Advertisement

'டவுட்' தனபாலு

முதல்வர் பழனிசாமி:ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.

டவுட் தனபாலு: முதல் முறை என்றால் தான், பயப்படணும்... ஏற்கனவே, இதன் வெற்றிச் சூத்திரத்தை நீங்க, 'ரூம்' போட்டு அறிந்து வெச்சிருக்கீங்க... அந்த அனுபவத்தின் அடிப்படையில் தான், இவ்வளவு தைரியமாகச் சொல்றீங்களோ என்பதுதான், மக்களின், 'டவுட்'டாக இருக்கு...!


பா.ஜ.,வைச் சேர்ந்த, பீஹார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி: ஐக்கிய ஜனதா தளத்தின் கொள்கைகளுக்கு, நிதிஷ் குமாரால் களங்கம் ஏற்பட்டதாக கூறும் சரத் யாதவ், லாலு குடும்பத்தாரின் ஊழல்கள் குறித்து வாய் திறக்காதது ஏன்?

டவுட் தனபாலு: நிதிஷ்குமாரைப் பத்தி சரத் யாதவ் சொன்னது, அவர்கள் உட்கட்சி விவகாரம்... அதற்கு நீங்க ஏன் ஆவேசப்படுறீங்க... இது தானே, பா.ஜ.,வின் கட்டுப்பாட்டில் முதல்வர் நிதிஷ்குமார் இருக்கிறார் என்ற, 'டவுட்'டை அவர்களுக்கு ஏற்படுத்துது என்பதை எப்போ உணரப் போறீங்க...!தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின்: தேவைப்பட்டால், தமிழக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம்.


டவுட் தனபாலு: நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வரும் நோக்கம் மட்டும் இருக்கு... அது எதுக்கு வெட்டியாய்... அ.தி.மு.க., அதிருப்தி, எம்.எல்.ஏ.,க்கள் சிலர், உங்களின் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக சொன்னால் தானே, பிரயோஜனம்... அந்தத் தேவையின் பொருட்டே காத்திருக்கிறீங்களோ என்ற, 'டவுட்' வருதே...!சசிகலா சகோதரர் திவாகரன்: ஜெ., இருந்த போது, தமிழக நலன்களுக்கு விரோதமான, மத்திய அரசின் பல திட்டங்களை தடுத்து நிறுத்தினார். தற்போதைய, அ.தி.மு.க., அரசு, அந்தத் திட்டங்களை எல்லாம் ஏற்று, நடைமுறைப்படுத்தி வருவது புரியாத புதிராக உள்ளது.


டவுட் தனபாலு: தமிழக நலன்களுக்கு விரோதமான திட்டங்களை, முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு ஏற்று, நடைமுறைப்படுத்தியது என்றால், அதுகுறித்து இன்றைக்கு வரைக்கும் தினகரன் தரப்பு கேள்வி எழுப்பாதது ஏன்... மக்கள் நலனில், அவருக்கு அவ்வளவு தான் அக்கறையா... அதைவிட முக்கியமாய், ஜனாதி பதி தேர்தலில் பா.ஜ.,வுக்கு எதற்கு தினகரன் தரப்பு ஆதரவு தெரிவித்தது... இதெல்லாம் உங்களுக்கு, புரியாத புதிராகத் தெரியலையா என்பதுதான், என்னோட, 'டவுட்!'

பா.ஜ., -- எம்.பி., சுப்பிரமணியன் சாமி: அ.தி.மு.க.,வுக்கு தலைமை சசிகலா தான். அக்கட்சி விவகாரத்தில் தேர்தல் கமிஷன் தவறு செய்து விட்டது. இது தொடர்பான விஷயத்தில், சில நிமிடங்களில் எடுக்க வேண்டிய முடிவை, வாதாடிப் பெற, சரியான ஆள் இல்லை.


டவுட் தனபாலு: 'அ.தி.மு.க., வின் தலைமை யார் என்பது குறித்து, அக்கட்சியினரை விட நீங்க ஏன் அதிகம் அலட்டிக்குறீங்க... ஒருவேளை, வாதாடிப் பெறும் பொறுப்பை, சசி தரப்பு உங்களிடம் ஒப்படைத்தால், அதை ஏற்பீங்களா... அதற்காகத்தான் இப்படி, தொடர்ந்து, நுால் விட்டுட்டு இருக்கீங்களா'ன்னு, யாரும், 'டவுட்' எழுப்பிடப் போறாங்க...!


தி.மு.க., முதன்மை செயலர் துரைமுருகன்: தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை, ஸ்டாலின் நினைத்தால் கொண்டு வர முடியும்; அவரால் முடியாதது ஒன்றுமில்லை.


டவுட் தனபாலு: ஜெ., மறைவால், அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்டால், அதைச் சாதமாக்கி ஆட்சியைப் பிடிக்கக் கூடாதுன்னு கருணாநிதி சொன்னதால் தான், ஸ்டாலின் அமைதியா இருப்பதாக சொல்லி வந்தீங்க... பொதுத்தேர்தல் மூலமே ஆட்சியில் அமர்வது என்ற நிலைப்பாட்டில், இப்பவும் உறுதியா இருக்கீங்களா என்ற, 'டவுட்'டைக் கொஞ்சம் விளக்குங்களேன்...!

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement