Advertisement

டீ கடை பெஞ்ச் :

கூட்டம் சேர்க்கும் முயற்சியில் பழனிசாமி மும்முரம்!

''எதுக்கு, எல்லா வாகனங்களையும் கண்காணிக்கணும்ன்னு உத்தரவு போட்டாங்களோ, அதற்கான குறிக்கோளே நிறைவேறலைங்க...'' என்றபடி, பெஞ்ச் விவாதத்தைத் துவக்கினார் அந்தோணிசாமி.
''இப்ப தானே, காஞ்சிபுரம் பத்தி பேசினோம்... அடுத்தது என்ன வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.
''அரியலுார்ல, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துற வேலையை, ஊர்க்காவல் படைக்காரங்ககிட்டே, அம்மாவட்ட போலீசுகாரங்க விட்டுட்டாங்க போலிருக்கு...
''டவுன்ல, ஆர்.ஐ., தலைமையில, லாரி, கார், டூ - வீலர்ன்னு எல்லாத்தையும், சகட்டுமேனிக்குப் புடிச்சு, 'கப்பம்' வாங்கிடுறாங்க... தள்ளுவண்டி, சாலையோர வியாபாரிகள்ன்னு, யாரையும் விட்டு வைக்கிறதில்லே... இதே ரேஞ்சுக்குப் போனா, எல்லா மக்களும் கொந்தளிச்சிருவாங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''கவலைப்படாதீய... என் நண்பர் ஜெயவேல், அங்கே தான், 'டியூட்டி'யில இருக்கார்... அவரோட வலது கையா அவரோட டிரைவர் இருக்காரு... ரெண்டு பேரும் சேர்ந்து, அடாவடித்தனத்தையெல்லாம் அடக்கிடுவாங்க வே...'' என்றார் அண்ணாச்சி.
''பெண், ஐ.ஏ.எஸ்., அதிகாரி தொல்லை தாங்க முடியலைன்னு டிரைவர்கள் புலம்புறாங்க பா...''என, அடுத்த தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.
''என்ன ஓய் சொல்றீர்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.
''வேளாண் துறையில் கூடுதல் இயக்குனரா இருக்குற பெண், ஐ.ஏ.எஸ்., அதிகாரி, இரண்டு அரசு கார்களை, அவங்க உபயோகத்திற்கு வச்சிருக்காங்க... ரெண்டு டிரைவரையும், லீவு நாள்ல கூட, வீட்டுக்கு வரச் சொல்றாங்க... இவங்க ரெண்டு பேரும், வாசல்லயே நின்னு, காவல் காக்க வேண்டியது தான்...
''இயற்கை உபா தைக்கு ஒதுங்கக் கூட வழியின்றி தவிக்கிறாங்க... மேல்தட்டு மக்களுக்கெல்லாம், கீழே உள்ளவங்களோட சிரமம் ஏன் புரியவே மாட்டேங்குதோ தெரியலே பா...'' என்றார் அன்வர்பாய்.
''என் பொஞ்சாதியோட பால்ய சிநேகிதி, செந்தாமரைன்னு இருக்காங்க... அவங்க சிறுசா இருந்தப்ப, இப்படி தான் புலம்புவாங்கன்னு, என் பொஞ்சாதி அடிக்கடி சொல்லும்... இப்ப அவங்க, எப்படி இருக்காங்களோ தெரியலே வே...'' என்றார் அண்ணாச்சி.
''கூட்டத்தைச் சேர்க்கறதுல, மும்முரமா இருக்கா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் குப்பண்ணா.
''எந்த அரசியல்வாதி பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.
''அரசியல்வாதி தான்... ஆனால், கட்சி கூட்டத்துக்கு இல்லே... சுதந்திர தின விழாவுக்கு...
''நாளைக்கு நடக்கப் போற விழாவுல, முதல்வர் பழனிசாமி கொடியேத்தப் போறார்... குடியரசு தின விழாவின்போது, முதல்வர் ஸ்தானத்துல இருந்த பன்னீர் கொடி ஏத்தினப்போ, கூட்டமே இல்லாம, வெறிச்சோடித்து... அதுக்குக் காரணம், முன்னாள் முதல்வர், ஜெ., மறைவுக்கு அப்புறமா, அ.தி.மு.க.,வுல ஆரம்பிச்ச சண்டை தான்...
''அது போல, இப்பவும் கூட்டம் சேராம போயிட்டா, தன் கதை கந்தலாகிடும்ன்னு பயப்படற பழனிசாமி, அறிஞ்சவா, தெரிஞ்சவாளுக்கெல்லாம் அழைப்பிதழ் அனுப்பிண்டு இருக்கார்... வெளிநாட்டு துாதரக அதிகாரிகள், அவாளுக்குத் தெரிஞ்சவான்னு நிறைய பேருக்கு, 'இன்விட்டேஷன்' போயிருக்குன்னா பார்த்துக்குமே...'' என்றார் குப்பண்ணா.
சிரித்தபடியே நண்பர்கள், நடையைக் கட்டினர்; தன் கடைக்கு வருவோர்க்கு, சிறிய அளவிலான கொடி கொடுக்கும் ஆசையில், நாயர், நண்பர் ஒருவருக்குப் போன் போடும் பணியில் ஈடுபட்டார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement