Advertisement

காரைக்குடி - திருச்சி ரோட்டில் விளம்பர பலகையால்ஆபத்து:எரியாத ஹைமாஸ் விளக்கு; எச்சரிக்காத அறிவிப்பு

காரைக்குடி;காரைக்குடி - திருச்சி இருவழிச்சாலை சந்திப்புகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகையாலும் எரியாத ைஹமாஸ் விளக்குகளாலும் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு தொடர்கிறது.
மத்திய நெடுஞ்சாலை துறையால், திருச்சி -காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை 10 மீட்டர் அகலத்துக்கு விரிவுபடுத்தப்பட்டு, கடந்த 2011-ல் பயன்பாட்டுக்கு வந்தது. எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு 60 மீட்டர் அகலத்துக்கு நில ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. மானகிரி, கோவிலுார், ஓ.சிறுவயல், கழனிவாசல், வ.சூரக்குடி ஆகிய பகுதிகளில் சந்திப்பு ரோடு உள்ளது. காரைக்குடியிலிருந்து செல்லும் வாகனங்கள் இதன் வழியாக நெடுஞ்சாலைத்துறையில் பயணிக்கிறது. திருச்சி விமான நிலையத்துக்கு செல்வதற்கு இந்த வழித்தடம் பிரதானமாக உள்ளது.நாள் ஒன்றுக்கு இந்த ரோட்டில் 1000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கிறது. அவ்வாறு செல்லும்போது, காரைக்குடி சந்திப்பு ரோடுகளிலிருந்து வரும் வாகனங்களால் தொடர் விபத்து ஏற்படுகிறது. காரைக்குடியிலிருந்து பெரம்பலுார் சென்ற வாகனம், கழனிவாசல் விலக்கு பகுதியிலிருந்து ரோட்டிற்கு ஏறும்போது இருவழிச்சாலையில் வந்த வேன் மீது மோதியது. அண்ணன், தம்பி இருவர் பலியாயினர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
கழனிவாசல் விலக்கு அருகே தனியார் நிறுவனங்களின் மிகப்பெரிய விளம்பர பலகை இடம் பெற்றுள்ளது. திருச்சியிலிருந்து வரும் வாகனங்களுக்கு இடது புறம் வரும் வாகனங்கள் தெரிய வாய்ப்பில்லை. இங்கிருந்து செல்லும் வாகனங்களுக்கும், பைபாஸ் ரோட்டில் வரும் வாகனங்கள் தெரிவதில்லை. தேசிய நெடுஞ்சாலைகளில் வளைவு மற்றும் விலக்கு பகுதிகளில் இந்த போர்டுகள் தனியார் விளம்பர ஏஜன்சிகளால் வைக்கப்பட்டுள்ளது.
காரைக்குடி நகராட்சி பகுதியில் மாநில நெடுஞ்சாலை, நகராட்சி சாலை ஓரத்தில் வைக்கும் பிளக்ஸ் போர்டுகளை கடமை தவறாமல் அகற்றும் காரைக்குடி வடக்கு போலீசார் இவற்றை கண்டு கொள்ளவில்லை.
பழனியப்பன், சூரக்குடி: கோவிலுார், ஓ.சிறுவயல், சூரக்குடி, கழனிவாசல் விலக்கு பகுதியில் உள்ள ைஹமாஸ் விளக்குகள் கடந்த பல மாதங்களாக எரிவதில்லை. இருளில் பக்கவாட்டில் வரும் வாகனங்கள் தெரியாததால் விபத்து ஏற்படுகிறது. கழனிவாசல் விலக்கை பொறுத்தவரை, தேசிய நெடுஞ்சாலையிலிருந்து காரைக்குடியை நோக்கிய ரோடு சுரங்க பாதை போன்று உள்ளது.
இந்த ரோட்டை தேசிய நெடுஞ்சாலை உயரத்துக்கு மாற்றி அமைத்து, அகலமாக போட வேண்டும். கழனிவாசல் விலக்கில் மாநில நெடுஞ்சாலை ரோட்டில் வேகத்தடுப்புகளை அமைக்க வேண்டும். இல்லையேல் தொடர் விபத்து ஏற்படும், என்றார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement