Advertisement

 ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் கோப்புகள்... மாயம்! வீட்டுவசதி வாரிய குளறுபடியால் விசாரணை முடக்கம்

வீட்டுவசதி வாரியத்தின், ௧00 கோடி ரூபாய் மதிப்புள்ள மனைகள் விற்பனை மோசடியில், கோப்புகள் மாயமானதால், விசாரணை பாதியில் முடங்கியுள்ளது.

சென்னையில், கே.கே. நகர், அண்ணா நகர், நந்தனம் பெசன்ட் நகர், ஜெ.ஜெ.நகர் என, பல்வேறு கோட்டங்கள் உள்ளன.

முறைகேடு:



இவை, செயல்படுத்தப்படும் திட்டங்களில் வீடு, மனைகளை விற்பனை செய்ய, உரிய வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதன்படி, கோட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டாலும், வாரிய நிர்வாக குழுவின் ஒப்புதல் வழங்கிய பிறகே, சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர், அதற்கான முழு தொகையை செலுத்த அனுமதிக்கப்படுவார். இன் பின், அவர் பெயருக்கு விற்பனை பத்திரம் வழங்கப்படும்.
இந்த நடைமுறைகளுக்கு மாறாக, கே.கே. நகர் கோட்டத்துக்கு உட்பட்ட தாம்பரம் முடிச்சூர், கே.கே. நகர் திட்ட பகுதிகளில், 20க்கும் மேற்பட்ட மனைகள், முறையான ஒதுக்கீடு இன்றி விற்கப்பட்டதாக புகார்கள் வந்தன. வாரிய நிர்வாக இயக்குனர் உத்தரவை அடுத்து நடந்த விசாரணை, பாதியில் முடங்கி உள்ளது.

கிரிமினல் நடவடிக்கை:



இது குறித்து வீட்டுவசதி வாரிய உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: கே.கே.நகர் கோட்டத்துக்கு உட்பட்ட திட்ட பகுதியில், 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள், மோசடியாக விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, தலைமை சர்வேயர், ஒதுக்கீட்டு பிரிவு அதிகாரி உள்ளிட்ட சிலர், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். மோசடி மனை விற்பனை பத்திரப்பதிவு விபரங்களை, விசாரணை குழு திரட்டியது.
கோட்ட அலுவலகத்தில், நிர்வாக ஆவணங்கள் அடங்கிய கோப்புகள் மாயமாகி இருந்தன. புகாரில் தொடர்புடையோர், அவற்றை எடுத்துச் சென்றது, விசாரணையில் தெரிய வந்தது.முக்கிய கோப்புகள் கிடைக்காததால், இந்த வழக்கு அடுத்த கட்டத்துக்கு முன்னேற முடியாமல், முடங்கி உள்ளது. இதில் தொடர்புடையோர் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுக்க, நிர்வாக இயக்குனர் உத்தரவுக்காக காத்திருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement