Advertisement

ஆக்கிரமிப்பு கடைகளால் சுற்றுலாவிற்கு...இடையூறு!அதிகரிக்கும் முன் தடுக்க வலியுறுத்தல்

மாமல்லபுரம்:மாமல்லபுரம், குடைவரை மண்டப தொல்லியல் பகுதியில், சுற்றுலாவிற்கு இடையூறாக, கடைகள் ஆக்கிரமித்து, அதிகரித்து வருகின்றன. இதனால், சுற்றுலா வரும் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணியர் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
பல்லவர்கால சிற்பக்கலை இடமாக, மாமல்ல புரம் விளங்குகிறது. இங்குள்ள பாறைச்சிற்ப சின்னங்கள், சர்வதேச பாரம்பரிய கலைச்சின்னமாக புகழ்பெற்றது. கற்கோவில் கட்டுமான கடற்கரைக்கோவில்; ஒரே பாறையின், தனித்தனி ரதங்களான ஐந்து ரதங்கள்; பாறை விளிம்பு புடைப்பான அர்ச்சுணன் தபசு; பாறை உட்புற குடைவரையான கிருஷ்ண மண்டபம் உள்ளிட்ட மண்டபங்கள் என, உலகில், வெவ்வேறு வகை சிற்பங்கள், இங்கு மட்டுமே, ஒரே இடத்தில் அமைந்த சிறப்பிற்குரியது. 32 பாரம்பரிய சின்னங்கள், பெரியதும், சிறியதுமாக இங்கு அமைந்து, 60 ஆண்டுகளுக்கு முன், மத்திய பொதுப்பணித்துறையின் கீழ் பராமரிக்கப் பட்டது. வருகை குறைவுதொல்லியல் துறை உருவானதும், 1958 முதல், இத்துறை பராமரித்து, பாதுகாக்கிறது. இதற்கான அலுவலகமும், இங்கு இயங்குகிறது.சுற்றுலா மேம்பாடற்ற, 30 ஆண்டு களுக்கு முன், பயணியர் வருகை மிகவும் குறைவு. கலைச்சின்ன தொல்லியல் பகுதி களிலும், கடை ஆக்கிரமிப்பு பிரச்னை இல்லை. தொல்லியல் பகுதியில் இருந்து, சற்று தொலைவில், சில கடைகளே இருந்தன. கடை ஆக்கிரமிப்பு ஏற்பட்டால், உடனே அகற்றப்படும். தற்போதோ, நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. சுற்றுலா மேம்பட்டு, பயணியர் குவிகின்றனர். சுற்றுலாப் பகுதி சாலைகளான, கடற்கரை சாலை; மேற்கு ராஜ வீதி; கலங்கரைவிளக்கப்பகுதி; ஐந்து ரத வீதி ஆகிய இடங்களில், சாலைகளை ஆக்கிரமித்து, கைவினைப்பொருட்கள், குளிர்பானங்கள், சிற்றுண்டி என, ஏராளமான கடைகள் உருவாகி, தற்போது அதிகரித்து வருகின்றன.
இத்தகைய கடைகளால், சுற்றுலாப் பயணியருக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டும், அரசியல் தலையீடுகளால், இவற்றை அகற்ற, பேரூராட்சி நிர்வாகமும் தயங்குகிறது. இச்சூழலில், உச்சமாக, தொல்லியல் பகுதி கலைச்சின்ன வளாகத்திற்குள்ளும், தற்போது கடைகள் ஆக்கிரமித்து, அதிகரித்தும் வருகின்றன.மர்ம கும்பல்வராகர், திருமூர்த்தி, மகிஷாசுரமர்த்தினி உள்ளிட்ட குடைவரை மண்டபங்கள், ராமானுஜர் கோபுரம் என அமைந்துள்ள, பாறைக்குன்று தொல்லியல் பகுதியில், ஆக்கிரமிப்பு கடைகள் ஏற்பட்டு வருகின்றன. இவை, மண்டப பகுதி, பாதை என ஆக்கிரமித்து, சுற்றுலாப் பயணியருக்கு இடையூறு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் குடிநீர் காலி பாட்டில், பாக்கெட்டு, இளநீர், நுங்கு மட்டை என, குப்பை குவிந்து,
சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. வியாபாரிகள் போர்வையில் திரியும் மர்மகும்பல், பயணியரிடம் நகை, பணம் பறிப்பதும் நடக்கிறது.இக்கடைகளை அகற்ற முயன்ற, தொல்லியல் துறை ஊழியர்கள் மிரட்டப்படுவதால், நமக்கு ஏன் வம்பு என, அவர்களும் நொந்து கொள்கின்றனர். போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
ஆக்கிரமிப்பு கடைகளை, உடனே அகற்றி, மேலும் உருவாவதை தடுக்காவிட்டால், தொல்லியல் சின்னங்கள் பகுதி, வியாபாரிகளின் கட்டுப்பாட்டிற்கு மாறும். இதை உணர்ந்து, தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
சுற்றுலா பகுதியில், வியாபாரமும் முக்கியம்தான்; அதற்காக, சிறிய இடத்தை கூட விடாமல், கடைகள் ஆக்கிரமிக்கின்றன; பல இடங்கள், வியாபாரிகளின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன; இதேநிலை நீடித்தால், சுற்றுலா நிச்சயம் பாதிக்கப்படும்; அதிகாரிகள் என்ன செய்கின்றனர் என்பதே கேள்விக்குறியாகத்தான் உள்ளது.சுற்றுலா ஆர்வலர்கள், மாமல்லபுரம்மலையில் உள்ள சிற்பங்களுக்கு செல்ல, குறுகிய பாதை தான் உள்ளது; இதிலும், கடைகளே உள்ளன. கடைகளை அகற்றினால்தான், எளிதாக செல்ல முடியும்; சுற்றுலா வந்த இடத்தில், எங்களை கூவி, கூவி அழைத்து, தொந்தரவு செய்கின்றனர்.சுற்றுலாப் பயணியர், மாமல்லபுரம்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement