Advertisement

‛கடலில் மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள்...விரக்தி!  கடனில் ஓடுது மீனவ கிராமங்களின் வாழ்க்கை

பழவேற்காடு:பருவ நிலை மாற்றம் மற்றும் ஏரிக்கு நீர்வரத்து இல்லாததால், கடலில் மீன் வளம் குறைந்து, கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள், மீன்கள் ஏதும் கிடைக்காமல் விரக்தி அடைந்துள்ளனர். அன்றாட வாழ்க்கைக்கு, வீட்டு பொருட்களை அடமானம் வைத்தும், கடன் வாங்கியும் செலவிட்டு வருகின்றனர்.
வங்காள விரிகுடா கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள பழவேற்காடு மீனவப் பகுதியில், கூனங்குப்பம், அரங்கம்குப்பம், வைரவன்குப்பம், கோரைகுப்பம் உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட கிராமத்தினர், கடலில் மீன்பிடி தொழில் செய்கின்றனர்.
கடந்த மாதம் இறுதி வரை, மீனவர்கள் வலையில், சூரை, அயிலை, மத்தி, வஞ்சிரம் உள்ளிட்ட மீன்கள் கிடைத்து வந்தன. ஒரு வாரமாக, கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் வலையில், மீன்கள் கிடைப்பதில்லை.ஒரு படகிற்கு, குறைந்தது, 1,000 ரூபாய் டீசல் போட்டு, மீன்பிடிக்க செல்கின்றனர். நள்ளிரவு சென்று, அடுத்த நாள் பகலில், கரை திரும்பும் மீனவர்கள் வலையில் மீன்கள் ஏதும் சிக்காமல் காலி படகுகளுடன் திரும்புகின்றனர்.
அன்றாட குடும்ப வாழ்க்கைக்கு, வீடுகளில் உள்ள பொருட்களை அடகு வைத்தும், கடன் வாங்கியும் செலவிட்டு வருகின்றனர். மீன்பிடி தொழில் இல்லாததால், மீனவர்கள் மீன்பிடி வலைகளை சீரமைப்பதிலும், படகுகளை சரி செய்வதிலும் ஈடுபட்டிருக்கின்றனர்.படகு மற்றும் வலைகள், பழவேற்காடு ஏரிக்கரைகளில் ஓய்வு எடுத்து கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக, மீன்பிடி இறங்குதளம் வெறிச்சோடி கிடக்கிறது.
சில தினங்களாக குறைந்த அளவில் மழை, கடுமையான வெயில், மேகமூட்டம் என, பருவ நிலை மாறி மாறி வருவதால், கடலில் மீன்கள் ஒரு இடத்தில் இல்லாமல் இடம் பெயர் வதாகவும், பழவேற்காடு ஏரிக்கு, நீர்வரத்து இல்லாமல், மீன்களின் உற்பத்தி குறைந்து வருவதாலும், கடலில் மீன்வளம் குறைந்து உள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர்.
கடன் வாங்கி சமாளிக்கிறோம்
சில நாட்களாக, கடலில் மீன்கள் கிடைப்பதில்லை. ஒரு வாரம் தொடர்ந்து கடலுக்கு சென்றால், ஒருநாள் தான் மீன் கிடைக்கிறது. அதில் கிடைக்கும் வருமானமும், டீசலுக்கு கூட கட்டுப்படியா வதில்லை. வீட்டு செலவினங்களுக்கு கடன் வாங்கி சமாளிக்கிறோம். ஆடி மாதம் முடியும் வரை இதே நிலை தான் நீடிக்கும் என்பதால், அது வரை கடனில் தான் வாழ்க்கையை ஓட்ட வேண்டும்.எஸ்.தேசப்பன்மீனவர், அரங்கம்குப்பம், பழவேற்காடு
நீர்வரத்து இல்லாமல் குறையும் உற்பத்தி
பழவேற்காடு ஏரிக்கு, ஆரணி, கொற்றலை ஆறுகளின் நன்னீர் வந்தடைந்து, ஏரியில் உள்ள உவர்ப்பு நீருடன் சேரும். அப்போது, மீன் மற்றும் இறால்களின் உற்பத்தி அதிகமாக இருக்கும். ஏரி துார்வாரப்படாமல் இருப்பதால் நன்னீர் முழுவதும் கடலுக்கு சென்றடைகிறது. மேலும், முகத்துவாரமும் அடைந்து கிடப்பதால், ஏரி மற்றும் கடல் நீருக்குள் சுழற்சி இல்லை. இதனால், கடல் மற்றும் ஏரியில் மீன்வளம் குறைந்துவிட்டது. பழவேற்காடு ஏரியை துார்வாரி, ஆறுகளின் நீரை கடலுக்கு செல்லாமல் ஏரியில் தேக்கி வைத்தால், மீன்வளம் குறையாது. பழவேற்காடு ஏரியை துார்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏ.முருகன், மாநில செயலர், தமிழ்நாடு மீனவர் சங்கம்
ஏரியை துார்வார திட்டம்
தற்போது, பழவேற்காடு முகத்துவாரம் அடைப்பை துார்வார, 26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. பழவேற்காடு ஏரியை துார்வாரவும் திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கான நிதி ஒதுக்கீடு பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும்.மீன்வள துறை அதிகாரிபழவேற்காடு

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • RENU - Redmond,யூ.எஸ்.ஏ

    இதுக்கும் மோடி அரசு தான் காரணம்னு சில கூமுட்டைங்க கருத்து போடும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement