடைத்ததாம். பிரதமரின் முக்கிய திட்டம், இந்த நபரால் நாசமாக்கப்பட்டதாம்.இவரது நடவடிக்கைகள் குறித்து, உளவுத் துறையும், கட்சி நிர்வாகிகளும் பிரதமரிடம் புகார் அளிக்க, பதவி விலகும்படி மோடியும், அமித் ஷாவும் உத்தரவிட்டனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா

    "கிருஷ்ண லீலை இன்று காலை, மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. சரியாக வேலை செய்யாதவர்கள் வேலையை விடுத்து வேறு விவகாரங்களில் ஈடுபட்டவர்கள் ஊழல் புகாரில் சம்பந்தப்பட்டவர்கள் என, ஒரு பட்டியல் போட்டு, அவர்களை பதவி விலகச் சொல்லி விட்டார், பிரதமர் மோடி. இப்படி பதவி விலகிய, பிரபலமான ஒரு அமைச்சரை பற்றி குறிப்பிடும் போது, அவரது கிருஷ்ண லீலை தான், பதவிக்கு ஆப்பு வைத்து விட்டது என்கின்றனர், ஆளுங்கட்சியினர். பெண்கள் விவகாரத்தில் மிகவும் பலவீனமான இந்த நபர், பிரதமரின் கனவு திட்ட அமைச்சகத்திற்கு பொறுப்பு ஏற்றார் அத்துடன், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும், அரசு பணத்தை அள்ளி விட்டார் அதில், இவருக்கு, 'கமிஷன்' கிடைத்ததாம். பிரதமரின் முக்கிய திட்டம், இந்த நபரால் நாசமாக்கப்பட்டதாம். இவரது நடவடிக்கைகள் குறித்து, உளவுத் துறையும், கட்சி நிர்வாகிகளும் பிரதமரிடம் புகார் அளிக்க, பதவி விலகும்படி மோடியும், அமித் ஷாவும் உத்தரவிட்டனர்" - அவர் வேறு யாரும் இல்லை ராஜிவ் பிரதாப் ரூடி தான்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement