Advertisement

முதுமலையில் கனமழை மாயார் ஆற்றில் வெள்ளம்

கூடலுார் : முதுமலையில் தொடரும் மழையால் மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த சில வாரங்களாக, இடை இடையே மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, வன விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வரும் ஓம்பெட்டா, கேம்ஹட் உள்ளிட்ட தடுப்பணைகள் நிரம்பியுள்ளன. வன விலங்குகளின் குடிநீர் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், கடந்த சில நாட்களாக இரவில், முதுமலை சுற்றுப்புற பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, இப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரமான மாயார் ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், வனத்துறையினரும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.விவசாயிகள் கூறுகையில்,' இங்குள்ள மயார் ஆற்றின் நீர் வன விலங்குகளுக்கு மட்டுமல்லாமல், பழங்குடியின மக்களின், குடிநீருக்காகவும் பயன்படுகிறது. மேலும், பல ஏக்கர் பரப்பிலான, விவசாய நிலங்களுக்கும் பயன்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, மழை இல்லாத காரணத்தால், விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பெய்த மழையால், விவசாயத்துக்கு தேவையான நீர் கிடைத்துள்ளது' என்றனர்.வனத்துறையினர் கூறுகையில், 'மாயார் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், நிலத்தடி நீர் உயர்ந்து வருகிறது. இதன் மூலம், அடுத்த ஆண்டு கோடையில், வன விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு இருக்காது, என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது' என்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement