Advertisement

டீ கடை பெஞ்ச்

பெரம்பலுார் அதிகாரியின் கறார் வசூல்!

''நீச்சல் வீரருக்கு ரெண்டு, 'பர்த் சர்டிபிகேட்' கொடுத்திருக்கா ஓய்...'' என, முதல் ஆளாக பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா.''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார் அன்வர் பாய்.''நீச்சல் வீரர் மவுரிஷ், சென்னைக்காரர்... ௨௦௦௬, பிப்ரவரி, ௧௪ம் தேதி, திருவல்லிக்கேணி அரசு ஆஸ்பிட்டல்ல பிறந்தார்... அந்த தேதியில, பர்த் சர்டிபிகேட் வச்சிருக்கார் ஓய்...''இவரே, 2007 பிப்ரவரி 14ம் தேதி போட்டு, இன்னொரு பர்த் சர்டிபிகேட்டும் வாங்கி இருக்கார்...''மாநில நீச்சல் போட்டியில, ௨௦௦௭ம் வருஷ சர்டிபிகேட்டை கொடுத்து, ஜெயிச்சு, புனேயில நடக்கற தேசிய போட்டிக்கு, 'செலக்ட்' ஆனார் ஓய்...''ஆனா, போலி சர்டிபிகேட் விஷயம், 'லீக்' ஆகிட்டதால, புனே போட்டியில கலந்துக்காம, சென்னை திரும்பிட்டார்... அவர், ஒரு வருஷத்துக்கு எந்த போட்டியிலும் கலந்துக்கப்படாதுன்னு இப்ப தடை விதிச்சிருக்கா...''இதுல, ஒருத்தருக்கே ரெண்டு சர்டிபிகேட்களை, 'இஷ்யூ' பண்ணின, மாநகராட்சி அதிகாரிகளை யாருமே கண்டுக்கலை ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.''பதவியை வாங்கிட்டு, படுத்துட்டாரு வே...'' என, அடுத்த விஷயத்திற்கு தாவினார் அண்ணாச்சி.''யாரை சொல்றீங்க...'' என கேட்டார் அந்தோணிசாமி.''அ.தி.மு.க.,வுல, தினகரன், நிறைய பேருக்கு பதவிகளை, சுண்டல் மாதிரி வாரி வழங்குனாருல்லா... இதுல, திருப்பரங்குன்றம், எம்.எல்.ஏ., போசுக்கும் ஒரு பதவி கிடைச்சுது வே...''ஆனா, 'பதவியை ஏத்துக்க மாட்டேன்'னு, அமைச்சர் உதயகுமார் கூட நின்னு, 'வீராப்பா' சொன்ன போஸ், மறுநாளே பல்டியடிச்சு, பதவியை ஏத்துக்கிறதா, ஆளுங்கட்சி, 'டிவி'க்கு மட்டும், தனி பேட்டி கொடுத்தாரு...''மத்த பத்திரிகையாளர்கள், அவர் கருத்தை கேட்க, வீட்டுக்கு போனப்ப, 'உடம்பு சரியில்லை'ன்னு வீட்டுக்குள்ள படுத்துக்கிட்டாரு வே... மன்னார்குடியில இருந்து போன்ல பேசி, நிறைய ஆசை வார்த்தைகள் சொன்னது தான், அவரோட பல்டிக்கு காரணமாம்...'' என, முடித்தார் அண்ணாச்சி.''காசு விஷயத்துல கறாரா இருக்காருங்க...'' என, கடைசி மேட்டருக்குள் நுழைந்தார் அந்தோணிசாமி.''நல்ல விஷயம் தானே பா...'' என்றார் அன்வர் பாய்.''முழுசா கேளுங்க... பெரம்பலுார் தாலுகா ஆபீஸ்ல ஒரு அதிகாரி இருக்கார்... விதவை சான்று, பட்டா பெயர் மாற்றம், பண பயன்னு எந்த மனுக்கள் வந்தாலும், பணம் கொடுத்தா தான், அதுல கையெழுத்து போடுவாருங்க...''தாசில்தார், ஆர்.டி.ஓ.,ன்னு உயர் அதிகாரிகள் சிபாரிசு செஞ்சா கூட, பணம் கொடுத்தா தான் இவர்கிட்ட காரியம் நடக்கும்... ஆனா, காசை வாங்கிட்டா, காரியத்தை கச்சிதமா முடிச்சு கொடுத்துடுவாருங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.ஒலித்த போனை எடுத்த அண்ணாச்சி, ''சின்னதுரை... கருப்பட்டி சிப்பம் அனுப்பிட்டீரா...'' என, வியாபாரம் பேச, மற்றவர்கள் அரட்டை தொடர்ந்தது.

செப்., 15ல் ரஜினியின் அரசியல் மாநாடு!

''வேலை பார்க்கிறவங்க எல்லாம், மளிகை சாமான் வாங்கணும்னு சொல்லிட்டாங்க...'' என்றார் அந்தோணிசாமி.''யார், எங்க வேலை பார்க்கிறவங்களை பா...'' என, விசாரித்தார் அன்வர் பாய்.''மாவட்ட தலைநகரங்கள்ல, கூட்டுறவு துறை சார்புல, சூப்பர் மார்க்கெட்கள் நடத்துறாங்க... இதுல, அரிசி, பருப்பு, சர்க்கரை எல்லாம், வெளி மார்க்கெட்டை விட, குறைஞ்ச விலைக்கு விற்பனை செய்றாங்க...''ஆனாலும், தரம் சுமாரா இருக்கிறதால, சிறப்பு சலுகைகள் அறிவிச்சாலும், எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை இல்லைங்க...''அதனால, இங்கே வேலை பார்க்கிறவங்க, தங்களது வீடுகளுக்கு தேவையான மளிகை சாமான்களை இங்கேயே வாங்கணும்னு, கூட்டுறவு துறை உயர் அதிகாரிகள் உத்தரவு போட்டிருக்காங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.''வாரக்கணக்குல காத்து கிடக்குறாங்க பா...'' என, அடுத்த விஷயத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்.''யார், எதுக்கு காத்து கெடக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.''அரசு பள்ளி ஆசிரியர்கள் பலர், சொந்த மாவட்டத்துல காலி இடங்களை கண்டுபிடிச்சு, 'டிரான்ஸ்பர்' கேட்டு, ஆளுங்கட்சி நிர்வாகிகள் வீடுகள்ல காத்து கிடக்காங்க... 'அஞ்சு லட்சம் ரூபாய் வரை கொடுக்கவும் தயார்'ன்னு, சொல்றாங்க பா...''அரசாங்கம், நேர்மையா கவுன்சிலிங் நடத்தி மாறுதல் போடும்னு சொன்னா, 'அதுல, நாங்க கேட்கிற இடம் கிடைக்காது... அதனால, கவுன்சிலிங்குக்கு முன்னாடி, இடங்களை, 'பிளாக்' பண்ணி ஆர்டர் போடுங்க'ன்னு, ஆசிரியர்களே ஐடியாவும் குடுக்குறாங்க...''விதிமீறல் டிரான்ஸ்பர்களை ஊக்குவிக்கிறதே இந்த மாதிரி ஆசிரியர்கள் தான்னு, அதிகாரிகள் புலம்புறாங்க பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.''மாநாடு நடத்த, ரஜினி தயாராகிட்டு இருக்காரு வே...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார் அண்ணாச்சி.''எங்க ஓய்...'' என்றார் குப்பண்ணா.''திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பக்கம், ஆதிலட்சுமிபுரத்துல, ௩0 ஏக்கர்ல இடம் தேர்வு பண்ணியிருக்காவ...''சமீபத்துல, அக்கரைப்பட்டி சடையாண்டி கோவில்ல, ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் அசைவ விருந்து நடத்துனாவ... இதுக்கு வந்த மாநில நிர்வாகிகள், இடத்தை பார்த்து, உறுதி பண்ணிட்டு போயிட்டாவ வே...''பந்தல், கார் பார்க்கிங்னு பல வசதிகளை ஏற்படுத்த, அரசு துறைகளிடம் அனுமதி வாங்க இருக்காவ... மாநாட்டுல, வெளிநாட்டு ரசிகர்களும் கலந்துக்க இருக்காவ வே...''இது போக, சினிமா, 'டிவி' நடிகர், நடிகையர், மத்த அரசியல் கட்சி பிரபலங்கள்னு நிறைய பேரை அழைக்க இருக்காவ... தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகன், அழகிரியும் கலந்துக்குவார்னு சொல்லுதாவ... அனேகமா, அண்ணாதுரை பிறந்த நாளான, செப்டம்பர் ௧௫ல, மாநாடு நடக்கலாம் வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.அரட்டை முடிந்ததும், நண்பர்கள் கிளம்பினர்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Giridharan S - Kancheepuram,இந்தியா

    ரஜனி சார் மாநாடு என்கிற பேருல வசூல் வேட்டையை ஆரம்பிச்சுடப்போறாங்க அப்புறம் அரசியலுக்கு வரதுக்கு முன்னாடியே உங்க பேர் கெட்டுடும் உஷாரா இருங்க

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement