Advertisement

என்.எச்., ஆகிறது அவிநாசிபாளையம்-ஒட்டன்சத்திரம் ரோடு: விரைவில் அறிவிப்பு: மத்திய, மாநில அரசுகளுக்கு கருத்துரு அனுப்பி வைப்பு

திருப்பூர்:திருப்பூர் - ஒட்டன்சத்திரம் ரோடு, தேசிய நெடுஞ்சாலையாக மாற்றுவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கியுள்ளன; இதற்கான, கருத்துரு மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டள்ளது. இது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகவுள்ளது.
திருப்பூர்- தாராபுரம்- ஒட்டன்சத்திரம் ரோடு, மாநில நெடுஞ்சாலை (எஸ்.எச்.,37) ஆக உள்ளது. பின்னலாடை தொழில் வளர்ச்சி காரணமாக, தென் மாவட்ட மக்கள் அதிகளவு வருகின்றனர். உற்பத்தியாகும் ஆடைகளும், துறைமுகங்களுக்கு சரக்கு வாகனங்கள் மூலம் செல்கிறது. இதனால், சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகம் உள்ள ரோடாக, இது உள்ளது.இதில், அவிநாசி முதல் அவிநாசிபாளையம் வரையிலான, 32.8 கி.மீ.,தூரம் ரோடு, தேசிய நெடுஞ்சாலையாக (என்.எச்.,381) ஆக மாற்றப்பட்டுள்ளது. 167 கோடி ரூபாய் செலவில், தற்போது ரோடு அகலப்படுத்தப்பட்டு வருகிறது. அவிநாசிபாளையம் முதல் ஒட்டன்சத்திரம் வரை, 68.90 கி.மீ.,தூரம் ரோடு, மாநில நெடுஞ்சாலையாகவே உள்ளது.
இரு வழிச்சாலையாக உள்ள இந்த ரோட்டை, நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு, சாலை மேம்பாட்டு திட்டம் பணி நடந்து வருகிறது. ரோடு விரிவாக்கத்துக்கான ஆய்வு, நிலம் எடுப்பு, சர்வே, நில ஆர்ஜித இழப்பீடு தொகை நிர்ணயித்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.இந்நிலையில், அவிநாசிபாளையம் முதல், ஒட்டன்சத்திரம் வரை, மீதமுள்ள ரோட்டையும், தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டு, அதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய, மாநில அரசுகளுக்கு, கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில், தேசிய நெடுஞ்சாலையாக மாற்றி, அறிவிப்பு வெளியாகும் என்று, அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:அவிநாசி- அவிநாசிபாளையம் வரை ரோடு, தேசிய நெடுஞ்சாலையாக உள்ளது. ஒட்டன்சத்திரம் வரை உள்ள ரோட்டையும், இத்துடன் இணைக்க பணி நடந்து வருகிறது. மாநில நெடுஞ்சாலைத்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் கருத்துரு தயாரித்து, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நான்கு மாதத்தில் அறிவிப்பு வெளியாகலாம்.இதன் மூலம், கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலை, கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கோவை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில், அவிநாசிபாளையம் முதல், ஒட்டன்சத்திரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை ரோடு, குறுக்காக இணையும், என்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Navaneetha krishnan - Vedasandur,இந்தியா

    போக்குவரத்து அதிகம் உள்ள ரோடு , கண்டிப்பாக நான்கு வழிச்சாலை வேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement