Advertisement

அழகுக்கு காரணம் அம்மா - நடிகை ஷிவதா

தமிழ் ரசிகர்களை வசியப்படுத்தும் 'ரம்'யமான கேரளத்து வரவு; காந்தக் கண்களில் கந்தகப் பார்வை; அபிநயம் காட்டும் அற்புத முகம்; அணிவகுப்பில் அழகு காட்டும் அரபுக்குதிரை என திரைப்படங்களில் பவ்யம்காட்டி, 'அதே கண்கள்' திரைப்படத்தில் அப்பாவி'யென்றும், 'அடிப்பாவி'யென்றும் சொல்லும் வண்ணம் நடித்து 'அப்ளாஸ்' வாங்கியவர்; தமிழ், மலையாளத்தில் பத்து படங்களை படபட வென நடித்துவிட்டார், நடிகை ஷிவதா. நியூசிலாந்து படப்பிடிப்பில் இருந்த அவர் அன்னையர் தின ஸ்பெஷலுக்காக நம்முடன் பேசியது:
* பிறந்து வளர்ந்தது?
திருச்சியில் பிறந்தேன். சென்னையில் வளர்ந்து ஐந்தாவது வரை படித்தேன். பின் கேரளாவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தேன். சினிமா வாய்ப்பால் வேறு வேலைக்கு செல்லவில்லை.
* வெள்ளித்திரையில் எப்படி?
கேரள 'டிவி' தொடர்களில் தொகுப்பாளினியாக பணியாற்றியபோது, நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தது. பாசில் இயக்கிய, 'லிவிங் டு கெதர்'-ல் நடித்தேன். பத்து இயக்குனர்கள் இயக்கிய 'கேரள கபே' வில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் மம்முட்டி கூட நடித்தது திரைத்துறையில் நுழைய வாய்ப்பாக இருந்தது.
* உங்கள் அம்மா...?
அம்மா கவுரி. ஆனால் 'குமாரி'ன்னுதான் அவரை கூப்பிடுவோம்.
* அவருக்கு நீங்க செல்லமா?
இருக்காதா பின்னே... போட்டிகளில் நான் பரிசு வாங்காவிட்டால் சங்கடப்படுவேன் எனத் தெரிந்து, எதையாவது பரிசா தருவாங்கன்னா பார்த்துக்கோங்களேன். அவர்களாகவே பரிசு வாங்கி வந்து, 'டீச்சர் கொடுக்கச் சொன்னாங்க' என்று கொடுப்பார்.
* ஷூட்டிங்கில் அம்மா எப்படி?
எப்போதுமே எனக்கு தோழி. படப்பிடிப்புகள், வெளியூர் சென்றாலும் பயணத் தோழியும் என்னோட குமாரி தான். அன்னையர் தினத்தில் குமாரியை பாராட்ட வார்த்தைகளே இல்லை.
* குடும்பத்தில் யாரை பிடிக்கும்...?
அம்மா- அப்பா, அக்கா - மாமா, குழந்தை, எனது கணவர், அவரது குடும்பம் என, எல்லோருமே இன்ஜினியரிங் துறையில் இருக்காங்க. திரைக்கு வரலேன்னா நானும் அப்படித்தான்.
* நடிப்பதில் அம்மாவின் உதவி?
'ஸீரோ' படம் முடிவடையும் நேரம், இசை அமைப்பாளர்கள் நிவாஸ் பிரசன்னா, சந்தோஷ் 'அதே கண்கள்' 'வசுந்தரா' கதாபாத்திரம் கதையை கேட்க சொன்னார்கள். 'நெகட்டிவ்' கதாபாத்திரம் எனக்கு பயமா இருந்துச்சு. அம்மாதான் நடிக்கச் சொன்னாங்க. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைச்ச பின் அம்மா சந்தோஷப்பட்டாங்க.
* உங்க அழகுக்கும் அம்மாதான் காரணமா?
கரெக்டா சொல்லிட்டீங்க... அம்மா தந்த 'பியூட்டி டிப்ஸ்'தான் இன்றும் செய்கிறேன். அவங்க தந்ததுல, முகத்திற்கு பப்பாளி மாஸ் போடறது, முடிக்கு தேங்காய் பால் மசாஜ் பண்றதுல நல்ல 'ரிசல்ட்' இருக்கு. 'டான்ஸ்' பயிற்சியை விடாம இருப்பதும் அழகுக்கு காரணம். 'கவலைப்படாம இருக்கணும். டயட்னு சொல்லி சாப்பிடாம இருக்கக் கூடாது' என்பதும் அம்மா தந்ததுதான்.
* அடுத்த படம்...?
'இரவா காலம்' படத்தில் எஸ்.ஜே.சூரியாவுடன் நடிக்கிறேன். அனுபவம் வாய்ந்தவர் என்பதால் 'படபட'ன்னு அவர் நடித்து முடித்துவிடுவார். அம்மாவுக்கு அடுத்து அவரிடம்தான் நடிப்பில் நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன்.
இவரை வாழ்த்த shivthatwitter.com ஹலோ சொல்லலாம்.
Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement