Advertisement

வெயிலடித்தால் தூசி; மழையடித்தால் சகதி:மண் குளியல் போடும் அரசு பஸ்கள்

காரைக்குடி;காரைக்குடி அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில், சிமெண்ட் தளம் அமைக்காததால், விரைவு பஸ்கள் வெயில் நேரங்களில் துாசியாலும், மழை நேரங்களில் சகதியாலும் அசுத்தமாகிறது.ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட அரசு விரைவு பஸ்கள் திருச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கிய நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு காரைக்குடியில் புதிய பணிமனையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். 14 வழித்தடத்தில் 28 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பணிமனை அமைக்கப்பட்டதால் காரைக்குடியிலிருந்து மதுரை வழியாக கன்னியாகுமரிக்கும், ராமநாதபுரம், துாத்துக்குடி வழியாக திருச்செந்துார், நாகர்கோவிலுக்கும், குருவாயூர், மைசூருக்கும் புதிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது ஏமாற்றமாகவே உள்ளது. இதுவரை சென்னைக்கு 'ஏ.சி.,' பஸ் இயக்கப்படவில்லை. தனியார் பஸ்களை நாடிச் செல்லும் நிலை நீடிக்கிறது. பணிமனை அமைக்கப்பட்டு 2 ஆண்டுகளை கடந்தும் சிமெண்ட் தளம் இல்லை. வெயில் காலங்களில் புழுதியாகவும், மழை காலங்களில் சகதியாகவும் பணிமனை காட்சி அளிக்கிறது.டிரைவர் ஒருவர் கூறும்போது: பணிமனையில் மேற்கூரை இல்லாததால், நாள் முழுவதும் கடும் வெயிலில் பஸ்கள் நிற்கின்றன. சிமெண்ட் தளம் இன்றி வெயில்காலங்களில் துாசியாலும், மழை காலங்களில் சகதியாலும் பஸ்கள் அழுக்கடைகிறது. காம்பவுண்ட் சுவர் இல்லாததால், வனப்பகுதியிலிருந்து விஷ பூச்சிகள் வரத்து அதிகமாக உள்ளது.மேற்கூரையுடன் கூடிய சிமெண்ட் தளம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ.,கே.ஆர்.ராமசாமி, புதிய வழித்தடத்தில் பஸ்களை இயக்கவும், அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும் வழிவகை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.--------------

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement