Advertisement

நடிப்பு தான் எல்லாம் - உருகும் கீர்த்தி குமார்

சின்ன, சின்ன கேரக்டர் கிடைத்தாலும் தன் நடிப்பால் அனைவரையும் கவர்ந்து, தற்போது 'டிவி' சீரியலில் வில்லத்தனத்தால் மிரட்டிக் கொண்டிருப்பவர் கீர்த்தி குமார். இவர் நடித்த கேரக்டர்கள் சிறியவை என்றாலும், நடிப்பில் காட்டிய அர்ப்பணிப்பால், பெரிய விபத்திற்கு பிறகும் மீண்டு(ம்) வந்து தமிழ் சீரியலில் தனக்கான இடத்தைப் பிடித்துள்ளார். அவர் நமக்காக மனம் திறந்தவை...

“பிறந்தது மதுரை. சின்ன வயசுலேயே சேலத்திற்கு குடும்பத்துடன் சென்று விட்டோம்.
கல்லுாரியில் படித்தபோது நடனத்தில் கலக்குவேன். அதற்காக ஒரு 'குரூப்' துவங்கினேன். பின் எம்.எஸ்.டபிள்யூ., படிக்க சென்னை சென்றேன். இதில் வகுப்புகள் குறைவு. கிராமங்களில் சமூகப் பணிகள் செய்வது தான் அதிகம். மது, புகைப்பழக்கம், சாலை விபத்துகள் குறித்த விழிப்புணர்வு நாடகங்கள் நடத்துவோம். அப்போதுதான் நடனத்தில் இருந்து நடிப்பிற்கு மாறினேன்.
வீதிகளில் மக்கள் எங்கள் நடிப்பை வியந்து பார்த்த போது தான் நடிப்பின் அருமை புரிந்தது. அப்போதே இனி நடிப்புதான் எல்லாம் என முடிவு செய்து விட்டேன்.
குறும்படங்கள் எடுத்தோம். அதைப் பார்த்த சீரியல் நடிகர் ராதாகிருஷ்ணன், எங்களைப் பாராட்ட வீட்டிற்கு அழைத்தார். அவர் மூலம் சீரியலில் நடக்க வாய்ப்பு கிடைத்தது. வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணத்தில் பயணித்த போது, சென்னை ஈ.சி.ஆர்., சாலையில் பைக் விபத்து ஏற்பட்டது. முகத்தில் பலத்த அடி. அதனால் நடிப்பை தொடர முடியவில்லை.
6 மாதங்கள் படுத்த படுக்கையாக கிடந்ததால், 15 கிலோ எடை கூடிவிட்டேன். பொருளாதார சிக்கலும் ஏற்பட்டது. எடையை குறைத்து தனியார் கம்பெனியில் எச்.ஆர் பணிக்கு சென்றேன். மீண்டும் சீரியல்களில் சிறு கேரக்டர் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. பல போராட்டங்களுக்கு பிறகு தற்போது முக்கிய வில்லன் கேரக்டரில் நடித்து கொண்டிருக்கின்றேன்.
சினிமா முயற்சிகளும் தொடர்கிறது. அதர்வா நடிக்கும் 'ஒத்தைக்கு ஒத்தை' படத்தில் அவரின் நண்பராக நடித்துள்ளேன். ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்றில்லாமல், எனது நடிப்பு ஆர்வத்திற்கு தீனி போடும் எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க தயாராக உள்ளேன்.
இவரை வாழ்த்த 99446 18513.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement