Advertisement

விபத்தில்லா மாவட்டமாக்க கலெக்டர் அழைப்பு:மக்கள், அதிகாரிகளிடம் கோரிக்கை

திண்டுக்கல்;திண்டுக்கல்லில் கடந்த மார்ச் மாதம் வரைக்கும் 205 பேர் இறந்துள்ளனர். இதனால் விபத்துக்களை தடுக்க பொதுமக்களும், அதிகாரிகளின் ஒத்துழைப்பு தேவை என கலெக்டர் வினய் வலியுறுத்தினார்.திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விபத்து குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் கூறியதாவது: தமிழகத்தில் அதிகளவு விபத்துக்கள் திண்டுக்கல்லில் நடந்து வருகிறது. இங்கு பல தேசிய நெடுஞ்சாலைகளும், மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளன. பல இடங்களில் ஒளிரும் விளக்குகள் இல்லை.
தேசிய நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடங்களில் சிறிய வேகத்தடைகளை அமைக்க வேண்டும். கடந்த மார்ச் 31ம் தேதி வரைக்கும் 205 பேர் இறந்துள்ளனர். இதற்கு பின்பு பலரும் இறந்தும், காயமடைந்துள்ளனர். விபத்துக்களால் அந்த குடும்பமே நிலை குலைந்து போகிறது.டிரைவரின் கவனக்குறைவு: டிரைவரின் கவனக் குறைவால் விபத்துக்கள் நடந்ததாக கணக்கு காட்டுகின்றனர். எந்த காரணத்திற்காக விபத்துக்கள் நடந்தது, அதற்கு தீர்வு காண்பதற்கு என்ன வழிகளை செய்ய வேண்டும் என்பதை விளக்குவதில்லை. இதுமாதிரி செய்தால் சம்பந்தப்பட்ட இடத்தில் விபத்துக்கள் நடக்காமல் நாம் தடுக்க முடியும்.
நத்தம், வேடசந்துார், ஒட்டன்சத்திரம், பழநி, வத்தலக்குண்டு ரோடு உட்பட பல இடங்களில் ஒளிரும் விளக்குகள், விபத்து குறித்த எச்சரிக்கை பலகை மற்றும் குறியீடுகளை அமைப்பதற்கு நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து செயல்பட வேண்டும். திண்டுக்கல்லை விபத்தில்லா மாவட்டமாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும், என்றார். இதில் சக்திவேல் எஸ்.பி., டி.ஆர்.ஓ., வேலு, டி.எஸ்.ஓ., ஜான்சன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement