Advertisement

நிலக்கோட்டைக்கு வைகையில் தண்ணீர் திறக்கப்படுமா:கலெக்டரிடம் வர்த்தகர் சங்கம் வலியுறுத்தல்

நிலக்கோட்டை:'நிலக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியினரின் குடிநீர் பிரச்னை தீர வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வர்த்தகர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.அணைப்பட்டி வைகை ஆற்றில் நிலக்கோட்டை, அம்மையநாயக்கனுார், சின்னாளபட்டி, வத்தலக்குண்டு பேரூராட்சிகள், அதன் வழியோர கிராமங்கள் 20, குடிநீர் திட்டங்களுக்கென 50க்கும் மேற்பட்ட கிணறுகள் அமைந்துள்ளன.
பல மாதங்களாக மழையில்லாமல் வைகை ஆறு வறண்டு போனதால், வைகை ஆற்றில் உள்ள குடிநீர் கிணறுகளும் வற்றிப் போய்விட்டன. பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகங்கள் ஆழ்துளை கிணறுகளை அமைத்து வறட்சியை சமாளித்து வருகின்றன. ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் கிடைக்காத பகுதிகளில் தண்ணீரை விலைக்கு பெற்று சமாளிக்கின்றன.இருந்தபோதிலும் நிலக்கோட்டை, முசுவனுாத்து, கொக்குபட்டி, நுாத்துலாபுரம், சிலுக்குவார்பட்டி, பள்ளபட்டி உட்பட பல கிராமத்தினர் குடிநீர் கிடைக்காமல் பரிதவிக்கின்றனர்.
குடிநீர் ஆதாரமான வைகை அணையிலும் பல மாதங்களாக தண்ணீரின் அளவு அதிகரிக்காமல் இருந்தது. இந்நிலையில் கேரளாவில் பெய்த தென்மேற்கு பருவ மழையால் வைகை அணையின் கொள்ளளவு ஓரளவு உயர்ந்து வருகிறது. இந்த நேரத்தில் மாவட்ட நிர்வாகம் குடிநீர் தேவைக்காக ஆற்றில் தண்ணீர் திறந்து விட ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போது ஆற்றில் வரும் நீரை கிணறுகளுக்கு அருகே, மணலால் தடுப்புகளை ஏற்படுத்தி குடிநீர் கிணறுகள் ஊற்றெடுக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு ஓரிரு முறை வைகை ஆற்றில் தண்ணீர் கிடைத்தால் 2 மாதங்கள் வரை தண்ணீர் பிரச்னையை உள்ளாட்சி நிர்வாகங்கள் சமாளிக்க முடியும்.
இது குறித்து நிலக்கோட்டை வர்த்தகர் சங்க செயலாளர் ராஜேந்திரன் கூறியதாவது: குடிநீர் பிரச்னைக்கு தற்காலிக தீர்வாக ஆற்றில் தண்ணீர் திறப்பது தான் ஒரே வழி. இதனால் மாவட்ட கலெக்டர், வைகை அணை பொறியாளர் மற்றும் பொதுப்பணித் துறையினருக்கு வர்த்தகர் சங்கத்தில் இருந்து தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியுள்ளோம்” என்றார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement