Advertisement

சென்னை பேக்கரியில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து விருதுநகர் தீயணைப்பு வீரர் பலி; 48 பேருக்கு தீவிர சிகிச்சை

சென்னை கொடுங்கையூரில் நேற்று முன் தினம் இரவு, பேக்கரி கடையில் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க சென்ற தீயணைப்பு வீரர்களில் ஒருவர் பரிதாபமாக பலியானார். விபத்தை வேடிக்கை பார்த்தவர்கள், மொபைல் போனில், 'செல்பி' எடுத்தவர்கள் என, 48 பேர் காயம் அடைந்தனர்.
சென்னை, கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்தவர் நித்யானந்த். இவருக்கு அதே பகுதியில் உள்ள கண்ணதாசன் நகர், மீனாம்பாள் சாலை சிக்னல் அருகே, இரண்டு மாடிகள் உடைய வணிக வளாக கட்டடம் உள்ளது. தரை தளத்தில், ஏ.டி.எம்., இயந்திரம் மற்றும் பேக்கரி உள்ளிட்ட கடைகள் உள்ளன. முதல் மற்றும் இரண்டாவது மாடிகளில், வங்கி மற்றும் குடியிருப்புகள் உள்ளன.

இந்த வணிக வளாகத்தில், 10 நாட்களுக்கு முன், கொடுங்கையூர், எம்.ஆர்., நகரைச் சேர்ந்த, ஆனந்த், 35, என்பவர், தரை தளத்தில் பேக்கரி கடை திறந்துள்ளார். வட மாநிலத்தை சேர்ந்த, இரண்டு வாலிபர்கள் மாஸ்டர்களாக வேலை பார்த்தனர்.நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு, ஆனந்த் மற்றும் கடை ஊழியர்கள் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றனர். இரவு, 11:10க்கு கடையில் இருந்து பெரும் புகை கிளம்பியது. இதனால், அந்த கட்டடத்தில் குடியிருந்தவர்கள், உறவினர்களுடன் வெளியேறினர்.

அதற்குள், தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. தென்னை மரம் உயரத்திற்கு, தீ கோரத்தாண்டவம் ஆடியதால், அப்பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் திரண்டனர்.

கொடுங்கையூர், வியாசர்பாடி உள்ளிட்ட காவல் நிலைய போலீசார் மற்றும் எழில் நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைக்க முயன்றனர். வேடிக்கை பார்க்க வந்த மக்களால், தீயணைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. பின், போலீசார் அவர்களை விரட்டி அடித்து பல மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். பின், கட்டடம் முழுவதும் தண்ணீரை பீய்ச்சியடித்து குளிர்விக்கும் முயற்சியில் இறங்கினர்.

தீ விபத்து நிகழ்ந்த கடையின் வெளிப்புறம் முழுவதையும் தண்ணீரால் தீயணைப்பு வீரர்கள் குளிர்வித்தனர். பின் கடையின் ஷட்டரை தொட்டு பார்த்தபோது, வெப்பம் சற்று குறைவாக இருந்தது. இதனால் கடையின் உட்பகுதியையும் குளிர்விக்க முடிவு செய்தனர். தீயணைப்பு வீரர்கள் ஏகராஜ், 52 (விருதுநகரை சேர்ந்தவர்), ராஜதுரை, 54; லட்சுமணன், 48 உள்ளிட்ட நான்கு பேர் போலீஸ், எஸ்.ஐ., விமலேஷ், 56, ஹரிஹரபுத்திரன் உள்ளிட்டோர், இரும்பு கம்பி உதவியுடன், ஷட்டரை உடைக்க முயன்றனர். அதை, 200க்கும் மேற்பட்டோர் வேடிக்கை பார்த்தபடி நின்றனர்.

தீயணைப்பு வீரர் ஏகராஜ், ஷட்டரை உடைத்து, மேலே துாக்கிய போது, கண்ணிமைக்கும் நேரத்தில் பலத்த சத்தத்துடன், கடையின் உள்ளே இருந்த சமையல் காஸ் சிலிண்டர் வெடித்து, நாட்புறமும் சிதறியது. இதனால் தீ ஜூவாலையுடன் ஏகராஜ், 10 அடி துாரத்திற்கு துாக்கி வீசப்பட்டார். அவருக்கு, தீக்காயங்களுடன், தலையின் பின் பக்கம் பலத்த காயம் ஏற்பட்டு, உயிருக்கு போராடினார்.

ஏகராஜுடன் இருந்த மற்ற தீயணைப்பு வீரரகள், போலீசார் மற்றும் வேடிக்கை பார்த்தவர்கள் மீதும் தீ பரவியது. அவர்கள், ஒருவர் மீது ஒருவர் சரிந்து விழுந்ததால், 48 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களில், 10க்கும் மேற்பட்டோர், பலத்த காயம் அடைந்தனர். அனைவரும், கீழ்ப்பாக்கம் மற்றும் ஸ்டான்லி அரசு மருத்து வமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீ விபத்தில் படுகாயமடைந்த, மற்றொரு தீயணைப்பு வீரர் துரைராஜ், ஆபத்தான
நிலையில், சென்னை, அப்பல்லோ மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில், ஏராளமான வாகனங்களும் எரிந்து நாச மாகின. விபத்து குறித்து, கொடுங்கையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். விபத்தில், கடை உரிமை யாளர், ஆனந்திற்கும் காயம் ஏற்பட்டுள்ளது. கட்டட உரிமையாளர், நித்தியானந்த் தலைமறைவாகி விட்டார்.

முதல்வர் ஆறுதல்தீ விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெறுவோரை சந்தித்து, முதல்வர் பழனிசாமி ஆறுதல் கூறினார். பின், அவர் கூறுகையில், ''தீயணைப்பு துறையின ருக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை; அதனால், தீயணைப்பு வீரர் பலியாகி உள்ளார் என்பதை ஏற்க இயலாது. அவர் போதிய பாதுகாப்பு டன், ஷட்டரை திறந்த போது சிலிண்டர் வெடித்து உயிரிழந்துள்ளார்,'' என்றார்.

அதேபோல, தீயணைப்பு துறை இயக்குனர், ஜார்ஜ், சென்னை போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் கமிஷனர், ஜெயராம் உள்ளிட்ட அதிகாரிகளும், சிகிச்சை பெறுவோருக்கு ஆறுதல் கூறினர்.

காரணம் என்னதீயைணைப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது: தீ விபத்து நிகழ்ந்த கடையில், இரும்பு கடாயில் எண்ணை கொதித்து கொண்டே இருந்துள்ளது. அத்துடன், 'மைக்ரோ ஓவன்' இயக்கத்திலேயே இருந்துள்ளது. இதில், ஏற்பட்ட மின் கசிவால், விபத்து நிகழ்ந்துள்ளது. கடையின் உரிமையாளர் ஆனந்த் மீது போலீசார், பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரை கைது செய்யவும் முடிவு செய்துள்ளனர்.

தீ விபத்து நிகழ்ந்த கடையின் உள்ளே, காற்றழுத்தம் காரணமாகவே சிலிண்டர் வெடித்து சிதறி உள்ளது. இதை, நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே, சிலிண்டர் வெடித்து இருக்கும் என, கணித்தோம்; அது பொய்த்து போனது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஏ.டி.எம்., சேதம்: தீ விபத்தில், தரை தளத்தில் இருந்த, ஏ.டி.எம்., இயந்திரம் முழுவதும் எரிந்து நாசமானது. அதில், வைக்கப்பட்டு இருந்த, மூன்று லட்சம் ரூபாயும் தீக்கிரையானது.

48 பேர் படுகாயம்இந்த கோர விபத்தில், தீயணைப்பு வீரர்கள், துரை ராஜ், ராஜதுரை, லட்சுமணன், பூபாலன், ஜெயபாலன் மற்றும் போலீஸ் எஸ்.ஐ.க்கள், விமலேஷ், 56; ஹரிஹரபுத்திரன், 52 மற்றும் போலீசார் புருஷோத்தம்மன், அந்தோணிராஜ், ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் காயமடைந்தனர். மேலும், வேடிக்கை பார்த்தவர்கள், தீப்பிடித்த பேக்கரி கடை அருகே உள்ள ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்தவர்கள் என, 48 பேர் காயமடைந்தனர்.

'செல்பி'யால் வந்த வினைபேக்கரி கடையில் தீ விபத்து நிகழ்ந்த போது, அங்கு கூடியிருந்த பொதுமக்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபடாமல், அதை மொபைல் போனில், படம் மற்றும் வீடியோ எடுத்து, 'பேஸ்புக்' கில் பதிவேற்றம் செய்வதிலேயே ஆர்வமாக இருந்தனர். சிலர், 'பேஸ்புக்' கில் 'லைவ்' செய்தனர். கொழுந்துவிட்டு எரிந்த தீ தெரியும் வகையில், பலர், 'செல்பி' எடுத்த போது தான், சிலிண்டர் வெடித்து, நாற்புறமும் சிதறியது. 'செல்பி' மோகத்தில் இருந்த பலருக்கு படுகாயம் ஏற்பட்டது.

எஸ்.ஐ.,க்கு பாராட்டுபொதுமக்கள் கூறுகையில், 'தீ விபத்தை வேடிக்கை பார்த்தவர்களை, போலீஸ் எஸ்.ஐ., விமலேஷ் அடித்து விரட்டினார். மற்ற போலீசாரிடமும் பொது மக்களை துரத்தும்படி கூறினார். பின் சிலிண்டர் வெடித்ததில் அவரும் காயமடைந்தார். அவர் மட்டும் விரட்டி அடிக்காமல் இருந்திருந்தால் காயமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கும்' என்றனர்.

யார் காரணம்தீ விபத்து நிகழ்ந்த, கொடுங்கையூர் பேக்கரி கடை யில், தீத்தடுப்பு சாதனங்கள் எதுவும் இல்லை. அது பற்றி, தீயணைப்பு துறையினரும் கண்டு கொள்ளா மல் இருந்துள்ளனர். இதனால், ஏகராஜ் என்ற தீயணைப்பு வீரரின் உயிர் பலியாகி உள்ளது. இது போன்ற விபத்துகள் இனிநடக்காமல் இருக்க, தீயணைப்பு துறையினர் விழிப்புடன் இருக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. தீ விபத் தில் உயிரிழந்த, தீயணைப்பு வீரர் ஏகராஜின் உடல், அவரது சொந்த ஊருக்கு எடுத்து செல் லப்படும் முன்,தீயணைப்பு துறை இயக்குனர் ஜார்ஜ் உள்ளிட்ட அதிகாரிகள், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தீவிர சிகிச்சைக்கு ஏற்பாடுசுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தீ விபத்தில் காயமடைந்தோ ருக்கு, இதயம், நரம்பியல் என, பல துறைக ளைச் சேர்ந்த டாக்டர்கள், தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். நான்கு பேருக்கு, 40 சதவீதத்திற்கும் குறைவாகவும், பலருக்கு லேசான காயமே ஏற்பட்டுள்ளது. அனைவருக் கும் தீவிர சிகிச்சைக்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

இறந்த வீரர் குடும்பத்திற்குரூ.13 லட்சம் நிதியுதவிதமிழக அரசு செய்திக்குறிப்பு: பேக்கரி கடை தீ விபத்தில் உயிரிழந்த, தீயணைப்பு வீரர் ஏகராஜ் குடும்பத்திற்கு, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, மூன்று லட்சம் ரூபாய்; கருணை தொகையாக, 10 லட்சம் என, மொத்தம், 13 லட்சம் ரூபாய் வழங்கப்படும். சிறப்பு நிகழ்வாக, அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, அரசு பணி வழங்கப்படும்.

மேலும், தீ விபத்தில் பலத்த காயமடைந்த வர்களுக்கு, தலா, 50 ஆயிரம் ரூபாய்; லேசான காயமடைந்தோருக்கு, தலா, 25 ஆயிரம் ரூபாயும், முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும். சிகிச்சை பெறுவோ ருக்கு, சிறப்பு சிகிச்சை அளிக்க, சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவ துறைக் கும் உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாற்றுப்பணிக்கு சென்று பலியான விருதுநகர் வீரர்சென்னை கொருக்குப்பேட்டை பேக்கரி தீவிபத்தில் பலியான தீயணைப்பு வீரர் ஏகராஜ் விருதுநகரை சேர்ந்தவர். மாற்றுப் பணிக்காக சென்றவர் விபத்தில் இறந்தார்.

விருதுநகர், வச்சக்காரப்பட்டி அருகே தடங்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஏகராஜ். சென்னை பேக்கரியில் தீவிபத்து ஏற்பட்டவுடன், கொருக் குப்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் மாற்றுப் பணியில் இருந்த ஏகராஜ் உள்ளிட்டோர் முதலில் சென்றனர்.

தீ பரவாமல் தடுத்தபோது காஸ் சிலிண்டர் வெடித்தது. இதில், ஏகராஜ் இறந்தார். அவரது உடல் நேற்று இரவு வச்சக்காரப்பட்டி வந்தது. கலெக்டர் சிவஞானம், ராஜராஜன் எஸ்.பி., தீயணைப்புத் துறை துணை இயக்குனர் சரவணக்குமார், மாவட்ட தீயணைப்பு அதிகாரி சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

விபத்தில் பலியான ஏகராஜ், தீயணைப்பு துறையில் 1991ல் சேர்ந்தார். இவரது மனைவி பழனியம்மாள். மூத்த மகன் வீரமணிகண்டன், 28. சென்னை தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இரண்டாவது மகன் விஜய சரவணன், 26, திருவள்ளூர் மாவட்டத்தில் தீயணைப்புத் துறையில் பணிபுரிகிறார். மகள் விஷ்ணுபிரியா.

தீயணைப்புத் துறையில் ஆள் பற்றாக்குறை இருப்பதால், சென்னையில் பணியாற்ற 10 நாட்களுக்கு ஒருவர் வீதம், விருதுநகர் உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து தீயணைப்பு வீரர்கள் மாற்றுப் பணிக்கு செல்வர். ஜூலை 8ல் ஏகராஜ், சென்றார். ஜூலை 18ல் அவர் வீடு திரும்ப வேண்டியவர்.

உருக்கும் சோகம்தீ விபத்தில் இறந்த தீயணைப்பு வீரர் ஏகராஜின் மனைவி மற்றும் இரு மகன்கள் இரு நாட்க ளுக்கு முன், சென்னை வந்தனர். ஏகராஜுடன், மெரினா கடற்கரைக்கு சென்றதோடு, ஜவுளி கடைகளுக்கும் சென்று, புத்தாடைகள் எடுத்து உள்ளனர்.

தீ விபத்து நடந்த நேற்று முன் தினம் மாலை தான் அவர்களை சொந்த ஊரான விருது நகருக்கு அனுப்பி வைத்துள்ளார். அவர்கள் ஊர் போய் சேருவதற்குள், இடியாய் அவர் இறந்த செய்தி, அவர்களை சென்றடைந் தது. இதனால், அவர்கள் பாதி வழியில் இறங்கி சென்னை திரும்பினர்.ஏகராஜ் உடலை பார்த்து, மனைவி, மகன்கள் கதறி அழுத சம்பவம் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. அவர்கள் நேற்றிரவு ஏகராஜ் உடலுடன் சொந்த ஊர் திரும்பினர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (6)

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  அமெரிக்காவில் ஓட்டல் ஆரம்பிக்க வேண்டுமானால், எல்லா விதிகளையும் கடைபிடித்து அதிகாரிகள் பரிசோதனை செய்து ஆரம்பிக்கலாம் என்ற பிறகே பிசினஸ் தொடங்க முடியும். இங்கே ஒரு மெஸ் ஆரம்பிக்க வேண்டுமானால் நாளையே ஆரம்பித்து விடலாம் எந்த தடையும் இன்றி.

 • Balamurugan Balamurugan - cuddalore,இந்தியா

  Lpg சிலின்டர் வெடிக்கும் அதனால் அதை யாரும் புறக்கனிக்க மாட்டார்கள் இதை வைத்து அரசியல் செய்யவும் முடியாது அதனால் கதிராமங்கலம் போகலாம்

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  இவ்வளவு புத்திசாலி மக்களைத்தான் திராவிட கட்சிகள் உருவாக்கி வைத்துள்ளன. அடுத்தவன் சாவில் கூட செல்பி. நான் 20 வருடங்களுக்கு மேலாக செல்போன் உபயோகிக்கிறேன் (நோக்கியா இந்தியாவில் விற்க ஆரம்பித்த காலத்தில் நோக்கியா மொபைல் என்ஜினீயராக பணியாற்றி உள்ளேன் ) ஸ்மார்ட் போன் வந்த காலத்தில் இருந்து தற்போது வரை ஒரு சில செல்பி தான் எடுத்திருப்பேன் தேவைப்படும் இடத்தில். தொழில் நுட்பம் தவறல்ல, அதை பயன்படுத்த தெரியாதவன் மேல்தான் தவறு.

 • christ - chennai,இந்தியா

  இந்த செல்பியை கண்டு பிடித்தவனை அடிக்கணும். இந்த செல்பி மோகத்தால் பல விபத்துகள் நடந்து என செய்திகளில் படித்தும் நம்ம ஜனங்களுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல எத தான் போட்டோ எடுக்கணும் என்கிற விவஸ்த இல்ல ?

 • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

  பத்து நாட்களுக்கு முன் தான் கடையியே திறந்து இருக்கிறார்கள் கடையில் தீ தடுப்பு சாதனங்கள் எதுவும் இல்லை கடையை திறப்பதற்கு முன் உரிய அரசாங்க பிரிவு பகுதியினிடமிருந்து ஒப்புதல் சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும் குடியிருப்புகளும் அந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதால் சான்றிதழ் கொடுக்கும் முன் அரசாங்கம் மிகுந்த கவனமாக இருந்திருக்க வேண்டும் பேக்கரி அடுக்களை குறுகியதாக இல்லாமல் பரந்த இடம் உள்ளதாக இருப்பது நல்லது ..இரவு நேரம் கடைசியாக கடையை விட்டு செல்பவர்கள் எல்லாம் அணைக்கப்பட்டிருக்கிறதா என்பதை நிச்சய படுத்த வேண்டும் ...எல்லாமே பணம் என்று ஆகிவிட்ட நிலையில் அரசாங்க அதையும் குறை சொல்வதை தவிர வேற வழியில்லை

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  சென்னையிலுள்ள எந்த சிறு ஓட்டலிலுமே தீத்தடுப்பு சாதனமோ பயிற்சியோ இல்லை ஆனாலென்ன வாக்கு வங்கி அரசியலாயிற்றே

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement