அமைச்சருக்கு எதிராக தெர்மோகோலுடன் போராட்டம்
மதுரை;அமைச்சர் செல்லுார் ராஜுவின் மதுரை மேற்கு தொகுதி பரவை பேரூராட்சி 10 வது வார்டில் கழிவுநீர் ஓட்டத்தை திருப்பி விட்டது குறித்து நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அப்பகுதியினர் கலெக்டர் அலுவலகம் முன் தெர்மோகோல் அட்டைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொது குறை தீர்க்கும் முகாம் கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடந்தது. பரவை பேரூராட்சி 10 வது வார்டு மக்கள் சமூக சேவர் ஆராவமுதன் தலைமையில் தெர்மோகோல் அட்டைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறியதாவது: 10 வது வார்டில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகிறோம். அருகிலுள்ள அண்ணாநகர் பகுதியில் 12 ஏக்கரில் தனியார் கட்டுமான நிறுவனத்தினருக்கு ஆதரவாக, அங்கிருந்து வரும் கழிவு நீரை தலைகீழாக, கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி திருப்பி விட கால்வாய் கட்டுகின்றனர். இதனால் தண்ணீர் செல்லாமல் அருகிலுள்ள பிளாட்களில் தேங்கி நிற்கிறது.
கொசு தொல்லை அதிகம் உள்ளது. தொகுதி எம்.எல்.ஏ., என்ற முறையில் அமைச்சர் செல்லுார் ராஜுவிடம் கூறியும் நடவடிக்கை இல்லை. அவரது கவனத்திற்கு கொண்டு செல்ல தெர்மோகோல் அட்டைகளுடன் போராடுகிறோம், என்றனர். பின் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.ஆழ்குழாய் கிணறுகளால் ஆபத்துவில்லாபுரம் எம்.எம்.சி.காலனி பொதுமக்கள் மாநகராட்சி அமைத்த ஆழ் குழாய் கிணறுகளால் வீடுகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டதாக மனு அளித்தனர். பிறகு அவர்கள் கூறியதாவது: எங்கள் பகுதியில் மாநகராட்சி சார்பில் 13 ஆழ்குழாய் கிணறுகள் அமைத்துள்ளனர். தினமும் 50 லாரிகளில் இங்கிருந்து தண்ணீர் எடுத்து செல்கின்றனர். தண்ணீரை உறிஞ்சி எடுப்பதால் வீடுகளிலுள்ள போர் வெல்களில் தண்ணீர் குறைந்து விட்டது. எனவே ஆழ்குழாய் கிணறுகளை தண்ணீர் எடுப்பதை நிறுத்த உத்தரவிட வேண்டும், என்றனர்.
குண்டும் குழியுமான ரோடு
சர்வேயர்காலனி சுந்தர்ராஜ் தலைமையில் பொது மக்கள் அளித்த மனு: அய்யர்பங்களா-மூன்றுமாவடி-சர்வேயர்காலனி-120 அடி ரோடு வழியாக மாட்டுத்தாவணி செல்லும் ரோட்டில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக மெகா பள்ளங்கள் உள்ளன. பள்ளங்களால் டூவீலர்களில் செல்வோர் விபத்திற்குள்ளாகின்றனர். இந்த ரோடு வழியாக தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. எனவே ரோட்டை சீரமைக்கவும், புதிய ரோடு அமைக்கவும் உத்தரவிட வேண்டும், என கூறியுள்ளனர்.
மதுக்கடையால் அவதி
அவனியாபுரம் அனைத்து கட்சியினர் சார்பில் வழங்கப்பட்ட மனு: அவனியாபுரம்-திருப்பரங்குன்றம் ரோட்டிலும், சேர்மத்தாய் மகளிர் கல்லுாரி செல்லும் ரோட்டிலும் மதுக்கடைகள் உள்ளன. இக்கடைகளுக்கு அருகில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. மாநில நெடுஞ்சாலையில் இந்த கடைகள் அமைந்துள்ளன. இதனால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. கடைகளை அகற்ற வேண்டும், என்றனர்.
மேலும் பலர் கோரிக்கைகளை வலியறுத்தி மனு அளித்தனர். பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் வழங்கினார். டி.ஆர்.ஒ., குணாளன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செந்தில்குமாரி, துணை கலெக்டர் சாந்தா மற்றும் பலர் பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!