Advertisement

71 குழந்தைகளுக்கு இலவச பால் சப்ளை ஓய்வு பெற்ற அதிகாரியின் உயரிய சேவை

சமூகத்தில், நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களில், போட்டி, பொறாமை, ஆசை, வஞ்சகம் என, எத்தனை, எத்தனை முகங்களை பார்க்கிறோம். ஆனால், யாரோ சிலர் தான், சமூகத்திற்கு தங்களை அர்ப்பணித்து வாழ்வாங்கு வாழ்கின்றனர்.

அவர்களில் ஒருவர் தான், சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அடுத்த, ராஜாபாளையத்தைச் சேர்ந்த, உள்ளாட்சி நிதி தணிக்கை துறை, இணை இயக்குனராக இருந்து ஓய்வு பெற்ற பாஸ்கர், 60. இவர், நாள்தோறும், 71 குழந்தைகளுக்கு இலவசமாக, நாட்டு மாட்டின் பால் வழங்கி, சேவையாற்றி வருகிறார்.

பாஸ்கர் கூறியதாவது:

இன்றைய குழந்தைகளுக்கு, தரமான நாட்டு மாட்டு பால் வழங்க வேண்டும் என்ற நோக்கில், ஓய்வுக்கு பின், ராஜஸ்தான், குஜராத், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு சென்று, வீரியமுள்ள நாட்டு மாட்டு இனங்களான, கிர், ஷாகிவால், ஓங்கோல், ராத்தி, ரெட் சிந்தி, காங்கேயம், காராம்பசு இனங்களை சேர்ந்த, 50 மாடுகளை வாங்கினேன்.

ராஜாபாளையத்தில், கோசாலை அமைத்து, பராமரித்து வருகிறேன். ஒவ்வொரு மாடும், 75 ஆயிரம் முதல், 2 லட்சம் ரூபாய் வரை இருக்கும். இதில் கிடைக்கும் பாலை, இப்பகுதி குழந்தைகளுக்கு நாள்தோறும், இரு வேளைக்கும், தலா, அரை லிட்டர் வீதம் இலவசமாக கொடுத்து வந்தேன். அருகில் உள்ள கோவில்களுக்கும் கொடுத்து வந்தேன். ஏழை, பணக்காரன் வித்தியாசம் இல்லாமல், ஒன்றரை ஆண்டுகளில், 71 குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்கி வருகிறேன்.

பால் சப்ளை செய்யவும், மாடுகளை பராமரிக்கவும், 10 பணியாளர்களை வைத்துள்ளேன். என் ஓய்வூதியம், என் மனைவி கல்யாணி, 54; தமிழ்நாடு வடிகால் வாரிய உதவி பொறியாளர், மூத்த மகன் தேவா, 30; வங்கி அதிகாரி, இளைய மகன் தாமு, 27; கல்லுாரி பேராசிரியர் என, அனைவரும் நன்றாக சம்பாதிப்பதால், வருமானத்துக்கு குறைவில்லை.

இந்த சமுதாயம், எங்கள் குடும்பத்துக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தது. எனவே, சமுதாயத்துக்கு எங்களால் முடித்த சேவையாக, பாலை கொடுப்பதில் ஆத்ம திருப்தி கிடைக்கிறது.வளர்க்க முடியாத, வயதான நாட்டு மாடுகள் இருந்தால், அவற்றை அடிமாட்டுக்கு அனுப்ப வேண்டாம்; நான் நல்ல விலைக்கு எடுத்துக் கொள்கிறேன். நாட்டு மாட்டு பால் தொடர்ந்து குடித்து வந்தால், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இதுபோக, கடலுார் மாவட்டம், வடலுாரில் நாள்தோறும், 100 ஏழைகளுக்கு அன்னதானம் அளித்து வருகிறேன். தங்கள் வீட்டு குழந்தைகளுக்கும், இலவசமாக நாட்டு மாட்டு பால் தேவை எனில், 94432 55058 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.வயதானவர்கள் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும், இலவசமாக பால் வழங்க தயாராக உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (11)

 • G.Krishnan - chennai,இந்தியா

  இந்த மாதிரியான மனிதர்களை பார்ப்பதே அரிதாக இருக்கிறது .. . . .இன்னமும் மழை கொஞ்சமேயேனும் பொழிகிறது என்றல் . . . இந்த மாதிரியான மனிதர்கள் இருப்பதினால்தான் என்று நினைக்கிறன் . . . . சுயநலமில்லா சமுதாய தொண்டாற்றும் திரு பாஸ்கர் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் . . .கடவுள் அவருக்கு நிறைய ஆயுளை கொடுத்து அவர் மென்மேலும் தொண்டு செய்ய எல்லாம்வல்ல அந்த ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன் .

 • Prabakaran Srinivasan - Madurai,இந்தியா

  உன்னதமான உயரிய நோக்கம். மனிதருள் மாணிக்கம். இறைவன் இவருக்கு சகல சக்தியையும் அளித்து, துணையிருந்து அருளட்டும். வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.

 • Xavier - Muscat,ஓமன்

  உங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேன்

 • Balamurugan Balamurugan - cuddalore,இந்தியா

  சத்தான நாட்டு பசும் பால் இலவசமாக வழங்கும் சேவைக்கு வாழ்த்துக்கள் வயதான மாடுகளை அடிமாட்டிற்க்கு விற்க்க வேண்டாம் என்று சொன்னதற்க்கு நன்றி

 • thomas -

  அன்பு அளவுக்கு அதிகமாக பெற்று தரும்.இந்த நல்ல உள்ளம் மாடுகளை நேசிக்கிறது இதனால் தான்.பல உயிர்களை காக்கும் அளவுக்கு பால் கெடைகிறது. ஆக எல்லா உயிர்களையும் நேசிப்போம் மற்றவர்களுக்கும் அன்பை வாரி கொடுப்போம்.

 • santha s - theni,இந்தியா

  உங்களின் சேவை மென்மேலும் தொடரட்டும் என்று வாழ்த்தி,உங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேன்

 • மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா

  எண்ணங்கள் தான் வாழ்வு பிறந்த மண்ணிற்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற உயர் நோக்கத்தோடு செயல்படும் பாஸ்கர் அவர்களைப்போல் நாமும் செயல்படுவோம் -வாழ்த்துக்கள்

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  உள்ளாட்சி நிதி தணிக்கை துறை, இணை இயக்குனர். மனைவி தமிழ்நாடு வடிகால் வாரிய உதவி பொறியாளர். 60 வயதில் சபாரி உடை.. மாட்டை பாத்துக்க 10 பணியாள்.. இவர் வாழ்நாளில் அடித்த லஞ்சத்துக்கு 71 குழந்தைகள் பத்தாது. 71,000 குழந்தைகளின் நலம் பேண வேண்டும்.. மனசாட்சியை கேட்டு பதில் சொல்லவும்.

 • sudharshana - chennai,இந்தியா

  இன்றைக்கு படித்ததில் மிகவும் பிடித்தது .. எங்கள் வருமானம் எங்களுக்கே என்று இல்லாமல் அதிலே மற்றவர் பங்கும் இருக்கிறது என்று சொல்லி உதவும் இவருக்கு , குடும்பத்துக்கு ஆண்டவர் அபரிமிதமாக ஆசீர்வாதம் , அனுக்கிரஹம் பண்ணுவார்.

 • Manian - Chennai,இந்தியா

  இவறை "பால் நினைந்தூட்டும் பாஸ்கரன்" என்று வாழ்த்துவோம் ஆனால் சொம்பில் வாங்கி விற்க்கும் சோதாக்களை மாடுகள் மூலம் முட்ட வையுங்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement