Advertisement

தோல் கழிவுநீர் துர்நாற்றம் போக்க ரூ.3 கோடியில் திட்டம்: அமைச்சர் சீனிவாசன் பேச்சு

திண்டுக்கல்;'திண்டுக்கல்லில் தோல் கழிவு நீரால் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க ரூ.3 கோடியில் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்' என, அமைச்சர் சீனிவாசன் தெரிவித்தார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் வழங்கும் விழா, சின்ன பள்ளபட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை வகித்தார். மருத்துவ இணை இயக்குனர் மாலதி பிரகாஷ் முன்னிலை வகித்தார்.
அமைச்சர் சீனிவாசன் பழநி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் சேவையினை துவக்கி வைத்தார். சின்னபள்ளபட்டியில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, தாலிக்கு தங்கம் என 481 பயனாளிகளுக்கு ரூ.5.29 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அமைச்சர் பேசுகையில், ' குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.1.30 கோடியில் 44 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இத் திட்டத்தில் வரும் ஆண்டில் ரூ. 4.54 கோடியில் 50 குளங்கள் துார்வாரப்படும்.
திண்டுக்கல் பகுதியில் தோல் கழிவு நீரால் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை உள்ளது. இதை நிறைவேற்ற ரூ.3 கோடிக்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அரசின் ஒப்புதல் பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும். குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ஆழ்துளை கிணறுகள் அமைக்கவும், லாரிகள் மூலம் சப்ளை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். விழாவில், டி.ஆர்.ஓ., வேலு, பழனி சப்-கலெக்டர் வினித், முன்னாள் மேயர் மருதராஜ், திண்டுக்கல் ஆர்.டி.ஓ.,(பொறுப்பு) ஜான்சன், பேரூராட்சிகளில் உதவி இயக்குனர் ராஜேந்திரன் கலந்து கொண்டனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement