Advertisement

பூமிக்கடியில் மின் கேபிள்கள் சாத்தியமா? கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய கட்டாயம்

சென்னையில், மின் தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப, மின் வினியோக கட்டமைப்பை, போர்க்கால அடிப்படையில், மின் வாரியம் மேம்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு, மக்களிடையே எழுந்துள்ளது.
மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, மின் வாரியம், 400, 230, 110, 33/11 கிலோ வோல்ட் திறன் உள்ள துணை மின் நிலையங்களுக்கு கொண்டு வருகிறது. அங்கு, மின்சாரத்தின் உயரழுத்தம் குறைக்கப்பட்டு, சீராக மின் வினியோகம் செய்யப்படுகிறது.
தமிழக மின் தேவை, 2016 ஏப்., 29ல், 15,343 மெகா வாட்டாக அதிகரித்தது. இதுவே, இதுவரை உச்ச அளவு. சென்னையில், அதே ஆண்டு, ஆக., 19ல், மின் தேவை, 3,101 மெகா வாட்டாக இருந்தது.நடப்பாண்டில், இதுவரை, தமிழக உச்ச மின் தேவை உயர வில்லை. ஆனால், சென்னையில், 2017, மே 30ல், மின் தேவை, 3,332 மெகா வாட்டாக அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது, தொடர்ந்து அதிகரிக்கவும் உள்ளது. ஆனால், அதற்கான மின் வினியோக கட்டமைப்பை மேம்படுத்தாமல், மின் வாரியம் அலட்சியம் காட்டுகிறது. இதனால், தேவையை விட, அதிக மின்சாரம் இருந்தும், மின் சாதன பழுதால், சென்னையில் மின் தடை தொடர்கிறது.
ரூ. 2,565 கோடி
'சென்னை மாநகராட்சி முழுவதும், மின் கம்பிகளை பூமிக்கடியில் கொண்டு செல்லும் திட்டம், இரு ஆண்டு களுக்குள் முடிக்கப்படும்; இதற்காக, 2,565 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது' என, மின் துறை அமைச்சர் தங்கமணி, சட்டசபையில், சமீபத்தில் தெரிவித்தார்.அதற்கான பணிகளை, மின் வாரியம் ஏற்கனவே திட்டமிட்ட நிலையில், இதுவரை, முழுவீச்சில் துவங்கவில்லை. தெருக்களில் செல்லும் மின் கம்பியை, தரைக்கு அடியில் கொண்டு செல்வதன் மூலம் மட்டும், சீரான மின் வினியோக பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது.
அதிக திறன் துணைமின் நிலையங்கள், மின் வழித்தடங்களை அதிக எண்ணிக்கையில் அமைத்து, மின் பகிர்மான கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலமே, தடையில்லா மற்றும் விபத்தில்லாமல், மின் சப்ளை செய்ய முடியும் என, மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர்.
ஆளில்லா விமானம்
தரையில் இருந்து, பல அடி உயரத்தில் செல்லும் மின் கம்பிகளில் ஏற்படும் விரிசல்களை கண்டறிய, முதல் முறையாக, 'ட்ரோன்' என்ற ஆளில்லா விமானங்களை, தற்போது, மின் வாரியம் பயன்படுத்தி வருகிறது. இதன் மூலம், விமானத்தில் பொருத்தப்பட்ட நவீன கேமரா மூலம் பழுதுகளை கண்டறிந்து, உடனுக்குடன் சரிசெய்யப்படுகிறது.
மின் கோபுரங்களில் படர்ந்துள்ள துாசிகளை அகற்ற, 'வாட்டர் வாஷ்' என்ற நவீன தொழில்நுட்பத்தில் மூலம் சுத்தம் செய்தது. இவற்றால், கோடை காலத்தில் வெயில் கொளுத்திய போதும், மின் சாதனங்களில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
அதேபோல், மேற்கண்ட மின் வினியோக கட்டமைப்பு பணிகளை, போர்க்கால அடிப்படையில் துவங்கி, முடிக்கவில்லை எனில், மின்சாரம் தடைபடுவதை தடுக்கமுடியாத நிலை ஏற்படும்திறமையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும்
மின் வாரியத்தில், 230 கி.வோ., திறனுக்கு கீழ் உள்ள துணை மின் நிலையம் மற்றும் வழித்தடங்களை, மின் தொடரமைப்பு கழகம் நிர்வகித்து வருகிறது. அதற்கு கீழ் உள்ள, 110, 33/ 11 துணைமின் நிலையங்கள், வழித்தடங்கள் முதல், மின் வினியோகம் செய்வது வரை, மின் பகிர்மான கழகத்தின் பணி.தமிழகம் முழுவதும், மின் வினியோகம் தொடர்பான பணிகளை, மின் வாரியத்தின் மின் பகிர்மான கழக இயக்குனர் கவனிக்கிறார். சென்னை வடக்கு, தெற்கு என, இரு மண்டலங்களாக செயல்படுகிறது. இவை, தலா, ஒரு தலைமை பொறியாளரின் கீழ் இயங்குகிறது.சென்னை தெற்கு மண்டல தலைமை பொறியாளருக்கு, அடையாறு, போரூர், செங்கல்பட்டு, திண்டிவனம் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகள்; வடக்கு மண்டல தலைமை பொறியாளரின் கீழ், சென்னைமாநகராட்சி எல்லை வரையும், திருத்தணி, கும்மிடிப்பூண்டியைஉள்ளடக்கிய பகுதிகளும் வருகின்றன.
தமிழகத்தில் மொத்த மின் நுகர்வோர் எண்ணிக்கை, 2.80 கோடியாக உள்ள நிலையில், சென்னையின் பங்கு, 40 லட்சத்தை நெருங்கி உள்ளது.இதனால், சென்னை வடக்கு, தெற்கில் இருந்து சில பகுதிகளை பிரித்து, சென்னை மத்திய மண்டலத்தை உருவாக்க வேண்டும். சென்னை மின் வினியோகத்தை திறம்பட கண்காணிக்க, மூன்றுமண்டலங்களையும் உள்ளடக்கி, சென்னை மின் பகிர்மானம் மற்றும் மின் தொடரமைப்பு என, தனி பிரிவுகளை ஏற்படுத்தி, தலா, ஒரு இயக்குனராக, நேர்மையான மற்றும் திறமையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அவர்கள், மின் வாரிய தலைவரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அப்போது தான், சென்னைக்கு தேவையானஉபகரணங்களை வாங்குவதில், அரசியல் குறுக்கீடுகள் இருக்காது.
ஆயிரக்கணக்கான மின் கோபுரங்கள்
வட சென்னை மற்றும் வல்லுார் மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம் மற்றும், பிற மாநிலங்களில் இருந்து வரும் மின்சாரம், காஞ்சிபுரத்தில் உள்ள கலிவந்தப்பட்டு, ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம்; திருவள்ளூர் மாவட்டம் அலமாதி ஆகிய நான்கு இடங்களில் உள்ள, 400 கி.வோ., துணை மின் நிலையங்களுக்கு செல்கின்றன.
அவற்றில் இருந்து, பல பகுதிகளில் உள்ள, 230 கி.வோ., வழித்தடத்தில், சென்னையில் உள்ள, 230 கி.வோ., துணைமின் நிலையங்களுக்கு மின்சாரம் வருகிறது.ஆயிரக்கணக்கான மின் கோபுரங்கள் வழியே சென்னைக்கு மின்சாரம் கொண்டு வரப்படுகிறது.இயற்கை சீற்றங்களால் இதில் ஏதேனும் ஒரு மின் கோபுரம் சேதமடைந்தாலும் சென்னையின் பல பகுதிகள் இருளில் மூழ்கும். வர்தா புயலின்போது 54 மின் கோபுரங்கள் சாய்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.கலிவந்தப்பட்டு துணை மின் நிலையம், 'பவர்கிரிட்' நிறுவனத்துக்கு சொந்தம். மற்றவை, மின் வாரியத்துக்கு சொந்தம்.
மின் தேவை அதிகரித்து வருவதால், ஒட்டியம்பாக்கம், மணலி, கொரட்டூர், கிண்டி, புளியந்தோப்பு, தரமணி, கோயம்பேடு ஆகிய இடங்களில், 400 கி.வோ., துணை மின் நிலையங்கள் அமைக்க, மின் வாரியம் முடிவு செய்தது.அதில், மணலி, ஒட்டியம்பாக்கம் மின் நிலைய கட்டுமான பணிகள் முடிந்தாலும், இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. கிண்டி, கொரட்டூர், புளியந்தோப்பு மின் நிலையங்களுக்கு, மத்திய மின்சார ஆணையம், ஐந்து ஆண்டுகளுக்கு முன், அனுமதி அளித்தும், இதுவரை கட்டுமான பணிகளை வாரியம் துவக்கவில்லை. மற்ற மின் நிலைய பணிகளும் கிடப்பில் உள்ளன. 400 கி.வோ., மின் வழித்தடம் அமைக்கவும், வாரியம் நடவடிக்கைஎடுக்காமல் உள்ளது.

ரூ.1,093 கோடி
வர்தா புயலின்போது, சென்னை மற்றும் புறநகரில் 54 மின் கோபுரங்கள், 30 ஆயிரம் மின் கம்பங்கள் உள்ளிட்ட மின் சாதனங்கள் சேதமடைந்தன. இதனால் மின் வாரியத்திற்கு, 1,093 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
3,332 மெகாவாட்
சென்னையில், 2017, மே 30ல்,மின் தேவை, 3,332 மெகா வாட்டாக அதிகரித்தது.

40 லட்சம்
சென்னையில்மின் நுகர்வோர் எண்ணிக்கை, 40 லட்சத்தை நெருங்கியுள்ளது.
மின்னழுத்த பிரச்னை
மின் தேவை அதிகம் உள்ள இடங்களில், டிரான்ஸ்பார்மர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், 'லோ வோல்டேஜ், ஹை வோல்டேஜ்' என்ற குறைந்த மற்றும் உயர் மின்னழுத்த பிரச்னைகள் ஏற்படுகின்றன.
இவற்றை தவிர்க்க, டிரான்ஸ்பார்மர்களில், 'ஆட்டோமேடிக் பவர் பேக்டர் கன்ட் ரோலர்' என்ற நவீன கருவியை, சில ஆண்டுகளுக்கு முன், மின் வாரியம் பொருத்தியது. டிரான்ஸ்பார்மருக்கு கீழ், சிறிய வெள்ளை பெட்டி இருக்கும்.அதற்குள், அந்த கருவி உள்ளது. அவற்றை, பொருத்தியதோடு சரி; இதுவரை, உதவி பொறியாளர்கள்,பெட்டியை திறந்து கூட பார்த்ததில்லை.முறையாக பராமரிக்காததால், பல சாதனங்கள்பழுதாகி, பயனற்ற நிலையில் உள்ளன. இதனால்,மின்னழுத்த பிரச்னை தொடர்கிறது.அதேபோல், மின் வினியோக பெட்டிகளையும் முறையாக பராமரிக்காததால், மின் தடை, திருட்டு, விபத்து தொடர் கதையாகி வருகிறது.
மழையால் பழுது
சென்னையில், 24,900 மின் வினியோக டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன.சில ஆண்டுகளுக்கு முன், சிமென்ட் கோபுரம் எழுப்பி, அதன் மேல் டிரான்ஸ்பார்மர் கட்டமைப்பு பொருத்தப்படும். அதில், மின் சாதனங்கள் வெளியில் தெரியும் என்பதால், மழையின் போது, தண்ணீர் பட்டு பழுதாகின.இதை தவிர்க்க, தற்போது, ஆர்.எம்.யூ., எனப்படும், 'ரிங் மெயின் யூனிட்' என்ற நவீன டிரான்ஸ்பார்மர் கட்டமைப்பு பொருத்தப்படுகிறது. அதில், டிரான்ஸ்பார்மர் மட்டும் வெளியில் தெரியும்; மற்ற கட்டமைப்பு சாதனங்கள் அனைத்தும், பீரோ போன்ற பெட்டகத்தின் உள்ளே இருக்கும். இதனால், அவற்றில் அடிக்கடி பழுது ஏற்படாது. தற்போது, 10 ஆயிரம் டிரான்ஸ்பார்மர், ஆர்.எம்.யூ.,வாக மாற்றப்பட்டு உள்ளன.
துணை மின் நிலையம், வழித்தடம், மின் சாதனங்களை நிறுவுவது என, அனைத்திற்கும், பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதேசமயம், மின் தடை ஏற்பட்டால், பிரச்னை செய்கின்றனர்.
மத்திய அரசு, மின் திட்டங்களுக்கு உடனே அனுமதி தருவதுடன், அதிகளவில் நிதி உதவியும் செய்கிறது. மின் வாரியத்தின் நிதி நெருக்கடி சீரடைந்து வருவதால், புதிய திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளன. எனவே, மின் திட்ட பணிகளுக்கு, மாநகராட்சி, காவல் துறை, நெடுஞ்சாலை துறை, மக்கள் ஒத்துழைப்பு வழங்கினால், அந்த பணிகளை விரைவாக முடித்து, தடையில்லாமல் மின் சப்ளை செய்யப்படும்.
மின் வாரிய அதிகாரி
230 கிலோ வோல்ட்தண்டையார்பேட்டை, பேசின்பிரிட்ஜ், மயிலாப்பூர், தரமணி உள்ளிட்ட இடங்களில், 230 கி.வோ., திறனில், 26 துணைமின் நிலையங்கள் உள்ளன. அவற்றில், பல மின் நிலையங்கள், ஒரு வழித்தடத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
மத்திய மின்சார ஆணையம், 2013ல், மின் தொடரமைப்பு திட்டமிடலுக்கான உத்திகள் என்ற கையேட்டை வெளியிட்டுள்ளது. அதில், அதிக திறனில் மின்சாரம் கொண்டு செல்ல, துணைமின் நிலையங்களுக்கு இடையில், குறைந்தபட்சம் மூன்று வழித்தடம் இருக்க வேண்டும் என, தெரிவித்துள்ளது.இதன் மூலம், ஒரு வழித்தடத்தில் பழுது ஏற்பட்டு மின்சாரம் செல்வது தடைபட்டாலும், மற்றொரு வழித்தடத்தில் மின்சாரம் கொண்டு செல்லலாம். ஆனால், மின் வாரியம், கூடுதல் வழித்தடம் அமைக்காமல் இருப்பதால், போதிய அளவுக்கு, 230 கி.வோ., துணைமின் நிலையங்கள் இருந்தும், மின் வழித்தட பழுதால், மின்சாரம் கொண்டு செல்வது தடைபடுவது தொடர்கிறது.
110 கிலோ வோல்ட்
சென்னையில், 110 கி.வோ., திறனில், 57 துணைமின் நிலையங்கள் உள்ளன. தலா, ஒரு துணைமின் நிலையத்தில், சராசரியாக, 50 'மெகா வோல்ட் ஆம்பியர்' திறனில், இரு டிரான்ஸ்பார்மர்கள் இருக்கின்றன. ஒன்றில், 50 மெகா வாட் மின்சாரம் கொண்டு செல்லலாம். மின் தேவை அதிகரிப்பதால், ஒவ்வொரு துணைமின் நிலையத்திலும், கூடுதலாக, ஒரு டிரான்ஸ்பார்மர் பொருத்த வேண்டும். இதன் மூலம், அதிக மின்சாரம் கொண்டு செல்வதுடன், ஒரு டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டாலும், மற்றொன்றில் மின்சாரம் செல்ல முடியும்.
33/11 கிலோ வோல்ட்
சென்னையில், 33/11 கி.வோ., திறனில், 116 துணை மின் நிலையங்கள் உள்ளன. அவற்றில் இருந்து, 1,500, 'பீடர்' என்ற மின் வழித்தடம் மூலம், அனைத்து பகுதிகளுக்கும், மின் சப்ளை செய்யப்படுகிறது. அந்த வழித்தடத்தில், தண்டையார்பேட்டை, பெசன்ட் நகர், கிண்டி, அம்பத்துார் ஆகிய இடங்களை உள்ளடக்கிய பகுதிகளுக்கு, தரைக்கு அடியில் கேபிள்; மற்ற பகுதிகளுக்கு, மின் கம்பம் மூலம் மின் வினியோகம் செய்யப்படுகிறது.தரைக்கு அடியில், 2 அடி ஆழத்துக்கு மேல் பள்ளம் தோண்டி, கேபிள் பதிக்க வேண்டும்; ஆனால், அந்த பணிகளை மேற்கொள்ளும் மின் வாரியத்தின் ஒப்பந்த நிறுவனங்கள், செலவை மிச்சப்படுத்த, 1 அடிக்கு கூட பள்ளம்தோண்டாமல், கேபிள் பதிக்கின்றன. இதனால், அரசியல் கட்சிகள், மாநகராட்சி உள்ளிட்டோர்பள்ளம் தோண்டும் போது, கேபிளில்,'பஞ்சர்' ஏற்பட்டு, மின் தடைஏற்படுகிறது.
தரைக்கு அடியில் புதைந்துள்ள கேபிளில் பழுது ஏற்படும் போது, பள்ளம் தோண்டாமல், அதை கண்டறிய, 'கேபிள் பால்ட் லொக்கேட்டர்' என்ற நவீன கருவி பயன்படுத்தப்படுகிறது.அந்த கருவி, மின் வாரியத்திடம், போதிய அளவுக்கு இல்லாததால், பழுது ஏற்படும் போது, அதை குறித்த நேரத்தில் கண்டறிய முடியாததால், அதிக நேரம் மின் தடைஏற்படுகிறது.

ரூ.15 ஆயிரம் கோடி
சென்னையில், 135 கி.மீ., துாரத்துக்கு, மின் கோபுரம் மேல் செல்லும், 230 கி.வோ., திறன் வழித்தடம் உள்ளது. அதேபோல், மின் கம்பம் மேல் செல்லும், 1,110 மின் சுற்று கி.மீ., துாரத்துக்கு உயரழுத்த மின் வழித்தடமும்; மின் கம்பம் மேல் செல்லும், 1.57 லட்சம் கி.மீ., துாரம் தாழ்வழுத்த வழித்தடமும் உள்ளன.மழை, புயலின் போது, மின் கோபுரம், கம்பம் சாய்ந்து, மின் கம்பி அறுந்து விழுந்து, மின் தடை, மின் விபத்து ஏற்படுவது தொடர்கிறது. இதனால், மேற்கண்ட வழித்தடத்தை, தரைக்கு அடியில் அமைக்க, மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, 230 கி.வோ., வழித்தட திட்ட செலவு, 1,215 கோடி ரூபாய்; உயரழுத்த வழித்தடத்துக்கு, 288 கோடி ரூபாய்; தாழ்வழுத்த வழித்தடத்துக்கு, 13,500 கோடி ரூபாய் என, மொத்தம், 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என, மின் வாரியம் மதிப்பிட்டுள்ளது. - நமது நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement