Advertisement

முதல்வர் பயணத்தில் நடந்த கூத்து!

தமிழக முதல்வர் பழனிசாமி, டில்லியில் பிரதமரைச்சந்தித்தார். அப்போது, அவரது சகலை மாணிக்கத்தைமட்டுமே உடன் அழைத்துச் சென்றிருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.ஆனால், மாணிக்கம் விவகாரம், பிரதமர் அலுவலகத்தை பரபரப்பாக்கி விட்டது; மோடியைச் சந்திக்க, முதல்வர் நேரம் கேட்ட போது, அவருடன் மாணிக்கம்என்பவரும் வருவார் என முதல்வர் தரப்பிலிருந்து,பிரதமர் அலுவலகத்திற்குச் சொல்லப்பட்டது.
'முதல்வரும், மாணிக்கம் மட்டுமே பிரதமரைச் சந்திப்பர்; வேறு யாரும் உடன் வர மாட்டார்கள்' என்ற தகவல் தமிழக அரசிடமிருந்து வந்ததும், பிரதமர் அலுவலகம் ஆச்சரியத்தில் ஆழ்ந்தது. உடனே களத்தில் இறங்கிய பிரதமர் அலுவலகம், இந்த மாணிக்கம் யார் என விசாரணையைத் துவக்கியது.
சில அதிகாரிகள், மூத்த பத்திரிகையாளர்களிடம், மாணிக்கம் தொடர்பாக விசாரித்ததால், இந்த விவகாரம் வெளியே தெரியவந்தது.தமிழக தலைமைச் செயலர் கூட இந்த சந்திப்பின் போது இல்லை என கூறப்படுகிறது. பிரதமரைச்சந்திக்க, முதல்வர் சென்றபோது, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனும் உடன் சென்றார்.

ஆனால், முதல்வர்,- பிரதமரை சந்தித்த போது,தலைமைச் செயலர் இல்லை; வரவேற்பு அறையில்தான் அமர்ந்திருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. பிரதமர் - முதல்வர் சந்திப்பு, 40 நிமிடங்கள் நடந்தது.எந்த மாநில முதல்வரை சந்தித்தாலும், உடனடியாக அது தொடர்பான தகவல்களை டுவிட்டரில் வெளியிடுவது,பிரதமரின் வழக்கம்.ஆனால், தமிழக முதல்வர் சந்திப்பு குறித்து பிரதமர்,டுவிட்டரில் தகவல் எதுவும் வெளியிடவில்லை.

மற்றொரு சுவாரஸ்யமான விஷயமும் நடந்தது.இப்படிப்பட்ட சந்திப்புகளை வீடியோ எடுக்க
துார்தர்ஷனுக்கும், ஏ.என்.ஐ., செய்தி நிறுவனத்துக்கும் அனுமதி உண்டு. ஆனால், இந்த சந்திப்பின் போது வீடியோவும் எடுக்கப்படவில்லை. முதல்வர், பிரதமரை எப்போது சந்தித்தாலும், அவர், அளித்த கோரிக்கை மனு, பத்திரிகையாளர்களுக்கு தரப்படும்; ஆனால், இந்த முறை அப்படி எதுவுமே தரப்படவில்லை.

இதனால், 'இந்த சந்திப்பு முழுவதுமே அரசியல் மற்றும் தனிப்பட்ட சந்திப்பு தான்' என, பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மேலும், தமிழக அமைச்சர் மற்றும் அதிகாரிகள்
வீடுகளில் நடந்த சோதனை குறித்தும், முதல்வர்,பிரதமரிடம் பேசினாராம். இதைப் பற்றி ஒரு அதிகாரி கூறியபோது, '-சந்திப்பில் நடந்தது சாஷ்டாங்க நமஸ்காரம் தான்' என்றார்.

இணைப்புக்கு எதிர்ப்பு யார்?
'விரைவில் பேச்சு நடக்கும்' என, தினமும், அ.தி.மு.க.,வின் இரு அணியினரும் கூறி வந்தாலும், இந்த இணைப்பு நடப்பது பெரும் சந்தேகம் தான் என்கிறது, அரசியல் வட்டாரங்கள். - முதல்வர் பழனிசாமி, பிரதமரைசந்தித்தபோது, இது குறித்து விவாதிக்கப்பட்டதாகதெரிகிறது.

'இரு அணிகளும் இணைந்தால் தான் உங்களுக்குநல்லது' என, பிரதமர் கறாராக சொல்லி விட்டாராம். ஆனால், இரு அணியிலும் உள்ள சிலர், இந்த இணைப்பு நடந்தால் தாங்கள் ஓரங்கட்டப்பட்டு விடுவோம் என்பதால், இணைப்பைத் தடுத்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
'பன்னீர் அணியில் தடை போடுபவர் மைத்ரேயன்' என, பழனிசாமி அணியின் மூத்த அமைச்சர்கள் கை காட்டுகின்றனர்; 'இவருக்கும், தம்பிதுரைக்கும் ஆகாது; இணைந்தால், தம்பிதுரை கை ஓங்கிவிடுமென மைத்ரேயன் நினைக்கிறார்' என்கிறது, எதிர்தரப்பு.

'பழனிசாமி அணியில் உள்ள சில அமைச்சர்கள் மற்றும் டில்லியில் தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் இணைப்பை எதிர்க்கின்றனர்' என்கிறது, பன்னீர் தரப்பு.இதில் மற்றொரு கூத்து என்னவென்றால், தளவாய் சுந்தரத்தைப் பார்த்து, தமிழக அமைச்சர்களே பயப்படுகின்றனர். தினகரனுக்கும், சசிக்கும் மிகவும் நெருக்கமானவர் தளவாய்.'இங்கு நடப்பதையெல்லாம் அங்கு போய் சொல்பவர்; அதனால் அவர் இருக்கும் போது வாய் மூடி மவுனமாக இருப்பதே நல்லது; இல்லையென்றால் பதவிக்கு ஆபத்து என்கின்றனர்' என, மூத்த அமைச்சர்கள்.

'இரு அணிகளும் இணைய வேண்டுமென பிரதமர் கூறுகிறாரே' என, தமிழக விவகாரம் தெரிந்த, ஒரு மத்திய அமைச்சரிடம் கேட்டபோது, 'ஜனாதிபதி தேர்தல் மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல்களில் எங்களுக்கு ஆதரவாக ஓட்டளிக்கட்டும்; பின் எக்கேடு கெட்டுப் போனால் எங்களுக்கு என்ன' என, வெறுத்துப் போய் சொல்கிறார் அந்த அமைச்சர்; காரணம், இணைப்பு சாத்தியமில்லைஎன்பதால் தான்!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

    தமிழகத்தின் உயர்ந்த அதிகாரியை வரவேற்பு அறையில் காக்க வைத்துவிட்டு முதலமைச்சராகிய மக்கள் பிரதிநிதி பிரதமரை சந்தித்து பேசியது அநாகரிகம் . அரசியல் பேசவேண்டும் என்றால் 2 கட்சித்தலைவர்கள் பேசிக் கொள்ளலாம் ....மக்கள் பிரச்சனைகளை தீர்க்க தான் பிரதமரும் முதல்வரும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறீர்கள். அரசு வரும்படியும் உங்களுக்கு வருகிறது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement