Advertisement

டீ கடை பெஞ்ச்

அரசு அலுவலகங்கள் ஸ்தம்பிக்கும் அபாயம்''பட்டம் வாங்குனதுல, கட்சிக்குள்ள புகைச்சல் கிளம்பிடுச்சுங்க...'' என, முதல் ஆளாக அரட்டையை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''யாருக்கு, என்ன பட்டம் கொடுத்தாவ வே...'' என்றார் அண்ணாச்சி.
''தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருவெறும்பூர் தொகுதி, எம்.எல்.ஏ.,வாகவும் இருக்கார்... துபாய்ல இருக்கிற அனைத்துத் தமிழர் கூட்டமைப்பு சார்புல, சமீபத்துல, இவருக்கு பாராட்டு விழா நடத்துனாங்க...
''இதுல, மகேஷுக்கு, 'இளம்புயல்'னு பட்டம் கொடுத்திருக்காங்க... கட்சியில இவரை விட சீனியர்கள், இளைஞர் அணியில இருக்காங்க... ஸ்டாலின் மகன் நடிகர் உதயநிதி கூட, தன் பேருக்கு முன்னாடி பட்டம் எதுவும் போடாம வலம் வர்றாருங்க...
''ஆனா, இவருக்கு மட்டும் பட்டம் எதுக்குன்னு கட்சிக்குள்ள முணுமுணுக்கிறாங்க...'' என, முடித்தார்
அந்தோணிசாமி.''போஸ்டரால மோதல் ஏற்பட்டிருக்கு பா...'' என்றார் அன்வர் பாய்.
''என்ன போஸ்டரு வே...'' என்றார் அண்ணாச்சி.
''தெற்கு ரயில்வேல, தலைமை வர்த்தக மேலாளரா இருந்த அஜித் சக்சேனாவை, எர்ணாகுளம் ரயில்வே தீர்ப்பாய உறுப்பினரா நியமிச்சாங்க... இவர் மேல, சி.பி.ஐ., வழக்கு இருக்கிறதால, உறுப்பினரா பதவி ஏற்கக் கூடாதுன்னு சிலர் வழக்கு போட்டாங்க பா...
''விசாரிச்ச ஐகோர்ட், இவர் பதவியேற்க தடை விதிச்சிடுச்சு... சக்சேனாவுக்கு எதிரானவங்க, 'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்... இறுதியில் தர்மமே வெல்லும்'னு, பல ரயில்வே ஸ்டேஷன்கள்ல, போஸ்டர் அடிச்சு ஒட்டிட்டாங்க பா...
''இதை, சக்சேனா தரப்பு கிழிச்சு எறிஞ்சிட்டு இருக்கு... இதனால, பல இடங்கள்ல, ரெண்டு தரப்புக்கும் தகராறு நடக்குது பா...'' என, முடித்தார்
அன்வர் பாய்.
''அரசாங்கமே ஸ்தம்பிக்க போறது ஓய்...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார் குப்பண்ணா.
''இப்ப மட்டும் என்ன வாழுது வே...'' என்றார் அண்ணாச்சி.
''அது இல்லை ஓய்... 'புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யறது உட்பட, 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வர, 25ம் தேதியில இருந்து, அரசு ஊழியர்கள் காலவரையற்ற 'ஸ்டிரைக்'குல ஈடுபட இருக்காளோல்லியோ...
''இதுக்கான ஆயத்த பணிகள்ல, அரசு ஊழியர் சங்கங்கள் தீவிரமா இருக்கா... போராட்டத்துல, ஆசிரியர் சங்கங்களையும் கலந்துக்க வைக்க, பேச்சு நடந்துண்டு இருக்கு ஓய்...
''ஸ்டிரைக் சம்பந்தமா, தலைமைச்செயலர், முதல்வருக்கு தகவல் தெரிஞ்சும், அவா யாரும், அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகளை கூப்பிட்டு பேசவே இல்லை...
''இதனால, 61 துறைகள்ல இருக்கற, லட்சக்கணக்கான ஊழியர்கள் போராட்டத்துல இறங்கினா, அரசு அலுவலகங்கள் ஸ்தம்பிச்சு போயிடும்... தாலுகா, ஒன்றிய அலுவலகங்கள் மூடப்படும்னு சொல்றா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
கல்லாவில் இருந்து எழுந்து வந்த நாயர், இவர்களுடன் சேர, அரட்டை களைகட்டியது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (3)

  • அம்பை சுதர்சனன் - கொடைக்கானல் ,இந்தியா

    ஆளும் கட்சிக்கு பிடிக்காத சங்கம் என்பதாலும் அதிமுகவை துதி பாடும் என்ஜிஓ சங்கம் மட்டுமே அவர்களுக்கு பிடிக்கும் என்பதாலும் முதல்வரோ அரசோ இந்த போராட்டத்தை ஆதரிக்கவில்லை.

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    நாயர் ஏட்டா, உங்க கடையிலே அரசியல் பேச இந்த நாலு பேறே போதும் நீங்கல்லாம் சேர்ந்தா நாளைக்கு ஆளில்லாக் கடையிலே ஆத்த வேண்டி வந்திடும்

  • sundaram - Kuwait,குவைத்

    ஏனுங்க மகேசு துட்டு கொடுத்தாரு அவருக்கு இளம்புயல் கொடுத்தாங்க. நம்ம தளபதி கூட துட்டு கொடுத்தாரு கென்டக்கியில மருத்துவர் கொடுத்தாங்க. அதுமாதிரி யார் யாருக்கு வேணுமோ அவங்க எல்லாம் முறைப்படி துட்டு கொடுத்தா தரவா மாட்டோம்ன்னு சொல்லிடப்போறாங்க.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement