Advertisement

கொடுங்கையூர் தீ விபத்தில் நால்வர் 'சீரியஸ்' : கட்டட உரிமையாளர் தலைமறைவு

சென்னை: கொடுங்கையூர் தீ விபத்தில் காயமடைந்தோரில், நான்கு பேர் கவலைக்கிடமாக உள்ளனர். கொடுங்கையூர் தீ விபத்தில் தமைறைவாகி உள்ள, வணிக வளாக உரிமையாளரை, போலீசார் தேடி வருகின்றனர்.
கொடுங்கையூர், மீனாம்பாள் சாலையில், நித்யானந்தம், 52, என்பவருக்கு சொந்தமான, இரண்டு மாடி வணிக வளாகம் உள்ளது. கடையின் தரை தளத்தில், ஏ.டி.எம்., மையம், பேன்சி ஸ்டார் உள்ளிட்ட ஏழு கடைகள் உள்ளன.
தரை தளத்தில், ஒரு மாதத்திற்கு முன், கொடுங்கையூர், எம்.ஆர்.நகரை சேர்ந்த ஆனந்தன், 35 என்பவர், 'ஹாட் சிப்ஸ்' என்ற பேக்கரி கடையை நடத்தி வந்தார்.
கடந்த, 15ம் தேதி இரவு, 11:30 மணிக்கு, கடையில் தீப்பற்றியது. பொதுமக்கள் கொடுத்த தகவலின்படி, கொடுங்கையூர், வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி, எஸ்பிளனேடு பகுதியில் உள்ள தீயணைப்பு வீரர்கள், 30க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்க முயன்றனர்.
அப்போது கடை ஷட்டர் உடைத்து, உள்ளே செல்ல முயன்ற போது, சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில், தீயணைப்பு வீரர் ஏகராஜ் உயிரிழந்தார்; 48 பேர் படுகாயமடைந்தனர்.
தனி மருத்துவர் குழு
கொடுங்கையூர் பேக்கரி கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்தோர், 20 பேர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், 10 பேர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும், 10 பேர், தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பன்னீர் ஆறுதல்
கீழ்ப்பாக்கம் மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து, ஆறுதல் கூறினர். சிகிச்சை முறைகள் குறித்து, டாக்டர்களிடம் கேட்டறிந்தனர். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், சிகிச்சை பெறுவோரை சந்தித்து, நேற்று நலம் விசாரித்தார்.
விதிமீறல்
இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார், தற்செயலான தீ விபத்து என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரிக்கின்றனர். தீ விபத்தில் காயமடைந்த, 'ஹாட் சிப்ஸ்' கடை உரிமையாளர் ஆனந்தன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வருகிறார்.
மேலும், வணிக வளாகத்தின் உரிமையாளர் நித்தியானந்தத்தை, தேடி வருகின்றனர். இவர், விதிமுறைகளை மீறி, 5 அடி, 8 அடியில் கடைகளை அமைத்துள்ளது, விபத்திற்கு பின், அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரில், 14 பேர், 40 சதவீதம் வரையும்; இரண்டு பேர், 30 சதவீதம் வரையும்; நான்கு பேர், 5 - 27 சதவீதம் வரை தீக்காயமடைந்துள்ளனர்.
இதில், பரந்தாமன், பாஸ்கர், பார்த்திபன், அபிமன்யூ ஆகியோர், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11 வயது மோனிஷ் என்ற சிறுவன், 40 சதவீதம் தீக்காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில், செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை பெற்று வருகிறான்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement