Advertisement

'நீட்' நாடகம்

'நீட் தேர்வில் விலக்களிக்க, அவசர சட்டம் தயார்; மத்திய அரசு பரிசீலனை' என, காலை முதல் மாலை வரை, 'டிவி'க்களில் தமிழக அமைச்சர்கள் பேட்டி அளித்தது தான் மிச்சம்; எதுவும் நடக்கவில்லை. மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக காத்திருந்த மாணவர்களை, தமிழக அரசியல்வாதிகளும், அமைச்சர்களும் மொத்தமாக ஏமாற்றி உள்ளனர்.பிரதமரை, முன்பு, தமிழக முதல்வர் சந்தித்த போதும், நேற்று முன்தினம் சந்தித்த போதும், 'நீட்' தேர்வில் விலக்கு அளிக்க முடியாத காரியம் என, மத்திய அரசு கறாராக சொல்லி வந்தது. ஆனால், விலக்கு கிடைக்கலாம் என, நம்பிக்கை ஏற்படுத்தி வந்தனர் அமைச்சர்கள்.அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொள்ளும் போது, நீங்கள் மறுக்க முடியாது என, பிரதமர், சட்ட அமைச்சர் உள்ளிட்டோர் சொல்லி விட்டனர். ஆனால், தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர், பல நாட்கள் டில்லியிலேயே முகாமிட்டிருந்தார். பார்லி., போக வேண்டியது; துணை சபாநாயகர் அறையில் அமர்ந்து கொள்வது; தம்பிதுரை அழைப்பின்படி, மரியாதை நிமித்தமாக மத்திய அமைச்சர்கள், அந்த அறைக்கு வர, 'போட்டோ' எடுத்து, 'அமைச்சர்களுடன் நீட் பேச்சு வார்த்தை' என, செய்தி வெளியிடுவது என, டில்லியில், இது தான் அரங்கேறியது.நேற்று முன்தினம், டில்லி வந்த முதல்வரும், பிரதமரை சந்தித்த பின், துணை சபாநாயகர் அறையிலேயே, ஒரு மணி நேரம் அமர்ந்து விட்டார். தமிழக அமைச்சர்களுக்கு, தம்பிதுரை அலுவலகம், ஒரு, 'கேம்ப் ஆபீஸ்' ஆகிவிட்டது. பாவம் மாணவர்கள்; இவர்கள் பேச்சை நம்பி ஏமாந்து போயினர்.

பக்தி பயணம்

பிரதமரை சந்திக்க காத்திருந்த பன்னீர்செல்வம், தன் குழுவினருடன், திடீரென, மும்பை பயணமானார். 'சென்னை திரும்பாமல், மும்பை எதற்கு; ஒருவேளை, அமித் ஷாவை சந்திக்க மும்பை செல்கின்றனரோ' என, சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், எல்லாம் பக்தி தான் என, பின் தெரிய வந்தது. பன்னீர் அணியினர், ஷீரடி சென்று, சாய்பாபாவை தரிசிக்க சென்றதாக
தகவல் வெளியாகியது.டில்லி அருகிலுள்ள, ஹரித்வார், ரிஷிகேஷ் செல்ல, முதலில் திட்டமிட்டிருந்தனர்; திடீரென, அதில் மாற்றம் செய்யப்பட்டது.
இதற்கிடையே, பா.ஜ.,வுக்கு நெருக்கமான தமிழக பிரமுகர், இணைப்பிற்கு பெரும் முயற்சிகள் எடுத்து வருகிறார். இரு அணியிலுள்ள முக்கிய தலைவர்கள் அடங்கிய, ஒரு வழிகாட்டும் குழு அமைக்க வேண்டும் என, ஒரு, 'லிஸ்ட்' போட்டாராம். ஆனால், அது சரிப்பட்டு வரவில்லையாம்.

இணைய தாமதம் ஏன்?

தமிழகத்தில், அ.தி.மு.க.,வின், பழனிசாமி - பன்னீர்செல்வம் கோஷ்டிகள், விரைவில் இணைந்துவிடும் என, பரபரப்பாக பேசப்பட்டாலும், இணைப்பு இழுபறியாக உள்ளது. பழனிசாமி தரப்பில், தயார் என சொன்னாலும், பன்னீர் ஆட்கள் தயக்கம் காட்டுகின்றனர். காரணம், வேறு ஒன்றுமல்ல; யாருக்கு, என்ன கிடைக்கும் என்ற பேரம் தடை போடுகிறது என்கின்றனர், விஷயம் தெரிந்தவர்கள். இதற்கிடையே, பன்னீரின், ஊர் கிணறு விவகாரம் பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது; இன்னொரு விஷயமும் சொல்லப்படுகிறது. ஒன்று சேராமல் இருந்தால், பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும்; எத்தனை நாள் தான் இப்படியே இருக்க முடியும்; இரு அணிகளும் இணைந்தால் தான் நல்லது என, பன்னீர் குடும்பத்தினர் நெருக்கடி கொடுக்கின்றனராம்.
துணை முதல்வர், உள்துறை, பொதுத் துறை என, முக்கிய இலாகாக்களை, பன்னீருக்கு கொடுக்க வேண்டும் என, சொல்லப்படுகிறதாம். இதெல்லாம் பொய் என, பன்னீர் தரப்பு சொன்னாலும், அவருக்கு மிகவும் நெருக்கமானவர் இதை உறுதி செய்கிறார். முதல்வர், உள்துறையை எப்படி விட்டுத் தர முடியும் எனக் கேட்டால், பன்னீரிடம் உள்துறை இருந்தாலும், முதல்வர் என்ற முறையில், எப்போது வேண்டுமானாலும் உள்துறையில்,
பழனிசாமி தலையிடலாமே என்கிறார், அவர்.பழனிசாமி தரப்பில், பொதுப்பணித் துறையை தரலாம் என்கின்றனராம். இந்த துறையை கொடுத்துவிட்டு, ஊழல் எனச் சொல்லி, பன்னீருக்கு அவப்பெயர் ஏற்படுத்த, பழனிசாமி திட்டமிடுவதாக, பன்னீர் அணி சந்தேகிக்கிறதாம்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, துணை முதல்வரானால், மக்கள் ஏற்றுக் கொள்வரா என, பன்னீர் யோசிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இணைப்பு வரவே வராது என, அடித்துச் சொல்கின்றனர், பன்னீர் அணியைச் சேர்ந்த, சில தலைவர்கள். இவர்களுக்கு பதவி கிடைக்காது என்பதால் தடுப்பதாக, பழனிசாமி அணி குற்றஞ்சாட்டுகிறது.
இன்னொரு கூத்தும் நடக்கிறது. தமிழக சிறப்பு பிரதிநிதி, தளவாய் சுந்தரம், சசி அக்கா மகன், தினகரன் அணியைச் சார்ந்தவர். டில்லியில், முதல்வர் வந்தால், இவர் தான் வரவேற்க வேண்டும். தன்னால் பிரச்னை எதற்கு என, பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தாராம், தளவாய்; ஆனால், தினகரன் தடுத்து விட்டாராம். அதனால், முதல்வரின் டில்லி விசிட்டில், பட்டும் படாமலும் இருந்தார், தளவாய்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • sam - Doha,கத்தார்

    இந்த ஆட்களுடைய முக்கிய குறிக்கோள் எவ்ளவு சீக்கீரத்தில் சுருட்டி கொண்டு ஓடலாம் என்பதே.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement