Advertisement

போலி கையெழுத்திட்டு ரூ.49.5 லட்சம் மோசடி : மண்டல துணை பி.டி.ஓ., உட்பட 5 பேர் கைது

சிவகங்கை: சிவகங்கையில் போலி கையெழுத்து போட்டு அரசு நிதியில் ரூ.49.5 லட்சம் மோசடி செய்ததாக, மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரி சங்கரன், 4 ஊராட்சி அலுவலர்கள் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சாஸ்தா தெருவை சேர்ந்த சமையன் மகன் சங்கரன், 49. இவர், 16.6.2016 ல் சிவகங்கை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பதவி ஏற்றார்.
இவரது கட்டுப்பாட்டில் 11 ஊராட்சிகள் உள்ளன. இவர், சிவகங்கை வட்டார வளர்ச்சி அதிகாரியின் பெயரில் கடிதம் தயாரித்து, போலி கையெழுத்திட்டு, வேறு ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட அரசு நிதியை சட்டவிதிகளுக்கு புறம்பாக படமாத்துார் ஊராட்சி செயலாளர் அங்காள ஈஸ்வரியின் பெயருக்கு மாற்றியுள்ளார். அவரது பெயருக்கு போலியான முகவரி கொடுத்து வங்கியில் புதிய கணக்கும் துவக்கி இருந்தார்.
பின்னர், சங்கரன், அங்காள ஈஸ்வரி மற்றும் ஊராட்சிகளின் செயலாளர்களான ராஜா (இலுப்பகுடி), கிருஷ்ணன் (குடஞ்சாலி), மருதமுத்து (முடிகண்டம்), ஞானப்பிரகாசம் (அரசனி முத்துப்பட்டி) உட்பட 7 பேருடன் சேர்ந்து குடிநீர் வரி, மின் கட்டணம், மற்றும் இதர செலவுகள் செய்ததாக கணக்கு காட்டி, அரசு நிதி 49 லட்சத்து 6 7 ஆயிரத்து 84 ரூபாயை மோசடி செய்துள்ளனர். ஊராட்சிகளின் நிதி செலவு செய்யப்பட்ட விதம் குறித்து, தணிக்கைக்குழு ஆய்வு செய்தபோது இந்த முறைகேடு தெரியவந்தது.
இதுகுறிதது சிவகங்கை வட்டார வளர்ச்சி அதிகாரி பர்னபாஸ் அந்தோணி சிவகங்கை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மோகன் விசாரணை நடத்தி, சங்கரனை நேற்று முன்தினம் இரவு கைது செய்து, மற்ற 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தார். சங்கரனிடம் நடத்திய விசாரணையில், இந்த மோசடிக்கு மூல காரணமாக திகழ்ந்தது முத்துப்பாண்டி,49, என்பது தெரியவந்தது. அவர் அரசனுார் ஊராட்சி அலுவலராக பணியில் இருந்தபோது ஊராட்சி நிதியில் ரூ.76 ஆயிரம் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டு 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டவர் .
கடும் பணக்கஷ்டத்தில் இருந்த முத்துப்பாண்டி, அடிக்கடி சிவகங்கை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரனை சந்தித்து வந்தார். அப்போது முத்துப்பாண்டி கொடுத்த யோசனைப்படியே, சங்கரனும், அவருக்கு உதவியாக மற்ற 6 பேரும் சேர்ந்து ஒன்றிய நிதியில் ரூ.49.5 லட்சம் வரை மோசடி செய்திருப்பது,போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது பில்லுார் ஊராட்சி அலுவலராக முத்துப்பாண்டி பணிபுரிந்து வருகிறார். அவரையும், மோசடிக்கு உடந்தையாக இருந்த மருதமுத்து, 43, ராஜா,29, கிருஷ்ணன், 49, ஆகிய 4 பேரையும் டவுன் இன்ஸ்பெக்டர் மோகன் நேற்று கைது செய்தார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • kc.ravindran - bangalore,இந்தியா

    வாழ்க தமிழகம். அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி. உன்னை சொல்லி குற்றமில்லை என்னை சொல்லி குற்றமில்லை. அரசியல் கட்சிகள் செய்த குற்றமடி அதன் விளைவுதானித்து பத்துக்கோடி.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement