Advertisement

அரசு மருத்துவமனையில் ரத்த சுத்திகரிப்பு மையம்வரப்பிரசாதம்!மலை மக்கள் இனி கோவைக்கு செல்ல வேண்டாம்

ஊட்டி;ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில், ரத்த சுத்திகரிப்பு மையம் திறக்கப்பட்டதால், மலை மாவட்ட மக்களுக்கு பெரும் பயன் கிடைத்துள்ளது.ஊட்டி அரசு மருத்துவமனையில் நாள் தோறும் சராசரியாக, 250 பேர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். உள் நோயாளிகள் பயன்பெறும் வகையில், அரசு தலைமை மருத்துவமனை, சேட் மருத்துவமனைகளில், 421 படுக்கையறை வசதி உள்ளது. இந்த மருத்துவமனையில், 'சிடி' ஸ்கேன் வசதி உட்பட தனியார் மருத்துமனைகளுக்கு இணையான நவீன வசதிகள் உள்ள தால், அனைத்து தரப்பு மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவதிப்பட்ட சிறுநீரக நோயாளிகள்
இந்நிலையில், இந்த மருத்துவமனையில் ரத்த சுத்திகரிப்பு மையம் இல்லாத காரணத்தால், மாவட்டத்தில் உள்ள ஆறு தாலுகாவை சேர்ந்த நோயாளிகள், ரத்த சுத்திகரிப்புகாக, கோவை மற்றும் கேரள மாநிலத்துக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு வந்தது.
இதனால், அலைச்சல் மற்றும் பணவிரயம் ஏற்பட்டது. வசதி இல்லாதவர்கள் சிகிச்சை எடுக்காமல், இறக்கும் சூழ்நிலைகளும் தொடர்ந்தன. குறிப்பாக, சிறுநீரகம் செயல் இழந்தவர்கள் பலர், 'டாயாலிசிஸ்' செய்ய, இங்குள்ள தனியார் மருத்துவ மனைகளை கூட, நாட முடியாத நிலை இருந்தது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, கடந்த, 20ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
வந்தது ரத்த சுத்திகரிப்பு மையம்
இதையடுத்து, கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு, இந்த மையம் திறக்கப்பட்டது. இதில் பணிபுரிய சிறப்பு டாக்டர் இல்லாததால், இந்த மையம் இதுவரை செயல்படாமல் இருந்தது. இந்நிலையில், ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை டாக்டர்கள், புகழேந்தி, சஞ்ஜீவ் ஆகியோர், இதற்கான சிறப்பு பயிற்சி பெற்று பணியமர்த்தப்பட்டனர்.
இதை அடுத்து, இந்த மையத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. இருப்பிட மருத்துவர் டாக்டர் பாலசுப்ரமணியம், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ரவிக்குமார் ஆகியோர் பங்கேற்று இதனை இயக்கி வைத்தனர். இங்கு, நான்கு இயந்திரங்கள், 63 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டது.
டாக்டர் புகழேந்தி கூறுகையில், ''நீலகிரி மாவட்ட மக்கள், சிறுநீரகம் பாதிக்கப்பட்டால், ரத்த சுத்திகரிப்பு செய்ய (டயாலிசஸ்) செய்ய கோவை உள்ளிட்ட வெளியிடங்களுக்கு சென்று வருவதால், பணம் விரயம், அலைச்சல் போன்றவை ஏற்படுகிறது. இதனால், பல ஏழை நோயாளிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். மலை மாவட்ட மக்களின் நலன் கருதி, ரத்த சுத்திகரிப்பு மையம் திறக்கப்பட்டது. முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை வைத்திருப்போரும் இந்த சிகிச்சையை இலவசமாக செய்து கொள்ளலாம். இந்த மையம், இங்குள்ள மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். மாவட்ட மக்கள் இனி எப்போது வேண்டுமானாலும் இங்கு சிகிச்சை பெறலாம்,'' என்றார்.
டாக்டர் பாலசுப்ரமணி யம் கூறுகையில், ''பொதுமக்களின் நலன் கருதி அரசு தலைமை மருத்துவமனை, சேட் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடம் வசதி ஏற்படுத்த, 2.90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் துவங்கும். இதனால், இம்மாவட்ட மக்களுக்கு பல்வேறு சிகிச்சைகளை அளிக்க முடியும்,'' என்றார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement