Advertisement

'தெய்வக்குழந்தைகளுக்கு' தெய்வம் : மைம் கோபி

'மூன்று வேளை போஜனம், ஒரு நேர துாக்கம் இது தான் வாழ்க்கை. ஆசை இல்லாத மனிதன் இல்லை. எனக்கும் ஆசைகள் இருந்தது. நான் கடந்து வந்த பாதையை பற்றி நாள் முழுதும் பேசிக்கொண்டே இருக்கலாம்,' என மூச்சு விடாமல் மனதில் பட்டதை 'பட்பட்' என ஒளிவு மறைவு இல்லாமல் உரக்க பேசும் குணாதிசயம் படைத்தவர், 'மைம்' கோபி.

பிரபலமான மைம் கலைஞர்கள் 7 பேரின் பெயரை சொன்னால் அதில் தமிழகத்திலிருந்து 'மைம்' கோபியின் பெயரும் ஒன்றாக இருக்கும். இக்கலையில் சிகரத்தை தொட்டிருக்கிறார். இதன் மூலம் சினிமாவிலும் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்து 'கபாலி' உள்ளிட்ட பல படங்களில் வில்லன் மற்றும் பலவித கதாபாத்திரங்களில் முத்திரைப்பதித்திருக்கிறார். சினிமா, மைம் இரண்டிலும் தனிக்கவனம் செலுத்தி வரும் இவர் சமூகத்தில் புறக்கணிக்கப்படும் மக்களை அரவணைப்பு செய்து, ஆதரவளிப்பதை முக்கிய பணியாகவும் கொண்டுள்ளார்.

சென்னையில் இருந்து மதுரைக்கு பார்வையற்ற கல்லுாரி மாணவர்களை விமானத்தில் அழைத்து வந்து அவர்களோடு ஒரு பகல் முழுவதும் ஆட்டம், பாட்டம் என அவர்களை உற்சாகப்படுத்திய காலைப் பொழுதில் டிபன் சாப்பிட வாய் திறந்த போது, அந்த மேஜை முன் நாமும் ஆஜரானோம். அன்பான உபசரிப்போடு பேசத்துவங்கினார்...

சென்னையில் மாநகராட்சி பள்ளியில் தான் படித்தேன். எங்க குடும்பம் 36 பேர் கொண்ட கூட்டுக்குடும்பம். இப்பவும் அப்படித்தான். தாத்தாவை டிரைவர் தாத்தான்னு தான் சொல்லுவோம். அவுங்க பெரியமக்கள். தலைமுறைகளுக்கு வீடு கொடுத்த மக்கள். நல்லது செய்ய தோன்றினால் துணித்து செய். கெட்டது செய்ய நாலுமுறை இல்ல நுாறு முறை யோசி. இது தான் அவங்க எனக்கு கற்றுக் கொடுத்தது.

பள்ளியில் மேடையில் வீரநடை போட கற்றுத்தந்தது ஆசிரியர் நாக முத்து. பச்சையப்பன் கல்லுாரியில் படித்தேன். மவுன மொழியான மைமை எனக்கு கற்றுத்தந்த முதல் குரு மாலிக். அவரது துாண்டுதலில் போட்டிகள் என பல நிலைகளில் வெற்றிகளை குவித்தோம்.

அதன்பின் தொடர்ந்து இந்த கலையிலே பயணித்து வந்தேன். சென்னையில் 'ஜி மைம்' ஸ்டுடியோவை துவங்கி மாணவர்களுக்கு பயிற்சியை துவங்கினேன். எனது மாணவர்கள் ஒழுக்கத்தை
முதலாவதாக கற்க வேண்டும். என் மாணவர்கள் எங்கும் தோற்றுப் போகக்கூடாது.
23 ஆண்டுகளுக்கு பின் என் வாழ்க்கை சினிமா பக்கம் போனது. ரஞ்சித், பாலாஜி, பாண்டியராஜன், அஸ்வின், விஜய் என பல இயக்குனர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு காரணமாக எனது 'மைம்' இருந்தது.
தம்பி ஓருவன் 'தெய்வக்குழந்தையாக' இருந்தான். அவனை சமுதாயம் ஒதுக்க வைத்தது. அதை பார்த்த போது என்னால் தாங்கிக் கொள்ள முடிவில்லை. அவனை தத்து எடுத்து கூடைப்பந்து விளையாட பயிற்சி கொடுத்து கல்லுாரியில் 'கோல்டு மெடல்' வாங்க வைத்தேன். மட்டுமின்றி சந்தோஷ் சிவன் இயக்கிய 'இனம்' படத்தில் கூட நடித்தான். (பேசும் போது கண்கள் கலங்குகிறது) அது முதல் இது போன்ற குழந்தைகள், ஆதரவற்றவர்கள் என யாரை கண்டாலும் அவர்கள் மீது எனக்கு ஒரு கரிசனம் வந்து விடுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் அவர்களுக்கு என ஏதாவது ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறேன். இந்த ஆண்டு பார்வையற்ற தம்பிகளை விமானத்தில் அழைத்து வந்தேன். அடுத்த ஆண்டு விமானத்தில் பறக்க ஆசைப்படும் யாராக இருந்தாலும் அவர்களுக்காக ஒரு விமானத்தை வாடகைக்கு எடுத்து அதில் அவர்களோடு சேர்ந்து நானும் பறப்பேன். சினிமாவில் ஹூரோவாகும் கனவு உண்டு. அதுவும் ஒரு நாள் நிச்சயம் நடக்கும், என்றார்.
வாழ்த்த 91768 18103
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement