Advertisement

முதல்வரின் தூதர்!

முதல்வரின் துாதர்!


முதல்வர் பழனிசாமி சமீபத்தில் பிரதமரை, அவருடைய உறவினர் மாணிக்கத்தோடு சந்தித்தார். ஆனால், இதற்கு முன்பாகவே இந்த சந்திப்பிற்கு தனக்கு நெருக்கமானவர் மூலமாக ஏற்பாடுகளைச் செய்துள்ளார் முதல்வர். இப்போதுதான் இந்த விஷயம் வெளியே தெரிய வந்துள்ளது. முதல்வர் சந்திப்பிற்கு சில நாட்கள் முன், அமைச்சர் தங்கமணி பிரதமரை டில்லியில் சந்தித்துள்ளார்.
தமிழக அரசியல்வாதிகள் பலர் மோடியைச் சந்திக்க நேரம் கேட்டு மாதக் கணக்கில் காத்திருக்க, அமைச்சர் தங்கமணிக்கு மட்டும் உடனே நேரம் ஒதுக்கி வரச் சொல்லியுள்ளார் பிரதமர். 20 நிமிடம் நடந்துள்ளது, பிரதமர் -- தங்கமணி சந்திப்பு. தங்கமணிக்கு ஹிந்தி நன்றாகத் தெரியும் என்றாலும், சில ஆண்டுகளாக, 'டச்' விட்டுப் போயிருப்பதால் ஆங்கிலத்திலேயே பிரதமரிடம் பேசியுள்ளார்.
சில தனிப்பட்ட விஷயங்களை முதல்வர் உங்களிடம் பேச விரும்புகிறார் என மோடியிடம் சொன்னாராம் தங்கமணி. அப்போதே பழனிசாமி, மாணிக்கத்தோடு சந்திப்பு உறுதி செய்யப்பட்டு விட்டதாம். தங்கமணிக்கு அட்வைஸ் கூறிய மோடி, “அம்மா, தமிழகத்தை நல்ல நிலைக்குக் கொண்டு வந்துள்ளார். இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகத்தை உயர்த்தியுள்ளார்… பல அதிரடி திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். அவருடைய கனவுகளை நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்; இரு அணிகளும் ஒன்றாக சேர்ந்தால்தான் நல்லது,” என்றாராம். 'மேடம்' என்று கூட சொல்லாமல், 'அம்மா' என மோடி சொன்னது பழனிசாமி கோஷ்டியை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.அவர் போன இடம் அதோகதி தான்!


சினிமாவும், அரசியலும் பல குருட்டு நம்பிக்கைகளிலேயே ஓடிக்கொண்டிருக்கின்றன. ஒருவர் நடித்த அல்லது இயக்கிய அடுத்தடுத்த படங்கள் ஓடிவிட்டால், அவருக்கு நல்ல ராசி என்பர். அரசியலிலும் ஒருவர் போன இடங்களில் எல்லாம் வெற்றி பெற்றால், அவருடைய ராசிக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆனால், ஒரு தமிழக அரசியல்வாதியைக் கண்டால், அனைத்துக் கட்சியினரும் அஞ்சி ஓடுகின்றனர். காரணம், அவருடைய ராசி அப்படி என்கின்றனர். இந்த விவகாரம் டில்லி வரை பேசப்படுகிறது.
ஆளுங்கட்சியிலிருந்து விலகி, ஒரு கோஷ்டியில் தற்போது உள்ளார் அந்த அரசியல்வாதி. அவரைப் பற்றி அரசியல் வட்டாரங்களில் கிண்டலாக பேசப்படுவது இதுதான். -அவர், முதலில் மூப்பனார் கட்சியில் சேர்ந்தாராம். உடனே மூப்பனார் காலமாகி விட்டார். பின், ஒரு நடிகரின் கட்சியில் சேர்ந்தார். அந்த கட்சி அலங்கோலமானது மட்டுமல்லாமல், கட்சி
தலைவரின் உடல்நிலை மோசமானதாம். பின், அங்கிருந்து அம்மாவிடம் வந்தார். அமைச்சரானார்; ஆனால், அம்மா போய்விட்டார். இப்படி இவர் எங்கு போனாலும் கட்சித் தலைவருக்கு பெரும் ஆபத்து. நல்ல காலம், நடிகர் கட்சியிலிருந்து விலகினார். இல்லையென்றால் நடிகருக்கு என்னாயிருக்கும்? கூடிய சீக்கிரம், இந்த நபர், இன்னொரு நடிகர் ஆரம்பிக்கவிருக்கும் கட்சியில் சேரப் போகிறாராம். அவருக்கு என்னாகுமோ என இந்த அரசியல்வாதியைப் பற்றி விமர்சிக்கின்றனர்
ஆளுங்கட்சியினர்.அத்தோடு, இப்போது இருக்கும் இடத்தை விட்டு விரைவில் போனால் தான், அந்த கோஷ்டித் தலைவர் உருப்படுவார். அத்தோடு இணைப்பும் விரைவில் நடக்கும் என, கோஷ்டியில் உள்ளவர்களே கூறி வருகின்றனர்.இன்னொரு சுவாரஸ்யமான தகவலும் சொல்லப்படுகிறது. இவர் அமைச்சராக இருந்த போது, ஒரு கோவிலுக்குச் சென்றாராம். அங்குள்ள யானை, இவருக்கு மாலை போட்டதாம். அடுத்த சில நாட்களில், அந்த யானை இறந்து விட்டதாம். இவருடைய ராசி படு டேஞ்சர் என சொல்லி சிரிக்கின்றனர் ஆளுங்கட்சி அரசியல்வாதிகள்! ஆமை புகுந்த வீடும்; அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்பர். இது இவருக்கும்
பொருந்தும் என்கின்றனர்.

சின்னம்மா சொன்னாங்க!


சமீபத்தில், தமிழக அமைச்சர்கள் தங்கமணி, சண்முகம் உட்பட முக்கிய, அ.தி.மு.க., பிரமுகர்கள், டில்லியில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியைச் சந்தித்தனர். மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும் இந்த சந்திப்பில் இருந்தார்.
தமிழக அரசுக்கு மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய, 17 ஆயிரம் கோடி ரூபாயை, விரைவில் தரும்படி இவர்கள் நிதி அமைச்சரிடம் வேண்டிக் கொண்டனர். 'விரைவில் தமிழகத்திற்கு நிதி அளிக்கப்படும்' என, உறுதி அளித்தாராம் ஜெட்லி.இந்த பேச்சு முடிந்ததும், அமைச்சர்களும் மற்றவர்களும் வெளியேற, தம்பிதுரை மட்டும், 'உங்களோடு கொஞ்சம் தனியாகப் பேச வேண்டும்' என ஜெட்லியிடம் சொன்னாரம். இருவரும் தனி அறையில் சென்றதும் தம்பிதுரை சொன்னாராம்... 'தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் மீது போட்டுள்ள வருமான வரித்துறை வழக்கை பார்த்துக் கொள்ளுங்கள்; அவருக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் எந்த பிரச்னையும் வரக் கூடாது; இந்த விவகாரம் அதிகாரிகள் மீதும் பாயாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த வழக்கு பெரிதானால் ஆட்சிக்கு பிரச்னை; மேலும், சி.பி.ஐ., மூலமாக தமிழக அரசுக்கு எந்த பிரச்னையும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதை நான் சொல்லவில்லை, சின்னம்மா உங்களிடம் சொல்லச் சொன்னார்கள்' என, ஜெட்லியிடம் தெரிவித்தாராம்.
அமைதியாகக் கேட்டுக் கொண்ட நிதி அமைச்சர், 'ஆகட்டும் பார்க்கலாம்' என, காமராஜ் சொல்வது போல வெறும் தலையை மட்டும் ஆட்டினாராம். இதனால் தான் பரபரப்போடு துவங்கிய வழக்குகள், இப்போது அமைதியாகி விட்டனவா என கேட்டால், 'பிரதமர் மோடி, எப்போதும் எந்த வழக்கிலும் தலையிட மாட்டார்; ஜெட்லி என்ன செய்ய முடியும்' என, கேள்வி எழுப்புகின்றனர் சீனியர் பா.ஜ., தலைவர்கள்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement