Advertisement

பாரிமுனை பகுதியில் நடைபாதை கடைகள்?அறிக்கை அளிக்க நீதிமன்ற அதிகாரி நியமனம்

சென்னை:பாரிமுனை எஸ்.என்.சி.போஸ் சாலையில், நடைபாதை கடைகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சென்னை, பாரிமுனை, என்.எஸ்.சி.போஸ் சாலையில், நடைபாதை கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாநகராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்படி, 2015 அக்டோபரில், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவும் மீறப்படுவதாக, 'டிராபிக்' ராமசாமி, அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். இதை விசாரித்த, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் அமர்வு' பிறப்பித்த உத்தரவு: என்.எஸ்.சி.போஸ் சாலையை தவிர்த்து, ராஜா அண்ணாமலை மன்றம் அருகே நடைபாதையில் உணவகங்கள் இருப்பதாக, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. மனுதாரர் தரப்பில், 16 புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டன; அவற்றை, ஆக., 7ம் தேதி எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படவில்லை என்பது நிரூபணமாவதாகவும் கூறப்பட்டது. புகைப்படங்களை பார்க்கும் போது, தற்போது நாங்கள் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. புகைப்படங்களில் உள்ள பகுதிகள் மற்றும் ராஜா அண்ணாமலை மன்றம் அருகே உணவகங்கள் இயங்கும் பகுதிகளை, உயர் நீதிமன்ற இணை பதிவாளர் அப்துல் பாக்கர் ஆய்வு செய்து, புகைப்படங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.விசாரணை, 18ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு முதல் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement