Advertisement

எம்.ஜி.ஆர்., எனது ரசிகர் : மனம் திறக்கும் பி.சுசீலா

காலத்தால் அழியாத கானங்களை பாடிய வானம்பாடி; ஐம்பதாண்டுகளாக இசையுலகில் இவரது பாடல்கள் இடம் பெறாத நாட்களே இல்லை. தமிழ், மலையாளம், தெலுங்கு உட்பட இந்திய மொழிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்தவர்.


82 வயதிலும் மைக் பிடித்து, 'பார்த்த ஞாபகம் இல்லையோ,' என, இவர் பாடும் பாடலுக்கு மயங்காதவர் யாரும் இருக்க முடியாது. ஐந்து முறை தேசிய விருதுகள் இவரை தேடி வந்துள்ளன. மத்திய அரசு இவரது சாதனையை பாராட்டி பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

இத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரர் திரைப்பட பின்னணி பாடகி பி.சுசீலா.
ஏழை குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக மதுரையில் டி.எம்.சவுந்தரராஜன் ரசிகர் நற்பணி மன்றம் நடத்திய இசை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர் நீண்ட நாட்களுக்கு பிறகு
தினமலர் சண்டே ஸ்பெஷல் மூலம் மனம் திறந்தார். அவருடன் பேசியதிலிருந்து...

* இன்றும் எப்படி இப்படி பாட முடிகிறது ?
இறைவன் அளித்த வரம்.
* மதுரையை பற்றி ?
இதே மதுரை காந்தி மியூசியத்தில் மறைந்த பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜனுடன் பாடியிருக்கிறேன். பதினெட்டு ஆண்டுகளுக்கு பிறகு அவரது மகன் செல்வக்குமாருடன்
பாட வாய்ப்பு கிட்டியது பெரும் பாக்கியம்.
* டி.எம்.எஸ்., உடன் பாடியது பற்றி?
அவருடன் இணைந்து ஆயிரம் பாடல்கள் பாடியதை மறக்க முடியாது. அவரது பாடல்கள் ஒலிக்காத நாட்களே இல்லை. அவரது குரலை போல அவரது மகன் குரலும் அமைந்துள்ளது சிறப்பு. அவரும் உயர்ந்த இடத்திற்கு வருவார் என்ற நம்பிக்கையுள்ளது.
* இளம்பாடகர்கள் பற்றி?
இன்றைய இளம் பாடகர்கள் திறமையானவர்களாகவே இருக்கின்றனர்.
* எம்.ஜி.ஆர்., உங்கள் ரசிகராமே ...
ஒரு முறை ஒலிப்பதிவின் போது நான் பாடியதை மெய்மறந்து ரசித்த எம்.ஜி.ஆர்., மனமுவந்து பாராட்டினார். ''எனக்கு எவ்வளவோ ரசிகர்கள் இருந்தாலும், நான் உங்கள் ரசிகர்,'' என அவர்
கூறியதை இன்றளவும் மறக்க முடியாது. எனது வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரங்களில் ஒன்றாக அதனை கருதுகிறேன், என்றார்.

Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • swaminathan - Chennai,இந்தியா

    இவருக்கு தாதா சாஹேப் பால்கெ விருது வழங்க தென் இந்தியர்கள் அனைவரும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும். பாரத ரத்னா விருதுக்கும் இவர் தகுதியானவர்.

  • JeevaKiran - COONOOR,இந்தியா

    பி சுசிலா, THE LEGEND.

  • Arumugam - Paris,பிரான்ஸ்

    எம் ஜி ஆர் ஜிக்கியின் ரசிகர் என்று கூறியதாக ஞாபகம். T M சௌந்தரராஜனுக்கும் ஜிக்கிதான் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement