Advertisement

'சன்சைன்' நகர் பகுதிக்கு மாசடைந்த குடிநீர் வினியோகம்

கோத்தகிரி : கோத்தகிரி 'சன்சைன்' நகர் பகுதியில் இருந்து வினியோகிக்கப்படும் தண்ணீர் மாசடைந்துள்ளதால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், நெடுகுளா ஊராட்சிக்கு உட்பட்ட 'சன்சைன்' நகர் பகுதியில், 200 குடும்பங்கள் உள்ளன. பெரும்பாலும், கூலி தொழிலாளர்கள் வசிக்கும் இப்பகுதி மக்கள் நலன்கருதி, 20 ஆண்டுகளுக்கு முன், ஊராட்சி நிர்வாகம் சார்பில், கிணறு அமைக்கப்பட்டு, இரும்பு குழாய்கள் மூலம், மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.இதே தண்ணீர் தான், எஸ். கைக்காட்சி பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கும் வினியோகிக்கப்படுகிறது. குழாய்கள் பதிக்கப்பட்ட நாளில் இருந்து, இதுவரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாமல் உள்ளதால், பல இடங்களில் குழாயில் பழுது ஏற்பட்டு உள்ளது.இதுதவிர, பெரும்பாலான குழாய்கள், கழிவுநீர் கால்வாயினுள் பொறுத்தப்பட்டுள்ளதால், சில இடங்களில் கழிவுநீர், நேரடியாக குடிநீரில் கலக்கிறது. மாசடைந்த இந்த தண்ணீரை பருகும் பள்ளி மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குழாய்களை இதுவரை மாற்றியமைக்காமல் இருப்பது அப்பகுதி மக்கள் இடையே, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.சன்சைன் நகர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் கூறுகையில், ''பல ஆண்டுகளாக, சுகாதாரமான தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளோம். இது குறித்து பலமுறை சம்மந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. சுகாதாமற்ற தண்ணீரை பயன்படுத்துவதால், பள்ளி குழந்தைகள் உட்பட, பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இப்பிரச்னைக்கு, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், மக்களை ஒன்றுத்திரட்டி போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement