Load Image
Advertisement

கோவைக்கு உதய் ரயில் வருவது எப்போது : அட்டவணையில் அறிவித்த பிறகும் அல்வா!

கோவை: ஜூலை மாதத்தில், நாடு முழுவதும், 'உதய்' ரயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில், கடந்த ஆண்டில், கோவைக்கு அறிவித்த, 'உதய்' ரயில், இன்று வரை இயக்கப்படவில்லை.
நாடு முழுவதும், ஜூலையில் இருந்து, 'உதய்' என்ற பெயரில், இரண்டடுக்கு ஏ.சி., எக்ஸ்பிரஸ் ரயிலை அறிமுகப்படுத்த, ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இந்த ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும், வசதியான, 120 சாய்வு நாற்காலிகள் பொருத்தப்பட்டிருக்கும். முற்றிலும் ஏ.சி., வசதி உள்ள இந்த ரயிலில், அனைத்து பெட்டிகளிலும், ஸ்பீக்கர் உடன் கூடிய, பெரிய எல்.சி.டி., திரைகள் இருக்கும். தோற்றத்தில் நவீனமாக இருப்பதுடன், பிற ரயில்களை விட, 40 சதவீதம் கூடுதலான சுமை திறன் உள்ள ரயிலாகவும் வடிவமைக்கப்பட்டிருப்பது, இதன் சிறப்பு. பயணிகள், தாங்களாகவே எடுத்துக் கொள்ளும் வகையில், தானியங்கி தேநீர், காபி மற்றும் குளிர் பானங்கள் வழங்கும் இயந்திரமும் இதில் இடம் பெறும். கட்டணம், மூன்று அடுக்கு ஏ.சி., வகுப்பு கட்டணத்தை விட குறைவாக இருக்கும் என, கூறப்பட்டுள்ளது.

'அல்வா' அறிவிப்பு : இதேபோன்ற, 'உதய்' எக்ஸ்பிரஸ் ரயில், கோவையிலிருந்து, கே.ஆர்.எஸ்., பெங்களூரு வரை, திங்கட்கிழமை தவிர, வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படும் என, கடந்த ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இந்த ரயில் இயக்கம் குறித்து, 2016 அக்டோபரில், தெற்கு ரயில்வே வெளியிட்ட கால அட்டவணையிலும் அறிவிப்பு இடம் பெற்றிருந்தது; ஆனால், இன்று வரை இந்த ரயில் இயக்கப்படவில்லை.வண்டி எண்: 22666 ரயில், கோவையிலிருந்து காலை, 5:45 மணிக்கு புறப்பட்டு, மதியம், 12:40 மணிக்கு, பெங்களூருவைச் சென்றடையும். பெங்களூருவில் இருந்து, 22665 என்ற எண்ணுடன், மதியம், 2:15 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், கோவைக்கு இரவு, 9:00 மணிக்கு வரும் என, நேரம் குறிக்கப்பட்டிருந்தது. அட்டவணையிலேயே நேரம் இடம்பெற்று விட்டதால், இந்த ரயில் விரைவில் இயக்கப்படும் என, எல்லாரும் நம்பியிருக்க, ரயில் வந்தபாடில்லை. வழக்கமாக, புதிய ரயில் கால அட்டவணையில், ஒரு ரயில் இயக்கம் குறித்த நேரம் இடம்பெற்று விட்டால், அந்த ஆண்டு இறுதிக்குள், அந்த ரயில் இயக்கப்பட்டு
விடும். ஆனால், கடந்த நிதியாண்டு முடிந்தும், இந்த ரயிலை இயக்குவதற்கான எந்த அறிகுறியும் காணவில்லை. இதற்காக, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பெட்டிகள் வரவில்லை என, சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் காரணம் கூறுகின்றனர். இதே கால கட்டத்தில், சேலம் கோட்டம் வழியாக அறிவிக்கப்பட்ட நான்கு ரயில்களில், கேரளா வழியிலான இரண்டு ரயில்கள், திருச்சி வழியிலான மற்றொரு ரயில், பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. ஆனால், இந்த ரயில் மட்டும் இயக்கப்படாமல், வழக்கம் போல கோவை புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, கோவை - பெங்களூரு இரவு ரயில் கூடுதலாக இயக்கப்படும் என்பதும் வெறும் அறிவிப்பாகவே உள்ளது.தற்போது, கோவையில் இருந்து பெங்களூருக்கு, கோவை - மும்பை இடையிலான லோகமான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயில், எர்ணாகுளம் - பெங்களூரு
இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஆகிய, இரு ரயில்கள் மட்டுமே, பகலில் இயக்கப்படுகின்றன.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து, பெங்களூருக்கு தினமும் பல ஆயிரம் பேர் செல்வதால், இது போதுமானதாக இல்லை. ஐ.டி., நிறுவனங்களில் பணியாற்றுவோர், ஜவுளி துறையைச் சேர்ந்தவர்கள் என, பல ஆயிரம் பேர், அதிக கட்டணம் கொடுத்து, ஆம்னி பஸ்களில் பயணிக்கின்றனர். எனவே, கோவை, திருப்பூர் தொழில் துறையினர், வர்த்தகர்கள், ஐ.டி., துறையினர் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, அறிவிக்கப்பட்ட 'உதய்' ரயிலை உடனடியாக இயக்க, ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


வாசகர் கருத்து (4)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement