Advertisement

தலை தெறிக்க ஓடும் அமைச்சர்கள்

'பழனிசாமி - பன்னீர்செல்வம் அணிகள் இணைய போகின்றன; விரைவில், மோடி அமைச்சரவையில் அ.தி.மு.க.,விற்கு பதவி' என, டில்லி மீடியாக்கள் ஏகத்தும் செய்தி வெளியிட்டன. அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., தரப்பில், இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டாலும், ஊடகங்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கிடையே, தமிழக அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க., தலைவர்களை கண்டாலே, 'ஆளை விடுங்கள்' என ஓடுகின்றனர், பா.ஜ., அமைச்சர்கள்.'பழனிசாமி வந்து சந்தித்ததுமே, உடனே, பன்னீர் வருகிறார். 'சரி, நம் வேலையை பார்க்கலாம்' என உட்கார்ந்தால், பழனிசாமி ஆட்கள், அமைச்சர்கள் வந்து சந்திக்கின்றனர். அவர்கள் வெளியே போனதும், பன்னீர் கோஷ்டியினர் வருகின்றனர். போதாக் குறைக்கு, தம்பிதுரையும் வருகிறார். என்ன தான் நடக்கிறது, தமிழகத்தில்? இவர்கள் அடிக்கடி வந்து சந்திப்பதால், எங்களுக்கு பைத்தியம் தான் பிடிக்கும்' என, நொந்து போய் சொல்கின்றனர், மத்திய அமைச்சர்கள்.இதில், அதிகம் மனமுடைந்து காணப்படுபவர், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தான். காலை, மதியம், மாலை என, மூன்று வேளையும் இவரைச் சந்தித்து, 'நீட்' எனப்படும், தேசிய மருத்துவ நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என, திரும்ப திரும்ப சொன்னதையே, அவரிடம் சொல்லிக் கொண்டிருக்கின்றனர், தமிழக அமைச்சர்கள். 'இந்த விவகாரத்தில் உதவ முடியாது' என, சுப்ரீம் கோர்ட்டை, அமைச்சர் நட்டா காரணம் காட்டினாலும், தமிழக அமைச்சர்கள் சந்திப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.
'நட்டா, உண்மையிலேயே ரொம்பவும் பொறுமை சாலி தான்' என, வடிவேலு பாணியில் சொல்லி சிரிக்கிறார், இன்னொரு மத்திய அமைச்சர்.

எந்த கோவிலுக்கு போகிறார் அமித் ஷா?விரைவில், தமிழகம் வருகிறார், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா; இவர், தமிழக கோவில்கள் மீது அதீத மரியாதையும், அன்பும் வைத்துள்ளார். கடந்த முறை புதுச்சேரி வந்த போது, திருவண்ணாமலைக்கு வந்து, அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். டில்லி வந்த பின், அந்த கோவிலின் பெருமைகளை பற்றியே பேசிக் கொண்டிருந்தாராம், அமித் ஷா.இந்த முறை தமிழகம் வரும் அமித் ஷா, சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் கோவில், திருச்சி, ஸ்ரீரங்கம் கோவில் உள்ளிட்டவற்றில், எதற்கு செல்வார் என, கட்சிக்குள் பட்டிமன்றம் நடைபெறுகிறது.தமிழக வருகையின் போது, ஒரு தலித் வீட்டில், அமித் ஷா சாப்பிடவும் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. எந்த மாநிலத்திற்கு சென்றாலும், அங்குள்ள கோவில்களுக்குச் செல்வதோடு, ஒரு தலித் வீட்டில் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளார், அமித் ஷா.மிகுந்த கடவுள் நம்பிக்கை வைத்துள்ள அமித் ஷா, ஆமதாபாத்தில் உள்ள, தன் பேத்தியோடு, மொபைல் போனில் வீடியோவில் பேசும் போது, 'ஜெய் ஸ்ரீராம்' எனச் சொல்ல, அந்த குழந்தையும் மழலைக்குரலில் பதில் சொல்கிறது.

தமிழக காங்., தலைவர்நாச்சியப்பன்?தமிழக, காங்., தலைவராக யார் நியமிக்கப்பட்டாலும், அந்த பதவி, கத்தி மீது நிற்பது போலத்தான். எந்நேரம் என்ன நடக்கும் என, சொல்லவே முடியாது. தமிழக, காங்., தலைவராக, திருநாவுக்கரசர் இருந்தாலும், எத்தனை நாள் நீடிப்பார் என, சொல்ல முடியாது. சமீபத்தில், பார்லி., சென்ட்ரல் ஹாலில் நடந்த ஒரு நிகழ்ச்சி, திருநாவுக்கரசர் பதவியில் நீடிப்பாரா என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது.முன்னாள் காங்., - எம்.பி., சுதர்சன நாச்சியப்பன், அடிக்கடி பார்லிமென்டின் சென்ட்ரல் ஹாலுக்கு வருவார். இவர், வழக்கறிஞராக இருப்பது மட்டுமல்லாமல், எம்.பி.,யாக இருந்த போது, சட்டத்துறை கமிட்டியின் தலைவராக இருந்துள்ளார். அதனால், சென்ட்ரல் ஹாலில், எம்.பி.,க்கள், இவரை சந்தித்து, தனிநபர் மசோதா எப்படி கொண்டு வர வேண்டும்; அதை எப்படி தயாரிப்பது என, கேட்பர். நாச்சியப்பனும்
அவர்களுக்கு உதவுவார்.இப்படி ஒரு நாள், இவர் இங்கிருந்த போது, காங்., முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வந்தார். 'வாழ்த்துகள்' என, நாச்சியப்பனுக்கு கை கொடுத்தார். பக்கத்திலிருந்த, எம்.பி.,க்கள், என்ன விஷயம் எனக் கேட்டதும், 'இவர் தான், அடுத்த தமிழக, காங்., தலைவர்' என்றார் ரமேஷ். மற்ற, எம்.பி.,க்களும் வாழ்த்து சொல்ல, 'அவர் தான் ஏதோ விளையாட்டுக்கு சொல்கிறார்
என்றால், நீங்களுமா' என, வாழ்த்திய, எம்.பி.,க்களிடம், நாச்சியப்பன் சொன்னார். ஆனால், காங்., தலைமையிடம், நாச்சியப்பன் நெருக்கமாக இருக்கிறார், என்பது உண்மை.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ

    தமிழகத்தில் காங்கிரஸ் செத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது இருக்கும் MLA கள் கூட பிற கட்சி முதுகில் ஏறி பதவிக்கு வந்தவர்கள்தான்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement