Advertisement

மக்களிடையே மொழி ரீதியில் பிளவு? : ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் நடந்த சம்பவத்தால் அச்சம்

லண்டன்: தமிழ் சினிமா பாடல்கள் அதிகம் இடம் பெற்றதால், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை பாதியில் புறக்கணித்து, நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ரசிகர்களின் செயல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

புறக்கணிப்பு : பிரிட்டன் தலைநகர் லண்டனில், 8ம் தேதி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது குழுவினர், 'நேற்று, இன்று, நாளை' என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடத்தினர்.
நிகழ்ச்சியை காண வந்த ரசிகர்களில் சிலர், தமிழர்களாகவும், சிலர் வட மாநிலங்களை சேர்ந்தவர்களாகவும் இருந்தனர்.அந்த நிகழ்ச்சியில், தமிழ் மற்றும் ஹிந்தி மொழி திரைப்பட பாடல்கள் பாடப்பட்டன. தமிழ் பாடல்களை விரும்பாத வட மாநில ரசிகர்கள், பாதியில் நிகழ்ச்சியை புறக்கணித்து, அங்கிருந்து வெளியேறினர்.அதுமட்டுமின்றி, ரஹ்மான் குழுவினரை விமர்சித்து, சமூக வலைதளங்களில் கருத்துப் பதிவு செய்தனர்.அதில், 'ரஹ்மான் ஒரு இந்தியர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பெரும்பான்மை மக்களுக்கு புரியும் மொழியில் பாடல்களை பாடாமல், தமிழில் பாடல்களை பாடியது வேதனை அளித்தது' என, கருத்து பதிவு செய்தனர். அதே போல், 'ரஹ்மானுக்கு, எந்த தமிழ் பாடலும் ஆஸ்கர் விருதை பெற்றுத் தரவில்லை; அதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்' என்றும், கருத்துப் பதிவிட்டனர். இந்நிலையில், இது போன்ற கருத்துகளுக்கு பதிலடி தரும் வகையில், 'ரஹ்மான் இந்தியாவின் சொத்து. ஒரு மாபெரும் கலைஞரை, மொழி ரீதியில் பிரித்துப்பார்க்கக் கூடாது' என சிலரும், 'ஆஸ்கர் விருது பெற்றபோதே, ரஹ்மான், முதலில் தமிழ் மொழியில் தான் பேசினார்.அவர் முதலில் தமிழர்; அதன் பின்னரே இந்தியர்; அதையும் தாண்டியே அவர் ஒரு சர்வதேச பிரபலம்' என, ஒரு சாராரும்
கருத்துப் பதிவிட்டுள்ளனர்.

அச்சம் : இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:ரஹ்மானின் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகர்கள், மொழியை காரணம் காட்டி, அதை புறக்கணித்ததும், சமூக வலைதளங்களில் மொழியை முன்னிலைப்படுத்தி, மாறுபட்ட கருத்துக்களை பகிர்வதும், சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொழி ரீதியில், இந்தியர்கள் மீண்டும் பிளவு படத்துவங்கியுள்ளனரா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது; இது, ஆரோக்கியமான சமுதாயத்திற்கு வழி வகுக்காது. எதையும், சமநிலையான மனநோக்குடன் பார்க்கும் எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், லண்டன் நிகழ்ச்சிக்குப் பின், அமெரிக்காவில் ரஹ்மான் குழுவினர் நடத்திய நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர். அதிலும், தமிழ், ஹிந்தி மொழிப் பாடல்கள் பாடப்பட்டன. ஆனால், லண்டனில் நடந்தது போன்ற எவ்வித விரும்பத்தகாத சம்பவங்களும் அங்கு நிகழவில்லை.தன் நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து
ஆதரவு அளித்து வரும், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக, ரஹ்மான், அந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

ரசிகர்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை. என்னால் முடிந்த வரை, சிறந்த வகையில், ரசிகர்களை மகிழ்வித்துள்ளேன்; இனியும் தொடர்ந்து மகிழ்விப்பேன். என் இசைப் பயணத்தில் இதுவரை ஆதரவளித்த, தொடர்ந்து ஆதரவு அளிக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி.

ஏ.ஆர்.ரஹ்மான், இசையமைப்பாளர்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (7)

 • N. Sridhar - Kanchipuram

  தேவையற்ற சர்ச்சை, இந்தியன் என்ற உணர்வே மேலோங்கி இருக்க வேண்டும் இதை பெரிது படுத்தாமல் விட்டு விட வேண்டும். வாழ்க பாரதம்.

 • Shanu - Mumbai,இந்தியா

  வடஇந்தியர்கள் தமிழக மக்களின் மீது இருக்கும் வெறுப்பை காட்டுகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் 12 தமிழ் பாடல்களும் 16 இந்தி பாடல்களையும் பாடி உள்ளார். இதில் குற்றம் காணுவது தவறு. AR ரகுமான் அவர்கள் யாருக்கும் பிரச்சினை செய்யாத உயர்ந்த மனிதர். அவருக்கு பிரச்சினை செய்வது மிக தவறு. AR ரகுமானுக்கு இசை தான் மொழி.

 • Gnani - Casabalanca,மொராக்கோ

  இசைக்கு மொழி கிடையாது. திரு ஏ ஆர் ரஹ்மான் அவர்கள், கங்கை வெள்ளம். சங்குக்குள் அடக்க முடியாது. ரசிகர்கள் மனதை விசாலமாக வைத்து பார்த்தல் அவசியம். எல்லா புகழும் இறைவனுக்கே என்பவர் அவர். அவரை வசை பாடினால் அதையும் இறைவனே வாங்கி கொள்வார் .

 • ganapati sb - coimbatore,இந்தியா

  இசை மொழிகளுக்கு அப்பாற்பட்டது என்றாலும் அர்த்தம் புரிந்து கொண்டு ரசிப்பதை போல அர்த்தம் புரியாமல் ரசிக்கும் பொது முழு ஈடுபாடு வருவதில்லை.ஆகையால் நிகழ்ச்சிக்கு வந்த சிலர் தனது சொந்த அவசரப்பணிகளுக்காக எழுந்து சென்றதை வைத்து எழுப்பும் தேவையற்ற சர்ச்சை இது. ரஹ்மான் இனி தமிழ் தெரியாதவரையும் இசை நிகழ்ச்சிக்கு வர அனுமதி அளித்திருந்தால் முடிந்தவரை தமிழ் மற்றும் இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியான மணிரத்னம் சங்கர் முருகதாஸ் போன்றோர் பட பாடல்களை பாடினால் மொழி புரியாவிட்டாலும் ஏற்கனவே கேட்ட இசை ராகம் என்பதால் இவ்வாறு சிலர் நடப்பதும் அறவே நிகழாது. அப்போது பாடலின் பல்லவி ஒரு தடவை தமிழ் ஒரு தடவை ஹிந்தி சரணத்தில் ஒரு சரணம் தமிழ் மறு சரணம் ஹிந்தி என பாடி இருவரையும் இசையால் கட்டிப்போடலாம். இதை செய்ய இரு மொழிகளிலும் இசை அமைத்து புகழ் பெற்றிருக்கும் ரஹ்மானால் மட்டுமே முடியும்.

 • தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா

  இங்கு ஒரு அரசே பழம் தமிழுக்கு உரிய மரியாதை அளிக்காமல் இருக்கின்றது அவர்களின் அருவருடிகள் சித்தாங்க கொண்ட வானர கூட்டம் என்ன செய்யும் இதைத்தான் செய்யும் இதில் மதம் வேறு வருகிறது

 • அப்பாவி -

  இவிங்க டிக்கெட் விக்கும் போது வேறவிதமா சொல்லி வித்துருவாங்க ... ஸ்ரேயா கோஷல் இசை நிகழ்ச்சின்னுட்டு ஏகபட்ட தமிழ் ரசிகர்கள் டிக்கட் வாங்கிட்டுப் போய் வுக்காந்தா மருந்துக்கு ஒரு பாட்டு பாடிட்டுப் போனார். மக்கள் எதிர்பார்ப்பை அறியாமல் பாடிவிட்டு வந்தால், காசு குடுத்து டிக்கெட் வாங்குனவன் வயறு எரியாதா?

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  சமீபகாலமாக ஒரு ஆங்கில டிவி சானல் மொழி பிரச்னையை பெரிதாக்கி விவாதங்கள் வைத்து காசு பார்க்கிறது அவர்கள் ஊதிப்பெரிதாக்கிய விஷயம்தான் இது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement