Advertisement

போதிய ரயில்கள் இல்லாமல் பயணிகள்...ஏமாற்றம்!நேர அட்டவணையில் மாற்றம் அவசியம்

பொள்ளாச்சி :பொள்ளாச்சிக்கு ரயில் போக்குவரத்தை துவக்குவதில் இழுபறி மற்றும் இயங்கி வந்த ரயில்களை திடீரென ரத்து செய்வது என ரயில்வே நிர்வாகத்தின் நடவடிக்கைகளால், 850 கோடி ரூபாய் செலவிட்டு அமைத்த அகல ரயில்பாதைகளில் தற்போது இரண்டு ரயில்கள் மட்டுமே இயங்கி வருகின்றன.
பொள்ளாச்சியில் இருந்து, பாலக்காடு மற்றும் மதுரை மார்க்கமாக இயங்கி வந்த நான்கு ரயில்களை தென்னக ரயில்வே நிர்வாகம் திடீரென கடந்த வாரம் ரத்து செய்து அறிவித்தது. மறு அறிவிப்பு வெளியிடப்படும் வரை, குறிப்பிட்ட ரயில்கள் இயங்காது. பராமரிப்பு பணிகளுக்கு போதுமான நேரம் கிடைக்காததால், இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக காரணம் கூறப்பட்டுள்ளது. ஆனால் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான ரயில்கள் மட்டுமே இயங்கும் இந்த ரயில்பாதைகளில், பராமரிப்பு பணிகளுக்காக, பெரும்பாலான ரயில்களை ரத்து செய்யப்பட்டுள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பயணிகள் குறைந்த அளவே வருவதால், போதுமான வருமானம் இல்லாமல் ரயில்களை ரத்து செய்துள்ளதாக ரயில்வே வட்டாரங்களில் கூறப்படுகிறது. யார் காரணம்?
பயணிகள் எண்ணிக்கை குறைந்து போனதுக்கும் ரயில்வே நிர்வாகம் தான் காரணம் என்கின்றனர் பயணிகள். கேரளாவில் இருந்து ரயிலில் வரும் பயணிகளுக்கு, பொள்ளாச்சியில் இருந்து பழநி மார்க்கமாக தென்மாவட்டங்களுக்கு செல்ல இணைப்பு ரயில்கள் அளிக்கப்படவில்லை. ரயில்கள் ரத்துக்கு முன்பு, திருவனந்தபுரத்தில் இருந்து பாலக்காடு வழியே வரும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில், காலை, 9:20 மணிக்கு பொள்ளாச்சி வந்து சேரும். பாலக்காடு டவுன் ஸ்டேஷனில் இருந்து புறப்படும் பயணிகள் ரயில், மாலை 6:50 மணிக்கு பொள்ளாச்சி வந்தடையும். பாலக்காடு மார்க்கமாக இயக்கப்படும் திருச்சி- பொள்ளாச்சி பயணிகள் ரயில், இரவு 10:10 மணிக்கு பொள்ளாச்சி வரும்.
இதே போல் பொள்ளாச்சியில் இருந்து பழநி மார்க்கமாக செல்லும் திருச்செந்துார் பயணிகள் ரயில், காலை 6:15 மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து புறப்படும். பொள்ளாச்சி- மதுரை பயணிகள் ரயில், பிற்பகல் 3:15 மணிக்கு புறப்படும். பொள்ளாச்சி- சென்னை எக்ஸ்பிரஸ் ரயில், மாலை 4:45 மணிக்கு புறப்படும். இது தான் அகல ரயில்பாதை பயன்பாட்டுக்கு வந்த பிறகு பின்பற்றப்பட்ட ரயில்களின் நேர அட்டவணையாகும். காத்திருந்து... காத்திருந்து...இதன்படி, பாலக்காட்டில் இருந்து ரயிலில் பொள்ளாச்சி வழியே பழநி செல்ல நினைத்து, காலை 9:20 மணிக்கு பொள்ளாச்சி வந்தால், பிற்பகல் 3:15 மணிக்கு தான் ரயில் கிடைக்கும். அது வரை காத்திருக்க வேண்டும்.
அடுத்த ரயில்களில், மாலை 6:50 மணிக்கோ, இரவு 10:10 மணிக்கோ பொள்ளாச்சி வந்து சேர்ந்தால், அடுத்த நாள் காலை 6:15 மணிக்கு தான் ரயில் கிடைக்கும். இப்படி நாட்கணக்கில் காத்திருந்து பயணிக்க வேண்டிய அவசியம் பயணிகளுக்கு இல்லை என்பதால், அவர்கள் பஸ்களில் சென்று விடுகின்றனர். இது தான் பயணிகள் எண்ணிக்கை குறைய காரணமாகும். இது போன்ற இணைப்பு ரயில்கள், பயணிகள் வசதி குறித்து துளியும் அக்கறையில்லாமல், சம்மந்தமில்லாத நேர அட்டவணையை அமைத்திருந்தது ரயில்வே நிர்வாகம். இதன் படி தான் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக ரயில்கள் இயங்கியும் வந்தன.இப்படி தவறை தன் பேரில் வைத்துள்ள ரயில்வே நிர்வாகம், அதை மாற்றிக் கொள்ள முன்வருவதற்கு பதில், ஏதோ ஒரு காரணத்தை கூறி, ரயில்களை ரத்து செய்துள்ளது, பாலக்காடு, பொள்ளாச்சி பகுதி பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பரிந்துரைகள் என்னாச்சு? பொள்ளாச்சி- போத்தனுார் அகல ரயில்பாதை பணிகள் முடிவடைந்து, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ரயிலை இயக்க பரிந்துரை செய்தும், இரண்டு மாதங்களாக ரயில் போக்குவரத்து துவக்கப்படும் தேதி அறிவிக்கப்படாமல் இழுபறியில் உள்ளது. இப்படி, 850 கோடி ரூபாய் மக்கள் பணத்தை செலவிட்டு அகல ரயில்பாதை அமைத்து விட்டு, ரயில் போக்குவரத்தை துவக்காமலும், இயங்கும் ரயில்களை ரத்து செய்தும், ரயில்வே நிர்வாகம் ஈடுபடும் நடவடிக்கைகள், யாரும் புரிந்து கொள்ள முடியாததாக உள்ளது.
இப்படிப்பட்ட நடவடிக்கைகளால், தற்போது பாலக்காடு- பொள்ளாச்சி- திண்டுக்கல் மார்க்கத்தில் திருச்செந்துார் பயணிகள் ரயில் மற்றும் பொள்ளாச்சி- சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் என இரண்டு ரயில்கள் மட்டுமே இந்த ரயில் பாதைகளில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • g.s,rajan - chennai ,இந்தியா

    All around Tamilnaadu the railway timings are not Sui to the passengers and also erratic timings lead to poor patronage of trains complete survey of timings and frequency of trains and connectivity of trains and it's railway stations plays a major role in train collections. G.s.rajan Chennai.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement