Advertisement

வளமான பாரதத்தை உருவாக்குவோம்! : இன்று உலக மக்கள் தொகை தினம்

உலகில் அதிக மக்கள் தொகையில் சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியா உள்ளது. உலக நிலப்பரப்பில்இந்தியா 2.42 சதவீதம் கொண்டு உள்ளது. ஆனால், உலக மக்கள் தொகையில் 16 சதவீதம் கொண்டுள்ளது. பொதுவாக உலகில் வளர்ச்சி அடைந்த நாடுகளைவிட, வளரும் நாடுகளில்தான் மக்கள்தொகை வளர்ச்சி அதிகமாக உள்ளது. குறிப்பாக, இந்தியாவில் மக்கள்தொகை அதிகம் இருப்பதற்கான காரணம், கல்வி அறிவின்மை, அறியாமை, மூடப்பழக்க வழக்கங்கள், இயற்கை அமைப்பு, சமூக அமைப்பு, ஆண் ஆதிக்கம், இளவயது திருமணங்கள், ஆண் வாரிசு வேண்டி அதிககுழந்தைகளை பெற்றுக்கொள்ளுதல். மக்கள்தொகை பெருக்கத்தால் பல பிரச்னைகளை இந்தியா சந்தித்து கொண்டிருக்கிறது. வறுமை, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளன. மக்கள் தொகைக்கு ஏற்ப வேலை வாய்ப்புகளை உருவாக்க முடிய வில்லை. ஒரு மனிதனுக்கு தினமும் தேவையான 2400 கலோரி உணவுகூட கிடைக்காமல், எத்தனையோ பேர் வறுமையில் வாடுகின்றனர். மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரித்த போதிலும், பெரும்பான்மையான மக்களுக்கு உணவு பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை.
உணவு பகிர்வு சரியாக நடைபெறாததால் பஞ்சம் ஏற்படுகிறது. இதனால் குற்றங்கள் அதிகரிக்கின்றன. மக்களுக்கு பாதுகாப்பின்மை ஏற்படுகிறது. தீவிரவாதத்திற்கும், வன்முறைக்கும் வழிவகுக்கிறது.

நகரில் பெருக்கம் ஏன்? : மக்கள்தொகை பெருக்கத்தால் உணவுப்பொருட்களின் விலை கூடுகிறது. இதனால் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன. அரசின் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன. இதன்மூலம் நாட்டின் முன்னேற்றம் தடைபடுகிறது. கிராமங்களைவிட, நகரங்களில் தான் மக்கள் தொகை பெருக்கம் அதிகரிக்கிறது. தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், போக்குவரத்து, பொழுதுபோக்கு போன்றவை இருப்பதே இதற்கு காரணம். கிராமங்களில் பருவ காலங்களில் மட்டுமே மக்களுக்கு வேலை கிடைக்கிறது. இதனால் மற்ற காலங்களில் வேலை தேடி நகரங்களுக்கு குடிபெயர்கின்றனர். இதனால் ஆண்டுதோறும் நகரங்களில் மக்கள்தொகை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நகரங்களில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த கிராமங்களில் தொழிற்சாலை, போக்குவரத்து, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். கிராம மக்களுக்கு கிராமங்களிலேயே வேலைவாய்ப்பை உருவாக்கித்தர வேண்டும்.

அதிக மக்கள் தொகை நாடு : இந்தியாவின் மக்கள்தொகை சுதந்திரத்திற்கு முன் 30 கோடியாக இருந்தது. இன்று 125 கோடியாக உயர்ந்து உள்ளது. மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் அதிகரித்துக்கொண்டே செல்வதால், 2050ம் ஆண்டில் உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட முதல் நாடாக இந்தியா திகழும் என்பதில் சந்தேகமில்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடை பெறுகிறது. அப்போது கேட்கப்படும் கேள்விகளுக்கு மக்கள் உண்மையான தகவல்களை தரவேண்டும். இதன்மூலம் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சி
எப்படி உள்ளது என்பதை அறியமுடியும். இதன் அடிப்படையில் தான் அரசு புதிய திட்டங்களை
உருவாக்க முடியும்.

கட்டுப்படுத்த முடியுமா? : மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் நிச்சயம் மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்தலாம். இதற்கு அரசு செய்ய வேண்டியவை.
1. எல்லோருக்கும் கல்வியறிவு கிடைக்க வேண்டும். மக்கள்தொகை கல்வியை ஆரம்ப கல்வி முதல் கல்லுாரி வரை கட்டாய பாடத்திட்டமாக கொண்டு வரவேண்டும்.
2. ஒவ்வொரு கிராமத்திலும் குடும்ப நலத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
3. ஒரு குழந்தையுடன் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டவருக்கு அரசு வேலைவாய்ப்பில் சலுகை அளிக்க வேண்டும். சுயதொழில் தொடங்க அரசு நிதியுதவி அளிக்க வேண்டும்.
4. மக்கள்தொகையை கட்டுப்படுத்தும் அரசு நிறுவனங்களுக்கும், அதிகாரிகளுக்கும் பரிசு வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.
5. கருத்தடை சாதனங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.
6. மக்கள்தொகையை கட்டுப்படுத்த கடுமையான சட்ட திட்டங்களை கொண்டு வரவேண்டும்.
7. ஒரு குழந்தையுடன் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட தம்பதியின் குழந்தைக்கு படிப்புகளில் சிறப்பு ஒதுக்கீடு அளிக்கலாம். ஒரு குழந்தையுடன் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட விவசாய குடும்பங்களுக்கு சிறப்பு சலுகைகள் அளித்து வங்கிமூலம் நிதி உதவிகளை
அதிகரிக்க வேண்டும். ரேஷன் கடைகளில் அத்தியாவசியஉணவுப்பொருட்களை கூடுதலாக கிடைக்க செய்ய வேண்டும்.
8. மக்கள்தொகை பெருக்கத்தால் ஏற்படும் அபாயத்தை எடுத்துக்கூறி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இதுபோன்ற திட்டங்களை அரசு செயல்படுத்த முன்வரவேண்டும்.
அனைவருக்கும் வேலை, கல்வி, குடியிருப்பு வசதி, குடிநீர் வசதி கிடைக்க வேண்டுமென்றால், மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்தினால் மட்டுமே முடியும். இந்தியாவில் வறுமை, வேலையில்லா திண்டாட்டத்தை அகற்ற ஒரு வழி மக்கள்தொகை கட்டுப்பாடுதான்.
இந்தியா அறிவியல், கல்வி, பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைய வேண்டுமென்றால், தன்னிறைவு பெற்ற நாடாகவோ, உலகின் தலைசிறந்த நாடாகவோ உருவாக வேண்டுமென்றால் மக்கள்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்தினால் மட்டுமே முடியும்.மக்கள் தொகையை குறைப்போம்; வளமான பாரதத்தை உருவாக்குவோம்.

- ஏ. ஜெரால்டு, சமூகவியலாளர்
திண்டுக்கல். 83443 84681
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement