Advertisement

சிவகங்கையில் மாணவர்கள் மறியல்

சிவகங்கை; சிவகங்கை மன்னர் கல்லுாரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பிற்கு இடம் கிடைக்காத மாணவர்களுடன் அவர்களது பெற்றோரும் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அமைச்சர், எம்.பி., சிபாரிசுகளுக்கு மட்டும் இடம் தருவதாக புகார் கூறினர்.
சிவகங்கையில் உள்ள மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை முடிந்து விட்ட நிலையில் ஏராளமான மாணவர்கள் இடம் கிடைக்காமல் தவித்து வந்தனர். கல்லுாரியில் மேலும் 120 இடங்களில் மாணவர்களை சேர்த்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டது. அந்த இடங்களுக்கான 2ம் கட்ட 'கவுன்சிலிங்' நேற்று துவங்கியது. மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் அந்தந்த பாடப்பிரிவுகளுக்கு சேர்க்கை நடந்தது. இதில் இடம் கிடைக்காத மாணவர்கள் சிலர், பெற்றோருடன் சேர்ந்து கல்லுாரி முன் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மறியிலில் ஈடுபட்டவர்கள் கூறுகையில்,'' எங்களை விட குறைந்த மதிப்பெண்கள் எடுத்துள்ளவர்களுக்கு அமைச்சர், எம்.பி., சிபாரிசு மூலம் படிக்க இடம் கிடைத்துள்ளது. எங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம்,'' என கோஷமிட்டனர்.கல்லுாரி முதல்வர் அழகர்சாமி (பொறுப்பு) கூறுகையில், '' கல்லுாரிக்கு கூடுதலாக அனுமதிக்கப்பட்ட 120 இடங்களுக்கும் மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே அட்மிஷன் நடந்து வருகிறது. முறைப்படி ஒலிபெருக்கியில் மாணவரின் பெயர், மதிப்பெண், பாடம் ஆகியவை அறிவிக்கப்படுகிறது. இதில் எந்த சிபாரிசுக்கும் இடமில்லை. தேர்வு செய்யப்படும் மாணவர்களின் பட்டியல், மதிப்பெண்களுடன் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும். அதில் குறைந்த மதிப்பெண் உள்ள யாருக்காவது இடம் வழங்கப்பட்டிருப்பதாக நிரூபித்தால் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டு, அவருக்கு உறுதியாக இடம் வழங்கப்படும், '' என்றார். அதன் பிறகு இடம் கிடைக்காமல் மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement