Advertisement

பழனிசாமி மறுப்பது ஏன்?

சசிகலா உறவினர், தினகரனை, 34 அ.தி.மு.க., -- எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்த உடன், இவர்கள், பா.ஜ., ஜனாதிபதி வேட்பாளர், ராம்நாத் கோவிந்திற்கு எதிராகத் தான் ஓட்டளிப்பர் என, பேசப்பட்டது. ஆனால், அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல், இந்த, எம்.எல்.ஏ.,க்கள், பா.ஜ., வேட்பாளருக்குத் தான் ஓட்டளிப்பர் என, அறிக்கை வெளியிடப்பட்டது. பா.ஜ.,விற்கு தான் ஓட்டளிக்க வேண்டும் என, சிறையில் உள்ள சசிகலா உத்தரவிட்டு உள்ளாராம். தினகரன் ஜெயிலுக்கு போனதற்கு, பா.ஜ., காரணம் கிடையாது என்கின்றனர், தினகரனுக்கு நெருக்கமானவர்கள்.
இவர்கள், இன்னொரு சுவாரசியமான விஷயத்தையும் சொல்கின்றனர்; தமிழக முதல்வர் பழனிசாமியும், தினகரனும் பேசிக் கொள்வதே இல்லையாம். இவர்கள் இருவரும் பேசிக் கொண்டால், கட்சியின் அனைத்து பிரச்னைகளும் தீர்ந்துவிடும்; எந்த தலைவலியும் இல்லாமல், அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு, அ.தி.மு.க., ஆட்சி நடக்கும் என்கின்றனர், தினகரனுக்கு நெருக்கமானவர்கள்.இவர்கள் இருவரையும் பேச வைக்க, சில, அ.தி.மு.க., தலைவர்கள், பழனிசாமி டில்லி வந்த போது, அவருடனேயே வந்து முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், அந்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.

ஏன், பழனிசாமி, தினகரனுடன் பேச மறுக்கிறார்? தினகரனுடன் பேசினால், தாடிக்காரர், 'ரெய்டு' நடத்துவாரோ என, பழனிசாமி பயப்படுகிறாராம். யாரந்த தாடிக்காரர்? பிரதமர், மோடி தான்! தமிழக அமைச்சர்கள் ஊழல் குறித்த அனைத்து ஆவணங்களும் மத்திய அரசிடம் உள்ளன. இந்நிலையில், சிறை சென்று வந்த தினகரனுடன் தொடர்பு வைத்துக் கொண்டால், மீண்டும் வருமான வரித்துறை, சி.பி.ஐ., ரெய்டு வரும். கடைசியில், ஆட்சி கவிழ்ப்பில் போய் முடியலாம் என்பதால், தினகரனுடன் பேச, பழனிசாமி பயப்படுகிறாராம். மத்திய அரசு சொல்படி ஆட்சி நடத்தி விட்டுப் போவது தான் நல்லது என்பது, முதல்வரின் எண்ணம் என, சொல்லப்படுகிறது.

யாருக்கு மரியாதை?

அ.தி.மு.க.,வின் இரு அணிகளும், பா.ஜ., ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளித்ததோடு, மனு தாக்கல் செய்யும் போது, ராம்நாத் கோவிந்துடன் இருக்க டில்லி வந்தனர். முதல்வர் பழனிசாமிக்கும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கும், பிரதமர் மோடி போன் செய்து, மனு தாக்கல் செய்யும் போது, நீங்கள் இங்கிருக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டாராம். பழனிசாமி தமிழக இல்லத்தில் தங்க, மைத்ரேயன் எம்.பி., வீட்டில், பன்னீர்செல்வம் தங்கினார்.

வியாழன் இரவு, டில்லி வந்த முதல்வர், அன்றே, மத்திய அமைச்சர் அனந்த் குமாரின் வீட்டிற்கு சென்று, கோவிந்தின் மனுவில் கையெழுத்திட்டார். ஆனால், மறுநாள் வெள்ளிக்கிழமை, மைத்ரேயன் வீட்டிற்கே ஆட்களை அனுப்பி, மனுவில், பன்னீர்செல்வம் மற்றும் மைத்ரேயன் கையெழுத்தை வாங்கினார், அனந்த் குமார்.

ராம்நாத் கோவிந்தின் மனு தாக்கல், பார்லிமென்டில், லோக்சபா செகரட்ரி ஜெனரல் அறையில் நடைபெற்றது. இங்கு, 42 பேர் தான் உட்கார முடியும் என்பதால், யார், யார் என, ஒரு பட்டியல் பாதுகாப்பு அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டிருந்தது. பழனிசாமி, பன்னீர்செல்வம், துணை சபாநாயகர் தம்பிதுரை, அன்புமணி ராமதாஸ் பெயர்கள் மட்டும் தான், அந்த பட்டியலில் இருந்தன.
பழனிசாமி உள்ளே நுழைந்ததும், அ.தி.மு.க., - எம்.பி.,க் கள் நவநீத கிருஷ்ணன், வேணுகோபால் ஆகியோரோடு, தமிழக சிறப்பு பிரதிநிதி, தளவாய் சுந்தரமும் அறைக்குள் நுழைந்து அமர்ந்தனர்;
பாதுகாவலர்கள் கண்டுகொள்ளவில்லை. இதை பார்த்த உடன், மைத்ரேயனும், பன்னீர்செல்வத்துடன் உள்ளே வந்து விட்டார்; அன்புமணி ராமதாஸ் வரவில்லை. அந்த இடத்தை, மைத்ரேயன் பிடித்து விட்டார். இப்படி பலரும் வந்துவிட, பல முக்கிய தலைவர்கள், அறைக்கு உள்ளே வெளியே நின்று கொண்டிருந்தனர். மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவிற்கு இடம் கிடைக்கவில்லை.

மனு தாக்கல் முடிந்து, பிரதமர் காரில் வரும் போது, காரை நிறுத்தி இறங்கி, பன்னீர்செல்வத்தை பார்த்து, 'வணக்கம்' என, தமிழில் சொல்லி, பன்னீரை அணைத்துக் கொண்டு நலம் விசாரித்தார். ஆனால், பழனிசாமி கோஷ்டியினர் இதை வேறுவிதமாக சொல்கின்றனர்.

பிரதமர் கார் கதவை, மைத்ரேயன் தட்டியதால் தான், பிரதமர் வேறு வழியில்லாமல் இறங்கினார். இப்படி, கார் கதவைத் தட்டி மரியாதை வாங்க வேண்டுமா? என்கிறது, பழனிசாமி குழு. ஆனால், பன்னீர்செல்வம் அணி இதை மறுக்கிறது. எது எப்படியோ... இரு அணிகளும் போட்டி போட்டுக் கொண்டு, டில்லிக்கு காவடி எடுத்துக் கொண்டிருக்கின்றன.

பணம் எங்கே போகிறது?

தமிழகத்தில், ஆட்சி எப்படி நடைபெறுகிறது என்பதை, மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. அத்தோடு, தமிழக அரசியல்வாதிகள், குறிப்பாக, அமைச்சர்கள் என்ன செய்கின்றனர் என்பதையும், உளவுத் துறை கண்காணித்து வருகிறது. முன்பெல்லாம், கட்சிக்கு நிதி என, ஒரு பெரும் தொகையை மேலிடத்திடம் அமைச்சர்கள் கொடுத்து வந்தார்களாம். கட்சியை நடத்த, தேர்தல் செலவுகள் என, இந்த நிதி செலவிடப்பட்டது. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டதாக, உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சசிகலா சிறையில் உள்ளார்; தினகரனுடன், பழனிசாமி ஆட்கள் பேசுவதே கிடையாது. கட்சிக்கு யார் தலைவர்; யார் கட்சியை நடத்துகின்றனர் என்பது குழப்பமாக உள்ளது. இதனால், கட்சி நிதிக்கென்று பணம் தருவது நின்று போயுள்ளதாம். அப்படியானால், பணம் எங்கே போகிறது? யாரிடம் கொடுப்பது எனத் தெரியாமல், எதற்கு வீண் சிரமம் என, சம்பந்தப்பட்டவர்கள், வாங்கும் பணத்தை அவர்கள் வீட்டிற்கே எடுத்துச் செல்கின்றனர் என, சொல்லப்படுகிறது. இதை யாரும் கண்டு கொள்வதில்லையாம்.

காரணம்,- சீனியர் அமைச்சர்கள், தாங்களே முதல்வர் போல செயல்பட ஆரம்பித்து விட்டனர். ஏதோ, தமிழகத்தில் ஆட்சி என, ஒன்று நடக்கிறது என்கின்றனர் அதிகாரிகள்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • vasanth - Jurong west,சிங்கப்பூர்

    Initially I don't like TTV. Eventhough MODI(filled false case party symbol) arrested him he is continuously raising voice against BJP to protect Tamilnadu FARMERS. AMMA is a strong lady after that TTV is a strong leader there is no doubt. TTV only raising voice against MODI. Veera Tamilan TTV vallkka vallkka. TTV speaks english very well 1 Crore muslims and christians are supporting TTV TTV is fighting for the welfare of tamilnadu farmers against BJP thats why BJP is arresting TTV.All tamilnadu farmers are supporting TTV only.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement