Advertisement

தண்ணீரை திருடும் தொழிற்சாலை பழங்கரை மக்கள் குற்றச்சாட்டு

திருப்பூர்: பிரதான குழாயில் இருந்து சிலர், சட்டவிரோதமாக தண்ணீர் எடுத்து, தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தி வருவதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, பழங்கரை மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ராஜன் நகர், நாடார் காலனி, வடக்கு தோட்டம் பகுதிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப் பூர் வரும், இரண்டாவது குடிநீர் திட்டத்தில், குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த, 40 நாட்களாக குடிநீர் வினியோ கம் பாதிக்கப்பட்டுள்ளது.ஊராட்சிக்கு வரும் பிரதான குடிநீர் குழாய், இரண்டு கி.மீ., தூரம் சுற்றி செல்வதால், குடிநீர் தொட்டி நிரம்ப இரண்டு நாட்களாகிறது. நீர்தேக்க தொட்டிக்கு குடிநீர் நேரடியாக எடுத்துவர வேண்டும் என்று, மக்கள் வலியுறுத்தினர். அதன்படி, நீர்த்தேக்க தொட்டிக்கு இணைப்பு வழங்க, ரோட்டின் குறுக்கே குழாய் பதிக்க, நெடுஞ்சாலைத்துறை இலவசமாக அனுமதி வழங்கியது.அதன்பின், கடந்த மாதம் சிமென்ட் குழாய் பதிக்கப்பட்டது. இதுவரை, பிரதான குடிநீர் குழாயில் இணைப்பு கொடுக்கப்படவில்லை; குடிநீரும் வழங்கவில்லை. அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் தெரிவித்தால்,"என்னால் ஒன்றும் செய்ய முடியாது' என்று பதில் அளித்து வருவதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.பிரதான குழாயில், சில நபர்கள் சட்ட விரோதமாக குடிநீரை உறிஞ்சி, அவர்களின் தொழிலுக்கு பயன்படுத்தி வருவதாக குற்றம்சாட்டும் பொதுமக்கள், இதுகுறித்து பி.டி.ஓ., விடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்கின்றனர்.மாவட்ட நிர்வாகம் நேரில் ஆய்வு நடத்தி, நீர்த்தேக்க தொட்டிக்கு பிரதான குழாயில் இருந்து நேரில் இணைப்பு வழங்க வேண்டும். மேலும், வாரம் ஒருமுறையாவது குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுத்து, குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று, அப்பகுதி மக்கள், நேற்று கலெக்டரிடம் முறையிட்டனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement