Advertisement

இ-சேவை மையங்களில் சான்றிதழுக்காக கால்கடுக்க காத்திருப்பு!ஆன்லைன் நெட்ஒர்க் பிரச்னையால் சிக்கல்

கோவை:பள்ளி மற்றும் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையின் போது, சமர்பிக்க வேண்டிய ஜாதி, வருவாய், இருப்பிடம், பூர்வீகம், முதல்பட்டதாரி உள்ளிட்ட சான்றிதழ்கள் பெற, அரசு பொது இ-சேவை மையங்களில், பெற்றோரும், மாணவர்களும் கால்கடுக்க காத்திருக்க வேண்டியுள்ளது.
ஏழு நாட்களுக்குள்... கோவை மாவட்ட நிர்வாகம், கோவையிலுள்ள பத்து தாலுகாக்களில் ஆன்லைன் முறையில், சான்றிதழ்கள் பெறும் வசதியை கடந்த ஓராண்டுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. சுமார், 200 அரசு பொது இ-சேவை மையங்கள், மாவட்டம் முழுவதும் செயல்படுகின்றன.இ-சேவை மையம்வாயிலாக, வருவாய், ஜாதி, இருப்பிட சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்ட பெண் சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், திருமண நிதி உதவி திட்டம், கலப்பு திருமண சான்று, விதவையர் மகள் திருமண நிதி உதவி திட்டம், விதவை மறுமண நிதி உதவி திட்டம், ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டத்துக்கான சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்கள் உண்மை சான்றிதழ்களுடன், பொது இ-சேவை மையத்துக்கு சென்றால், அங்குள்ள பணியாளர்கள் சான்றிதழ்களை, 'ஸ்கேனிங்' செய்து, விண்ணப்பத்தை கம்ப்யூட்டரில் பூர்த்தி செய்து, பிரிண்ட் செய்து டோக்கன் வழங்குவர்.
சான்றிதழில் எந்தெந்த அதிகாரியின் கையொப்பம் பெற வேண்டுமோ அவர்களுக்கு, கம்ப்யூட்டர் வாயிலாக, ஆன்லைனில் விண்ணப்பத்தை அனுப்பி, பரிந்துரை பெறப்படும். அதன்பின், தலைமை இடத்துத் துணை தாசில்தார் கையெழுத்திட்ட சான்றிதழ் தயாரானதும்,ஏழு நாட்களுக்குள் விண்ணப்பதாரரின் மொபைலுக்கு 'எஸ்.எம்.எஸ்' அனுப்பப்படும்.விண்ணப்பதாரரிடம் கையெழுத்து பெற்றுக்கொண்டு, சான்றிதழ் ஒப்படைக்கப்படும். இச்சேவைக்காக, ஒவ்வொரு இ-சேவை மையத்திலும், 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஒரு நாளைக்கு 50 சான்று...பெரும்பாலான நேரங்களில் ஆன்லைனில் நெட்ஒர்க் பழுது ஏற்படுவதும், போதுமான பணியாளர்கள் இல்லாததாலும், சான்றிதழ் பெற, ஒவ்வொரு இ- சேவை மையத்துக்கும் மக்கள் அலைவதும், கால்கடுக்க காத்திருப்பதும் தவிர்க்க முடியாததாகிவிட்டது.மக்கள் எளிதாகவும், விரைவாகவும், சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் தற்போது மக்கள், அரசின் பொது இ- சேவை மையங்களில், அதிகாலை முதல் கால்கள் கடுக்க காத்திருப்பது தொடர்கிறது.துவக்கத்தில் நாளொன்றுக்கு, 50 சான்றிதழ்கள் வரை ஆன்லைன் முறையில் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. ஆனால் அறிவித்ததைப் போல், சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை.மிகவும் குறைந்த எண்ணிக்கையில், 20 சான்றிதழ்கள் மட்டுமே, நாள் ஒன்றுக்கு வழங்கப்படுகிறது.
ஆனால் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், பொது இ-சேவை மையத்தில், பான் கார்டு மின்கட்டணம், எல்.ஐ.சி., சந்தா தொகை செலுத்தலாம். ஆதார் அட்டை பெறுவதற்கு ஒப்புகை சீட்டு இருந்தால், அதை பயன்படுத்தி ஆதார் அட்டை பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம். வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்து கொள்ளவும், பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம் எனக் கூறி வருகிறது.
மேலும் கோவை மாவட்டத்தில் பத்து தாலுகாக்களிலும் இம்மையம் சிறப்பாக செயல்படுவதாக அறிவிக்கவும் படுகிறது. ஆனால் இத்திட்டம் பத்து தாலுகாக்களிலும் மிகக் காலதாமதமாகவே செயல்படுகிறது.
20 பேருக்கு மட்டும்
தற்போது பள்ளி மற்றும் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை துவங்கிய நிலையில், ஜாதி, வருவாய், இருப்பிடம், பூர்வீகம், முதல்பட்டதாரி சான்றிதழ்கள் பெற பெற்றோரும், மாணவர்களும் தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், கூட்டுறவு வங்கி மற்றும் கடன் சங்கங்களில் செயல்படும் அரசு பொது இ-சேவை மையங்களை நாடி வருகின்றனர்.
காலை நேரத்தில் முதலில் வரும், 20 நபர்களுக்கு மட்டுமே, ஆன்லைனில் விண்ணப்பிக்கின்றனர். அதற்குப்பின் வரும் விண்ணப்பங்களை ஏற்க மறுக்கின்றனர். இதனால் இ-சேவை மையங்களின் முன்பு, அதிகாலை முதலே பெற்றோர் கால்கடுக்கக் காத்திருப்பதைக் காண முடிகிறது. 20 பேருக்கு பதிவு செய்த பின், மற்றவர்களை மையங்களின் முன் நிற்க வேண்டாம் என, அங்குள்ள ஊழியர்கள் விரட்டியடிக்கின்றனர். இதனால், பெரும்பாலான இ-சேவை மையங்கள் காலை, 11:30 மேல் வெறிச்சோடி விடுகின்றன.
இதனால் பலரும் பள்ளி மற்றும் கல்லுாரிகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கு, சான்றிதழ் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.இந்நிலை நீடிக்கக்கூடாது; உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சர்வரும் பழுது!
இதுகுறித்து கலெக்டர் ஹரிஹரன் கூறியதாவது:கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் சர்வர் பிரச்னையால், கடந்த சில நாட்களுக்கு முன்பு சான்றிதழ் வழங்குவதில் தொய்வு இருந்தது. சென்னையிலுள்ள தொழில்நுட்ப வல்லுனர்கள் வரவழைத்து சரிசெய்யப்பட்டது. தற்போது வேகமாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.குறிப்பாக, கிராமநிர்வாக அலுவலர், வருவாய்ஆய்வாளர், தலைமைஇடத்து துணை தாசில்தார்களை தாலுகா அலுவலகங்களுக்கே வரவழைத்து உடனியாக சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
இது பள்ளி கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்ப்பதற்கான காலம், அதனால் உடனுக்குடன் சான்றிதழ்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இடைவேளை நேரங்களில் பணிகளில் தொய்வு ஏற்படாமல் இருக்க கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குறைபாடு இருந்தாலோ காலதாமதம் ஏற்பட்டாலோ என்னிடம் புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement