Advertisement

மோடியின் ராசி!

சமீபத்தில், தமிழக அமைச்சர்கள், ஜெயகுமார், தங்கமணி, சண்முகம், விஜயபாஸ்கர் டில்லி வந்திருந்தனர். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட பலரை சந்தித்து, 'நீட்' தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும்படி, கோரிக்கை வைத்தனர். பார்லி., கூட்டத்தொடர் நடப்பதால், மத்திய அமைச்சர்களை, பார்லி., வளாகத்திலேயே சந்தித்தனர்.
பிரதமரும், அங்கு இருந்ததால், அவரையும் சந்தித்து, 'நீட்' தேர்வு குறித்து வேண்டுகோள் விடுத்தனர். தமிழக அமைச்சர்கள் மோடியைச் சந்தித்துவிட்டு கிளம்பினர். உடனே பிரதமர், அமைச்சர் விஜயபாஸ்கர் முதுகில் தட்டிக் கொடுத்தபடி, 'வெரி யங் மினிஸ்டர்' என, சிரித்தபடி கூறினாராம்.இதை கேட்டு, விஜயபாஸ்கர் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.
'மிகவும் இளம் வயதில், அமைச்சராக இருக்கிறீர்களே' என, பிரதமரே நம்மை பாராட்டி விட்டாரே என்ற சந்தோஷத்தில், அறையிலிருந்து வெளியே வந்தவருக்கு, மொபைல் போனில் அழைப்பு வந்தது.அழைத்தவர், விஜயபாஸ்கரின் உதவியாளர். 'சார்; வருமான வரித்துறை அலுவலகத்திலிருந்து உங்களுக்கு, 'சம்மன்' வந்துள்ளது. நாளைக்கு உங்களை விசாரணைக்கு அழைத்துள்ளனர். உடனடியாக, சென்னை வந்துவிடுங்கள்' என்றார்,
உதவியாளர். இதை கேட்டதும், மகிழ்ச்சி மறைந்து, சோகமானது அமைச்சரின் முகம்.பக்கத்திலிருந்த அமைச்சர்கள், 'என்ன விஷயம்?' எனக் கேட்க, வருமான வரித்துறை விவகாரத்தை பற்றி, அவர்களிடம் கூறினார்.'ஜெ., மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்த போது, சசிகலாவின் தலையில் கை வைத்து, ஆறுதல் கூறினார், மோடி. அதன்பின், சசி, சிறைக்கு செல்லும்படி ஆயிற்று.
'இப்போது, விஜயபாஸ்கர் முதுகில் தட்டிக் கொடுத்ததும், அவருக்கு, வருமான வரித்துறை சம்மன் வந்துள்ளது; மோடியின் ராசி, தமிழகத்தில் இப்படி வேலை செய்கிறதே' என்கின்றனர், பன்னீர்செல்வம் ஆதரவு, எம்.பி.,க்கள்.

கோபத்தில் அமித் ஷாசமீபத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில், காங்., மற்றும் எதிர்க்கட்சிகளின், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் பலரும், பா.ஜ., வேட்பாளர் ராம்நாத் கோவிந்திற்கு ஓட்டளித்து உள்ளனர்.
இது, காங்கிரசுக்கும், மற்றவர்களுக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால், இந்த விஷயத்தில், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா தான், கடும் கோபத்தில் உள்ளார். ராம்நாத் கோவிந்திற்கு, 70 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் என, உறுதியாக நம்பினார், அமித் ஷா. இதற்காக, கடுமையாக உழைத்தார்; ஆனால், 65 சதவீத ஓட்டுகளே கிடைத்தன.தலித் வேட்பாளரை போட்டியிட வைத்து, எதிர்க்கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி, அவர்களின் ஓட்டுகளை தங்கள் பக்கம் இழுக்க, கடுமையான முயற்சிகளை மேற்கொண்ட அமித் ஷாவிற்கு, எதிர்பார்த்த ஓட்டுகள் கிடைக்காதது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், பா.ஜ., - எம்.பி.,க்கள் சிலர், இந்த விஷயத்தில், காலை வாரிய விஷயம், இப்போது தான், அவருக்கு தெரிய வந்துள்ளது.
இந்த தேர்தலில், 77 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. விஷயம் தெரிந்த, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், எப்படி செல்லாத ஓட்டளிக்க முடியும்; வேண்டுமென்றே அவர்கள், செல்லாத ஓட்டுப் போட்டுள்ளதாக, அமித் ஷாவுக்கு சந்தேகம் எழுந்தது. விசாரித்ததில், செல்லாத ஓட்டுப் போட்டவர்களில், 13 பேர், பா.ஜ., - எம்.பி.,க்கள் என, தெரிய வந்ததாம். இதனால், அமித் ஷா பயங்கர கடுப்பில் உள்ளாராம். 'இந்த, 13 எம்.பி.,க்கள் யார் என, ரகசிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. அவர்களை பற்றிய விபரம் தெரிந்ததும், அதிர்ச்சி வைத்தியம் காத்திருக்கிறது' என்கின்றனர், பா.ஜ., மூத்த தலைவர்கள்.

அமைச்சரவை மாற்றம்?மத்திய அமைச்சரவையில், பல இடங்கள் காலியாக உள்ளன. மனோகர் பரீக்கர், கோவா முதல்வராக ஆன பின், அவர் பணியாற்றிய ராணுவ இலாகா, நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம்
கொடுக்கப்பட்டது. சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த, அனில் தவே இறந்ததும், அதுவும், மற்றொரு அமைச்சர் வசம் ஒப்படைக்கப்பட்டது.தற்போது, வெங்கையா நாயுடு துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின், அவரும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
அவரிடம் இருந்த, செய்தி ஒலிபரப்புத் துறை, ஸ்மிருதியிடம் கொடுக்கப்பட்டு உள்ளது. இப்படி, ஒருசில அமைச்சர்கள், பல துறைகளை பார்ப்பதால், அவர்களுக்கு பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.
இதனால், விரைவில், மத்திய அமைச்சரவையை அதிரடியாக மாற்றி அமைக்க, பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். செப்டம்பரில் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என, கூறப்படுகிறது. அடுத்த லோக்சபா தேர்தலுக்கு முன் நடக்கும், முக்கியமான அமைச்சரவை மாற்றமாக, இது இருக்கும் என்கின்றனர்.
மத்திய அமைச்சரவையில், தற்போது தமிழகத்திலிருந்து, பொன்.ராதாகிருஷ்ணன் மட்டுமே அமைச்சராக உள்ளார். இதனால், ராஜ்யசபா, எம்.பி.,யான, இல.கணேசனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம் என, கூறப்படுகிறது. இதற்கிடையே, பன்னீர்செல்வம் அணிக்கும், முதல்வர் பழனிசாமி அணிக்கும், மத்திய அமைச்சரவையில் இடம் பெற ஆசை உள்ளதாம்.பழனிசாமி அணியிலிருந்து, லோக்சபா துணை சபாநாயகராக உள்ள தம்பிதுரை, அமைச்சராக ஆசைப்படுகிறாராம்.
பன்னீர்செல்வம் அணியினர், மைத்ரேயனை அமைச்சராக்க விரும்புகின்றனர். 'ஊழலில் சிக்கியுள்ள, அ.தி.மு.க.,வை, மத்திய அமைச்சரவையில், பிரதமர் மோடி எப்படி சேர்த்துக் கொள்வார்?' என, பா.ஜ., தரப்பில் கூறப்படுகிறது.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Sulikki - Pudukkottai,இந்தியா

    மாப்பு விஜயபாசகர் உனக்கு மோடி வச்சுட்டார் ஆப்பு. தயாரா இருந்துக்கோ........

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement