Advertisement

துணை ஜனாதிபதிக்கு முயற்சித்த தமிழர்

துணை ஜனாதிபதிக்கான தேர்தல், ஆக., 5ல் நடக்க உள்ளது. பா.ஜ., தரப்பிலிருந்து, வெங்கையா நாயுடு, எதிர்க்கட்சிகள் சார்பில், மஹாத்மா காந்தியின் பேரன், கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.இந்நிலையில், இந்த பதவிக்கு, பா.ஜ., சார்பில் போட்டியிட, மிகப்பெரிய பதவியில் உள்ள ஒரு தமிழர் ஆசைப்பட்டார் என்ற தகவல், தற்போது வெளியாகி உள்ளது.நாட்டின் மிக முக்கியமான பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர், அந்த தமிழர்; இதன்பின், பா.ஜ., தலைவர்களிடம், 'லாபி' செய்து, மாநிலத்தையே ஆட்டிப் படைக்கும் பதவியை பெற்றார். அப்போதே, அவருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன; ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பதவியில் அமர்ந்தார்.'தென் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், துணை ஜனாதிபதியாக இருந்தால் நல்லது; எனவே, என்னை வேட்பாளராக அறிவியுங்கள்; எதிர்க்கட்சியினரும் என்னை ஏற்றுக் கொள்வர்' என, பா.ஜ., மேலிட தலைவர்களிடம், கெஞ்சியுள்ளார், அந்த பிரமுகர்.
'ராஜ்யசபாவை திறமையாக கையாளத் தெரிந்த ஒரு அரசியல்வாதி தான், இந்த பதவிக்கு சரியானவர்' என, பா.ஜ., மேலிடம் கண்டிப்பாக கூறியதுடன், 'ஊருக்கு போய் உங்கள் வேலையைப் பாருங்கள்' என, அனுப்பி வைத்து விட்டது.
இதற்கிடையே, வெங்கையாவை, முதல்வர் பழனிசாமி மற்றும் பன்னீர் அணியினர், சமீபத்தில், டில்லியில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, வெங்கையாவிடம், வழக்கமான உற்சாகத்தை காண முடியவில்லை. 'துணை ஜனாதிபதி பதவியை விட, அமைச்சர் பதவியைத் தான், அவர் மிகவும் விரும்பினார்; ஆனால், கட்சி மேலிடத்தின் கட்டளையை மீற முடியவில்லை; அதனால் தான், இந்த சோகம்' என்கின்றனர், பா.ஜ.,வினர்.துாக்கத்தில் காங்., சந்தோஷத்தில் பா.ஜ.,

பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், திடீரென பதவியை ராஜினாமா செய்து, லாலு கூட்டணியை கழற்றிவிட்டு, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்துள்ளார். பா.ஜ., ஆதரவுடன், மீண்டும் முதல்வர் பதவியில் அமர்ந்து விட்டார். இந்த விஷயத்தில், என்ன நடக்கிறது என, காங்., தலைவர்கள் தெரிந்து கொள்ளும் முன்பே, அனைத்தும் முடிந்து விட்டது.
இரவோடு இரவாக ராஜினாமா, பின், பா.ஜ., ஆதரவு, மறுநாள் காலை, 10:00 மணிக்கு பதவியேற்பு, அடுத்த நாள் நம்பிக்கை தீர்மானத்தில் வெற்றி, என, அதிரடியான அரசியல் மாற்றங்கள் அரங்கேறி முடிந்துவிட்டன.ஓராண்டுக்கு முன்பே, பிரதமர் மோடியைச் சந்தித்த நிதிஷ் குமார், 'லாலு மற்றும் அவரது மகன்களின் நடவடிக்கை சரியில்லை; நிலைமை மோசமானால், உங்கள் பக்கம் தான் வருவேன்' என, உறுதி அளித்திருந்தார்.
லாலு மகனும், துணை முதல்வராக இருந்தவருமான, தேஜஸ்வி மீது, சி.பி.ஐ., ஊழல் வழக்கு பதிவு செய்தது, கூட்டணியிலிருந்து வெளியேறுவதை, நிதிஷ் குமாருக்கு எளிதாக்கி விட்டது.நிதிஷ் குமாரை, பா.ஜ., பக்கம் இழுத்து வருவதற்கு, அமித் ஷாவும், அருண் ஜெட்லியும், இரவு, பகலாக உழைத்துள்ளனர். புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் பங்கேற்க, நிதிஷ் குமார், டில்லி வந்த போது, ஜெட்லியை, ரகசியமாக சந்தித்துள்ளார்.
சந்திப்பு விபரங்கள், உடனுக்குடன் பிரதமருக்கு சொல்லப்பட்டது.மற்றொரு பக்கம், அமித் ஷா, பீஹார் மாநில, பா.ஜ., தலைவர் சுஷில் குமார் மோடியிடம் ஆலோசனை நடத்தி, காரியத்தை கச்சிதமாக முடித்து வைத்தார். 'இந்த விவகாரம், எனக்கு முன்பே தெரியும்' என, அறிக்கை விட்டார், காங்., துணைத் தலைவர் ராகுல்; இது, கட்சிக்குள் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
'முன்பே தெரியும் என்றால், அதிரடியாக திட்டமிட்டு, நிதிஷ் குமார், பா.ஜ., பக்கம் போவதை தடுத்திருக்கலாமே; துாங்கி விட்டீர்களா?' என, காங்., நிர்வாகிகள் கொந்தளிப்புடன்
கேட்கின்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ

    தமிழ்நாடும், இந்தியாவும் உலக அளவில் உய்ய ஒரே வழி தமிழன் ஆட்சியில் அமரவேண்டும். பாரத ஜனாதிபதியாக தினகரனும், துணை ஜனாதிபதியாக இளவரசியும், பிரதமராக சின்னம்மாவும் இருந்து ஆட்சி செய்யவேண்டும். வேறு எந்த மாநிலத்திலும் எந்த மந்திரியும் இருக்கக்கூடாது. அனைத்து அரசு velaigalum மன்னார்குடி மக்களுக்கே கொடுக்கவேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement